0 1 min 11 mths

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மிகவும் நெருங்கிவிட்ட காலத்தில் வசிக்கும் நமக்கு, பிசாசின் தந்திரங்கள் குறித்த அறிவு மிகவும் அவசியமாக உள்ளது. ஏனெனில் இந்த காலத்தில் எதிரே இருப்பவர் எந்த மாதிரியான ஆவியை கொண்டிருப்பவர் என்று நம்மால் நிதானிக்க கூட முடியாத வகையில், பிசாசு மிகவும் தந்திரமாக செயல்பட்டு வருகிறான்.

இந்த பிசாசின் தந்திர கிரியைகள் பல தேவாலயங்களில் நடந்தாலும், அவை பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை என்பதே மிகவும் வருந்தத்தக்க செய்தியாகும். தேவனை ஆராதிக்கும் மக்களை ஏமாற்றி வழி தவறி செல்ல செய்து, தன்னோடு நரகத்திற்கு அழைத்து செல்ல, கடைசி காலத்தில் பிசாசு அவ்வளவு தீவிரமாக செயல்படுகிறான்.

அனுபவித்தது:

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை நான் வழக்கமாக செல்லும் தேவாலயத்திற்கு சென்ற போது, ஒரு புதிய சகோதரி ஜெபக் கூட்டத்திற்கு வந்திருந்தார். போதகர் வழக்கம் போல கூட்டத்தை துவங்க, ஆராதனை பகுதியில் எல்லாரும் பரிசுத்தாவியில் நிரம்பி அந்நிய பாஷையில் பேசினார்கள். அப்போது புதியதாக வந்திருந்த அந்த சகோதரியும் அந்நிய பாஷையில் பேசி, தேவனை துதித்தார்.

அவரை குறித்து விசாரித்த போது, அவருக்கு எதிராக பலரும் மந்திரம் செய்வதாகவும், அசுத்தாவியின் போராட்டம் இருப்பதாகவும் தெரிந்தது. அன்று முதல் எங்களின் தேவாலயத்திற்கு தொடர்ந்து வரத் துவங்கிய அந்த சகோதரி, நன்றாக ஆவியில் நிரம்பி துதிப்பதை காண முடிந்தது. அவரை கண்ட பல விசுவாசிகளும், தங்களால் கூட அந்தளவிற்கு ஆவியில் நிரம்ப முடியவில்லையே என்ற ஏக்கமாக பேசுவதையும் கேட்க முடிந்தது.

இந்நிலையில் அந்த சகோதரியின் பேச்சில் அவ்வப்போது, குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான வார்த்தைகள் இருப்பது தெரிந்தது. மேலும் ஒரே காரியத்தை மாற்றி, மாற்றி கூறுவதும், ஒருவரை பற்றி மற்றவர்களிடம் தவறான காரியங்களை தெரிவிப்பதும் என்று அவரின் நடவடிக்கையில் ஒரு வித்தியாசம் தெரிந்தது.

ஒரு நாள், அவரது வீட்டில் அதிக போராட்டம் இருப்பதாக கூறி சபைக்கு வந்த அவர், எல்லாரையும் ஜெபிக்க கேட்டுக் கொண்டார். அப்போது சபை போதகர் குறிப்பிட்ட நாளில் உபவாசம் நியமித்து ஜெபிப்போம் என்று கூறினார். சபை விசுவாசிகளும் அதற்கு ஏற்றுக் கொண்டனர். ஆனால் அந்த சகோதரி, அதற்கு சாக்குப்போக்குகளை கூறி தவிர்க்க முயன்றார்.

ஆனால் சபையில் உள்ள எல்லா விசுவாசிகளும் ஒருமனத்தோடு, போதகர் கூறியபடி உபவாச நாளை நியமிக்க முடிவு செய்துவிட்டனர். வேறு வழியின்றி அந்த சகோதரி அரை மனத்தோடு சம்மதித்தார். எங்கள் தேவாலயம் மேல்மாடியிலும், கீழே ஒரு விசுவாசியின் வீடும் இருந்தது. உபவாச தினத்தன்று தேவாலயத்திற்கு வந்த அந்த சகோதரி, கீழே உள்ள விசுவாசியின் வீட்டிலேயே தான் ஜெபிப்பதாகவும், மேல்மாடிக்கு தன்னால் ஏற முடியவில்லை என்றும் கூறினார்.

இது குறித்து கேட்டதற்கு, உடலில் பலவீனம் ஏற்பட்டுள்ளதாக கூறி தவிர்த்தார். இருப்பினும் விசுவாசிகள் அனைவரும், அவரை கட்டாயப்படுத்தி மேல்மாடியில் உள்ள தேவாலயத்திற்கு கொண்டு வந்தனர்.

பெரும்பாலானோர் உபவாசத்தோடு வந்த நிலையில், ஜெபக்கூட்டம் அதிக வல்லமையாக துவங்கியது. சகோதரிகளின் பகுதியில் நடுப்பகுதியில் அமர்ந்து கொண்டு, அந்த சகோதரியும் பரிசுத்தாவியில் நிரம்பி அந்நிய பாஷையில் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் எல்லா விசுவாசிகளும் முழு பலத்தோடு தேவனை ஆவியில் நிரம்பி துதித்த போது, திடீரென அந்த சகோதரி அலற ஆரம்பித்தார்.

அவருக்கு முன்னால் இருந்த சில சகோதரிகளின் மீது பாய்ந்து அவர்களின் ஆடைகளை சரமாரியாக கிழிக்க துவங்கினார். அவரை தடுக்க சென்ற மற்ற சகோதரிகளை அடித்து, உதைக்கவும் செய்தார். அவரை கட்டுப்படுத்த முடியாமல் திணறவே, போதகர் தேவாலயத்தின் கதவை மூடுமாறு கூறி, விசுவாசிகள் யாரும் வேடிக்கை பார்க்காமல் இன்னும் அதிக வல்லமையோடு ஜெபிக்குமாறு கூறினார்.

விசுவாசிகள் தொடர்ந்து பரிசுத்த ஆவியில் நிரம்பிய போது, அந்த சகோதரி கீழே படுத்து உருள துவங்கினார். அவரது நாக்கை கடித்து கொண்டு வாயில் இருந்து இரத்தம் கொட்டியது. முடியை விரித்து போட்டுக் கொண்டு எழுந்து ஓட முடியாமல், இங்கும் அங்குமாக உருண்டார்.

போதகரின் பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு, அவரில் இருந்த அசுத்தாவி வெளியேறியது. அப்போது தான் இத்தனை நாட்களாக அவர் பேசிய அந்நிய பாஷை பரிசுத்தாவியின் வெளிப்பாடு அல்ல, அது ஒரு ஏமாற்றும் அசுத்தாவியின் வேலை என்பது தெரியவந்தது.

சிந்தித்தது:

அந்த அசுத்தாவி பிடித்த சகோதரியை தேவாலயத்திற்கு தந்திரமாக அனுப்பிய பிசாசு, சபையில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்த முயன்றது. ஆனால் எங்களின் மீது மிகுந்த இரக்கம் கொண்ட தேவன், அந்த உபவாச கூட்டத்தின் மூலம் அசுத்தாவியை குறித்து வெளிப்படுத்தி, அதில் இருந்து விடுவித்தார்.

எனவே இன்று தேவாலயத்திற்கு வரும் எல்லாருக்குள்ளும் பரிசுத்தாவி மட்டுமே இருக்கும் என்று நாம் கருத முடியாது. தேவாலயத்திற்குள் அசுத்தாவி பிடித்தவர்கள் வரமாட்டார்கள் என்று கூறவும் முடியாது. எனவே நாம் எப்போதும் பரிசுத்தாவின் வல்லமையில் நிரம்பி, தேவனின் கரங்களில் இருந்தால் மட்டுமே, இது போன்ற வல்லமைகளை கண்டறியவும், அவைகளிடம் இருந்து தப்பவும் முடியும். நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்தும் இது போன்ற வல்லமைகளிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.
– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *