அசுத்த ஆவிகளை துரத்த ஆசையா…?

பல கிறிஸ்துவக் கூட்டங்களிலும், தேவ ஊழியர்கள் அசுத்த ஆவிகளை துரத்துவதை நாம் பார்த்திருக்கிறோம். இதை பார்க்கும் பல விசுவாசிகளுக்கு, நாமும் அசுத்த ஆவிகளை துரத்த வேண்டும் என்று விரும்புவது இயற்கையே. சிலர் அப்படி துரத்த முயற்சி செய்து சிக்கலிலும் மாட்டிக் கொள்கிறார்கள்.

அசுத்த ஆவிகளை துரத்தும் தேவ ஊழியர்கள், பரிசுத்தாவியின் வல்லமையினால் நிரம்பி இருப்பதால், அவர்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படுவதில்லை. ஆனால் ஆவியில் பலவீனமானவர்கள் பிசாசுகளை துரத்த முயற்சி செய்தால், சில விபரீதங்கள் ஏற்படலாம் என்பதை எனக்கு உணர்த்திய ஒரு சம்பவத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.அனுபவித்தது:

நான் வெளியூரில் வேலை செய்து கொண்டிருந்த போது, ஒரு கிறிஸ்துவ சகோதரனுடன் தங்கியிருந்ததால், ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர முடிந்தது. ஆனால் ஆவிக்குரிய அனுபவம் குறைவாக இருந்தது. இதனால் யாருக்காவது ஏதாவது பிரச்சனை என்று கூறினால் உடனே, அவர்களுக்காக ஜெபிக்க ஆரம்பித்து விடுவேன்.

நான் ஜெபிக்கும் போது, பிசாசின் வல்லமைகளை கட்டி ஜெபிப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன். ஆனால் என்னை தேவ கரங்களில் ஒப்புக் கொடுத்து பரிசுத்தாவியின் அபிஷேகத்தில் நிறைந்து ஜெபிப்பதில்லை. சில மாதங்கள் கடந்த நிலையில், நான் ஆவிக்குரிய வாழ்க்கையில் கொஞ்சம் பின்வாங்கும் நிலை ஏற்பட்டது.

தனி ஜெபம், தினமும் வேத வாசிப்பு, வசனம் தியானிப்பது ஆகியவை குறைந்தது.
இருப்பினும் பிசாசுகளை கட்டி ஜெபிப்பதில் மட்டும் எந்த தயக்கமும் காட்டவில்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல என் சரீரத்தில் ஒரு வித பெலவீனம் ஏற்பட ஆரம்பித்தது. ஒரு சில நாட்களில் என்னால் எதையும் சாப்பிட கூட முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் உடனடியாக எனது சொந்த ஊருக்கு சென்று ஓய்வு எடுக்க முடிவு செய்தேன்.
சொந்த ஊருக்கு சென்ற போது, என் உடல்நிலை இன்னும் மோசமானது. காய்ச்சலும், உடல் களைப்பும் சேர்ந்து என்னை பாடாய்படுத்தியது. மருத்துவமனைக்கு செல்லவும் எனக்கு விருப்பமில்லை என்று பெற்றோருக்கு தெரிவித்துவிட்டேன்.

இந்நிலையில் எங்கள் வீட்டிற்கு எதார்த்தமாக சில தேவ ஊழியர்கள் வந்தனர். அவர்கள் எனது நிலையை கண்டு ஜெபிக்க ஆரம்பித்தனர். அப்போது ஊழியக்கார சகோதரி ஒருவரிடம், தேவன் பேசினார். அவர் ஜெபத்தின் இடையே என்னிடம், “நீங்கள் எப்போதாவது பிசாசை எதிர்த்து போராடி ஜெபித்தது உண்டா? என்று கேட்டார். நான் ஆமாம் என்றேன். மேலும் இந்த பலவீனம் உண்டான பிறகு, எனக்கு தினமும் இரவில் மிகவும் பயப்படுத்தும் சில கனவுகள் வருவதையும் கூறினேன்.

அதை கேட்டு நிதானித்த அந்த ஊழியக்கார சகோதரி, “நீங்கள், தகுந்த ஆவிக்குரிய பலமில்லாமல் பிசாசை எதிர்த்து போராடி ஜெபித்ததால் தான் இந்த பெலவீனம் உண்டாகி உள்ளது. ஆவிக்குரிய வல்லமை இருந்தால் மட்டுமே பிசாசின் சக்திகளை அடக்க முடியும். இல்லாவிட்டால் அவை நம்மை மேற்கொண்டு ஜெயித்துவிடும்.” என்றார்.

அதன்பிறகு அந்த சகோதரி பரிசுத்தாவியின் வல்லமையில் நிறைந்து ஜெபித்தார். அப்போது எனக்குள்ளும் பரிசுத்தாவியின் வல்லமை இறங்கியதை உணர்ந்தேன். உடனே எனக்குள் இருந்த பெலவீனம் மறைந்தது.

நடக்க கூட முடியாமல் சிரமப்பட்ட எனக்குள் ஒரு புதிய பலம் வந்ததை உணர்ந்தேன். சில நாட்களில் பூரண சுகமடைய தேவன் உதவி செய்தார். அதன்பிறகு எப்போது ஜெபித்தாலும், என்னை முழுமையாக தேவ கரங்களில் தாழ்த்தி ஒப்புக் கொடுத்த பிறகே, பிசாசின் வல்லமைகளை கட்டி ஜெபிப்பேன். தேவ கரங்களில் ஒப்புக் கொடுத்ததால், அதன்பிறகு அது போன்ற ஒரு பெலவீனம் இதுவரை வராமல் தேவன் என்னை பாதுகாக்கிறார்.

சிந்தித்தது:

பல சபைகளிலும் புதிதாக வருபவர்களின் ஆவிக்குரிய நிலையை அறியாமலேயே, அவர்களின் மீது கரங்களை வைத்து ஜெபிப்பதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர். இதை காணும் ஆவியில் பலவீனமான விசுவாசிகளும், இரட்சிக்கப்படாதவர்களின் மீது கரங்களை வைத்து ஜெபிக்கின்றனர். இது எந்த முன்னேச்சரிக்கையும், ஆயுதமும் இல்லாமல் போருக்கு போகும் போர் வீரனுடைய நிலையை போன்றது. இதனால் சில நேரங்களில் எனக்கு ஏற்பட்டதை போன்ற பலவீனங்களும், மறைமுக போராட்டங்களும் உண்டாக வாய்ப்புள்ளது.

உங்களை பயப்படுத்தும் வகையில் இந்த காரியத்தை சொல்லவில்லை. தேவையற்ற பிசாசின் தொந்தரவுகளை தவிர்க்க இது உதவும் என்பதற்காகவே இதை கூறினேன். எனவே தகுந்த ஆவிக்குரிய வல்லமை இல்லாதவர்களும், ஆவியில் பெலவீனமாக பின்தங்கி இருக்கும் நேரங்களிலும் பிசாசின் வல்லமைகளை எதிர்த்து ஜெபிப்பதை தவிப்பது நல்லது.

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel