0 1 min 4 mths

பரிசுத்தாவி பெற்றவர்களின் அடையாளமாக அளிக்கப்படும் அந்நிய பாஷை பேசும் போது, நமக்குள் பல மாற்றங்கள் நிகழ வேண்டியுள்ளது. அது முழு மனிதனையே மாற்றும் வல்லமை கொண்டது. அதை சரியாக புரிந்து கொண்டால் மட்டுமே, நம் ஆவிக்குரிய வளர்ச்சி சரியாக அளவில் இருக்கும்.

நடந்தது:

நான் சென்னையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, அலுவலகத்தில் இருந்து நடந்து போகும் தூரத்தில் இருந்த தேவாலயத்திற்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தேன். ஆலயத்தில் இருந்தவர்களிடம் புதிய வாடகை வீடு குறித்து விசாரித்தேன்.

அப்போது ஒருவர், மெரீனாவை ஒட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டை குறித்து கூறினார். வாடகை, முன்பணம் என எல்லாவற்றையும் விளக்கிய அவர், வீட்டை கொண்டு போய் காட்டினார். கடற்கரையை ஒட்டி இருந்த அந்த வீடு எனக்கு பிடித்து போனது.

தேவ ஊழியரிடம் ஜெபித்து விட்டு, வீட்டிற்கு முன்பணம் தரலாம் என்ற எண்ணத்தில், ஊழியரிடம் காரியங்களைக் கூறினேன். வீடு இருக்கும் இடத்தை குறித்து விசாரித்த அவர், அது உங்களுக்கு ஒத்து வராது என்று கூறிவிட்டார். கடற்கரைக்கு மிகவும் அருகில் இருப்பதோடு, அதிகளவில் அப்பகுதியில் திருட்டு போகும். இதனால் வேறு வீடு பாருங்கள். அது வேண்டாம் என்று கூறிவிட்டார்.

வீட்டை காட்டிய நபரிடம் இதை கூறியதும், அவர் மிகவும் கோபப்பட்டார். தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி, இனிமேல் என்னிடம் பேச வேண்டாம் என்று கோபமாக சென்றுவிட்டார். எனக்கும் மனதில் மிகவும் பாரமாகிவிட்டது. அவரிடம் மன்னிப்பு கேட்ட போதும், அவர் ஒப்பு கொள்ளவில்லை.

சில நாட்களுக்கு பிறகு, தேவாலயத்தில் ஆவியில் நிரம்பி கொண்டிருக்கும் போது, என்னிடம் கோபப்பட்ட நபர், முன் வரிசையில் அமர்ந்து ஆவியில் நிரம்பி கொண்டிருந்தார். அதை எதார்த்தமாக பார்த்த நான், இவர் உண்மையில் பரிசுத்தாவியில் நிரம்பி கொண்டிருந்தால், இன்று என்னிடம் வந்த ஒப்புரவாகி விடுவார் என்று நினைத்தேன்.

கூட்டம் முடிந்து நான் கிளம்ப திரும்பிய போது, முன் வரிசையில் இருந்து ஓடி வந்த அந்த நபர், என் கைகளை பிடித்து கொண்டு என்னை மன்னித்துவிடுங்கள் தம்பி. உங்களிடம் கோபப்பட்டிருக்க கூடாது என்று வருந்தி கேட்டு கொண்டார். நான் ஆச்சரியத்தில் உறைந்து போனேன்.

ஏனெனில் நான் மனதில் நினைத்த காரியத்தை பரிசுத்த ஆவியானவர், அவருக்கு உணர்த்தி இருக்கிறார். இதை எண்ணி தேவனுக்கு நன்றி கூறினேன்.

சிந்தித்தது:

பரிசுத்தாவி நமக்குள் வரும் போது, அதற்கு அடையாளமாக அந்நிய பாஷையில் பேசுகிறோம். நம் வாயில் இருந்து அந்த வார்த்தைகள் வந்தாலும், அதை பேசும் நமக்கே அதன் அர்த்தம் புரியாது. ஏனெனில் அது இந்த உலகிற்குரிய பாஷை அல்ல.

மேலும் பேசுவது நம் சரீரமாக இருந்தாலும், பரிசுத்தாவியுடன் நமக்குள் இருக்கும் தேவன் தந்த ஆவி பேசுகிறது. நமது ஆவிக்குரிய காரியங்கள் தேவனிடம் ஒப்புக் கொடுக்கப்படுகின்றன. அப்போது, நம் ஆவிக்கு தேவையான வல்லமையை பெற்று கொள்கிறோம்.

ஆவியில் கிடைத்த வல்லமை ஆத்மாவிற்குள் பகிர்ந்து அளிக்கப்படும் போது, நம் மனம், எண்ணம் மற்றும் சிந்தையில் உள்ள தேவனுக்கு விரோதமான காரியங்கள் அகற்றப்படுகின்றன. ஆத்மா புதுப்பிக்கப்படும் போது, அது சரீரத்தை சீரான பாதையில் நடத்த முயற்சி செய்கிறது. இதனால் தான் பரிசுத்தாவியில் நிரம்பும் போது, சிலர் அழுகிறார்கள். சிலர் சந்தோஷத்தில் அந்நிய பாஷை பேசி மகிழ்ச்சி அடைகிறார்கள்.

ஆனால் இந்த அனுபவத்தை எல்லாரிடமும் காண முடிவதில்லையே என்ற கேள்வி எழுலாம். உண்மைத்தான், பரிசுத்தாவியில் நிரம்பி அந்நிய பாஷை பேசினால் மட்டுமே இந்த அனுபவம் உண்டாகும்.

ஏற்கனவே ஒரு முறை பேசியுள்ள அந்நிய பாஷையை, பிறருக்கு காட்டி கொள்ள சொந்தமாக பேசி கொண்டால், நமக்குள் எந்த மாற்றமும் நிகழாது. அது பரிசுத்த ஆவியில் வந்த அந்நிய பாஷை அல்ல, அனுபவத்தில் வரும் அந்நிய பாஷை. அதனால் நமக்குள் எந்த மாற்றமும், எந்த பயனும் ஏற்படாது.

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *