
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு சகோதரி கூறியது…
தேவனுடைய கிருபையினாலே இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள எனது வாலிப வயதில் தேவன் உதவி செய்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகு, எனது கணவருக்கோ, அவரது குடும்பத்தாருக்கோ, நான் தேவாலயத்திற்கு செல்வது சுத்தமாக பிடிக்காது. அவர்களுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக தான், அவ்வப்போது தேவாலயத்திற்கு சென்று பங்கேற்று வந்தேன்.
நான் தேவாலயத்திற்கு சென்று வந்தது குறித்து என் கணவருக்கு தெரியவந்தால், நான் வீட்டிற்கு வந்தவுடன் கெட்ட வார்த்தைகளிலேயே திட்டி தீர்த்துவிடுவார். சில நேரத்தில் குடித்துவிட்டு வந்து, சரமாரியாக அடித்து, உதைக்கவும் செய்வார். கிறிஸ்துவின் அன்பு எனக்குள் இருந்ததால், அவரது அடி-உதைகளை நான் பெரிய விஷயமாக நினைக்கவில்லை.
நாட்கள் செல்லச் செல்ல என்னால் தேவாலயத்திற்கு செல்லவே முடியாத நிலை உருவானது. வீட்டில் இரவில் எல்லாரும் தூங்கிய பிறகு, கண்ணீரோடு ஜெபிப்பேன். இந்நிலையில் ஒருநாள் தேவாலயத்தில் இராபோஜன கூட்டம் நடைபெறுவது குறித்து ஒரு சகோதரியின் மூலம் தெரியவந்தது. அந்த கூட்டத்திற்கு எப்படியாவது சென்று, கிறிஸ்துவின் அன்பினால் நிரம்ப வேண்டும் என்ற வாஞ்சை எனக்குள் எழும்பியது.
தேவ அன்பு எனக்குள் பொங்கியதால், கணவரிடம் எப்படியாவது அனுமதி பெற்றுக் அந்த கூட்டத்திற்கு செல்ல முடிவு செய்தேன். கணவரிடம் தேவாலயத்திற்கு செல்ல இன்று ஒரே ஒரு நாள் அனுமதி தாருங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், இன்று என்ன ஸ்பெஷல் அப்படி? என்று கேட்டார். இன்று ஆலயத்தில் இராபோஜன கூட்டம் நடைபெறுகிறது என்றேன்.
அது என்ன இராபோஜன கூட்டம் என்று கேட்டார். இராபோஜன கூட்டத்தில் கர்த்தருடைய மாமிசத்தையும், இரத்தத்தையும் கொடுப்பார்கள் என்றேன். அப்போது கேலி செய்து சிரித்த அவர், சரி இன்று நீ தேவாலயத்திற்கு போய், அந்த கூட்டத்தில் பங்கேற்று, உங்க இயேசு நாதருடைய மாமிசத்தை எடுத்து கொண்டு வர வேண்டும் என்றார்.
எனக்கு தர்மசங்கடமான சூழ்நிலையாகிவிட்டது. ஏனென்றால், கூட்டத்திற்கு செல்ல அவர் சம்மதம் கூறியது ஒருபுறம் சந்தோஷம் என்றால், தேவாலயத்தில் தரும் அப்பம், இயேசுவின் சரீரம் என்ற நினைப்பூட்டலுக்கு அளிக்கப்படுவது என்று அவருக்கு எப்படி புரிய வைப்பது? அப்படி கூறினால், கூட்டத்திற்கு செல்ல அவர் விடமாட்டார். ஒரு பயத்துடன் கூடிய சந்தோஷத்தில், தலையை ஆட்டிவிட்டு தேவாலயத்திற்கு சென்றேன்.
தேவாலயத்திற்கு சென்ற மகிழ்ச்சியில், எனக்கு முன் இருந்த இக்கட்டான சூழ்நிலையை தேவனிடம் ஒப்படைத்தேன். இந்த சூழ்நிலையில், என் தேவனால் மட்டுமே என்னை காப்பாற்ற முடியும் என்று விசுவாசித்து, இராப்போஜன கூட்டத்தில் அமர்ந்தேன்.
அப்பம் வந்தது, வழக்கம் போல வாங்கிவிட்டு, யாருக்கும் தெரியாமல் தேவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, எனது கைக்குட்டையில் (கர்ச்சீப்) வைத்து சுற்றிக் கொண்டேன். திராட்சை ரசம் மட்டும் குடித்தேன்.
கூட்டம் முடிந்து பரிசுத்தாவியினால் நிரப்பி சந்தோஷப்பட்ட எனக்கு, கணவர் கேட்ட காரியமே மறந்துவிட்டது. வீடு திரும்பும் வழியில் தான், அது ஞாபகம் வந்தது. சரி நாம் நினைத்தது போல கூட்டத்திற்கு சென்று பங்கேற்க முடிந்தது. இனி என்ன நடந்தாலும், கர்த்தருக்காக சகிப்போம் என்ற முடிவோடு வீடு திரும்பினேன்.
எனது வருகையை எதிர்நோக்கி வீட்டு வாசற்படியிலேயே காத்திருந்த கணவர், எங்க உங்க இயேசு நாதருடைய மாமிசம்? என்றார். எனது கைக்குட்டையை, அவரிடம் நீட்டினேன். அவர் அதை திறந்து பார்த்த போது, முழுவதும் இரத்தம் சொட்ட சொட்ட வைக்கப்பட்ட ஒரு மாமிசத் துண்டு இருந்தது. அதை கண்ட என்னாலே நம்ப முடியவில்லை.
இதை பார்த்த பிறகு கூட என்னை நம்பாத என் கணவர், எங்கள் ஊரில் உள்ள கோழி, ஆடு, மாடு, பன்றி என்று எல்லா கறிக் கடைகளிலும் சென்று இந்த மாமிசத்தை காட்டி இங்கிருந்து வாங்கப்பட்டதா? என்று கேட்டுள்ளார்.
முடிவாக, ஒரு கறிக்கடையில் இவர் அப்படி கேட்ட போது, அந்த மாமிசத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த கடைக்காரர், இது விலங்கு மாமிசம் இல்லை, ஒரு மனிதனுடைய மாமிசம் என்று கூறியுள்ளார்.
அதை கேட்டு பயந்து போய் வீடு திரும்பிய என் கணவர், வீட்டிற்கு வந்தவுடன் என் கையை பிடித்து மன்னிப்பு கேட்டார். உண்மையாகவே உங்களின் இயேசு நாதர் உயிரோடு தான் இருக்கிறார். இன்றும் அவர் உங்களுக்காக தனது மாமிசத்தையும், இரத்தத்தையும் அளிக்கிறார் என்று கூறினார் கண்ணீர் விட்டு அழுதார்.
அன்றோடு தனது பிடிவாத குணத்தையும், தேவனுக்கு விரோதமான போக்கையும் கைவிட்ட என் கணவர், இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்.
இன்று நாங்கள் குடும்பமாக, தேவனுக்காக சாட்சியாக வாழ, தேவன் உதவி செய்கிறார்.
எனது நீண்டநாள் ஜெபத்திற்கு பதிலளித்த தேவன், என் கணவரை ஒரு அதிசயமான முறையில் இரட்சிப்பிற்குள் கொண்டு வந்த விதத்தை எண்ணி, நன்றியுள்ள இதயத்தோடு கர்த்தரை துதிக்கிறேன்.
இந்த சாட்சியை படித்துக் கொண்டிருக்கும் சகோதரனே, சகோதரியே… உங்கள் குடும்பத்தில் நீங்கள் ஒருவர் மட்டுமே இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்களா? அதற்காக மற்றவர்களோடு சேர்ந்து, இயேசுவை கைவிட்டுவிடாதீர்கள்.
உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர் என்பதால், அவர் உங்கள் குடும்பத்தினரிடம் கிரியை செய்ய காத்திருங்கள். அதற்காக ஜெபியுங்கள். அதுவரை உங்களுக்கு ஏற்படும் பாடுகளை சந்தோஷத்தோடு சகித்து கொள்ளுங்கள்.
அதேபோல இராபோஜன அப்பத்தையும், திரட்சை ரசத்தையும் சாதாரணமாக நினைக்காதீர்கள். இயேசு தமது சொந்த உயிரையே நமக்காக அளித்த காரியத்தை, அதன்மூலம் நாம் நினைவுக் கூறுகிறோம் என்பதை மறக்காதீர்கள்.
எனவே பயத்தோடு, பக்தியோடு இராபோஜனக் கூட்டத்தில் கலந்து கொண்டு, ஆசீர்வாதத்தை பெறுவோம். தேவன் என் வாழ்க்கையில் செய்த எல்லா நன்மைகளுக்காக, அவரை நன்றியுள்ள உள்ளத்தோடு துதிக்கிறேன்.