அப்போஸ்தலர்:18.10

நான் உன்னுடனே கூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை. அப்போஸ்தலர்:18.10

புதிய ஏற்பாட்டில் அதிக தூரம் பயணம் செய்து, பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு இயேசுவே மெய்யான தெய்வம் என்று காட்டி, ஆசியாவில் பல சபைகளை உருவாக்கியவர் பரிசுத்த பவுல். இவரிடம் தான் தேவன் இந்த வார்த்தைகளைப் பேசுகிறார்.இன்றைய உலகில் பயம் என்பது எல்லாருக்கும் பொதுவாக ஒரு பிரச்சனை. பயத்தை மேற்கொள்ள பெரும்பாலானோர் முயற்சி செய்து தோல்வி அடைகிறார்கள். சாதாரண விசுவாசி முதல் பிரபல தேவ ஊழியர்கள் வரை இந்த பிரச்சனையை சந்திக்கிறார். ஒவ்வொருக்கும் இருக்கும் பயத்தின் தன்மையும், அளவும் மாறுகிறதே தவிர, எல்லாருக்குள்ளும் பயம் இருக்கிறது.

DCF compatable JPEG Img

மனிதர்களுடைய மனதில் பயம் அதிகமானால், சில நேரங்களில் விபரீதமான முடிவுகளை எடுக்கிறார்கள். இப்படிப்பட்ட பல செய்திகளை நாம் அன்றாடம் காண்கிறோம், கேட்கிறோம்.

இந்த பயம் பரிசுத்த பவுலுக்கும் ஏற்பட்டது. அது குறித்து அவர் தேவனிடம் ஜெபித்ததாக வசனத்தில் குறிப்பிடவில்லை. ஆனால் பவுலின் நிலையை அறிந்த தேவன், அவரை தைரியப்படுத்துகிறார். மேலும் தனது நோக்கத்தையும் அவருக்கு காண்பிக்கிறார்.

பவுலை போல, நம் வாழ்க்கையிலும் சோதனைகளின் மத்தியில், தொடர்ந்து தேவனுக்காக செயலாற்றி கொண்டிருக்கும் போது, சில பயங்கள் நமக்குள் உண்டாகின்றன. அது சில நேரங்களில் நமக்கே தெரியாமலோ அல்லது நாம் வெளியே காட்டி கொள்ளாமலோ இருக்கலாம். குடும்பம், சபை, தேசம், சொந்த வாழ்க்கை என பல காரியங்களில் பயம் ஏற்படலாம்.

நமக்குள் பயம் இருக்கும் வரை, எந்த காரியத்தையும் ஒழுங்காக செய்ய முடியாது. ஆனால் தேவன் மீதான பூர்ண அன்பு, பயத்தை புறம்பே தள்ளும் என்று வேதத்தில் வாசிக்கிறோம். தேவ அன்பு பெருகும் போது, அவருடைய சமூகத்தில் காத்திருக்க விருப்பம் ஏற்படும். மேலும் அவருடைய சத்தத்தை கேட்க முடியும்.

நமக்குள் ஏற்படும் பயம் நீக்கும்படி தேவன் பேசுகிறார். அவருடைய வார்த்தைகள் நமக்குள் தைரியத்தை தருகின்றன. ஆனால் அவருடைய வார்த்தைகளை கேட்க, நாம் ஜெபத்தில் காத்திருக்க வேண்டியது அவசியம்.

தேவனுடைய வார்த்தைகள் என்று கூறியவுடன், ஊழியர்கள் மூலம் மட்டுமே பேசுவார் என்ற ஒரு எண்ணம் பொதுவாக காணப்படுகிறது. தேவ ஊழியர்கள் மூலம் பேசுவார் என்பது உண்மையே. ஆனால் தனிப்பட்ட காரியங்களை தேவன் நம்மோடு தனியாக பேச விரும்புகிறார்.

வேதத்தில் தீர்க்கத்தரிசிகள் மூலமாக தேவன் பேசுகிறார். அதே நேரத்தில் அநேகரிடம் தனிமையிலும் தேவன் பேசுவதை காணலாம். தேவனுடைய வார்த்தைகளை கேட்கும் போது, நமக்குள் இருக்கும் பயம் நீங்குகிறது. மனக்குழப்பம் அகன்று, தெளிவு, தைரியம் உண்டாகிறது. மேலும் அவர் மீதான விசுவாசம் வளர்கிறது.

நமக்கு கிடைக்கும் தேவ ஆலோசனை மூலம் எல்லா பயங்களும் நம்மை விட்டு நீங்குவதோடு, யாரும் நமக்கு தீங்கு செய்ய முடியாது. எல்லாவற்றை முன்னறிந்த தேவன், அது குறித்து வெளிப்படுத்தி தருகிறார்.

பவுலின் ஊழியத்தில் ஏற்பட்ட அந்த பயம் நீங்கிய பிறகு, அடுத்தடுத்த வசனங்களில், அவர் தைரியமாக செயல்படுவதை காண முடிகிறது. அதேபோல, நமக்குள் இருக்கும் எல்லா பயங்களும் நீங்கும்படி, தேவ சமூகத்தில் காத்திருப்போம். அவர் எல்லா பயங்களுக்கும் நீங்கலாக்கி இரட்சிக்கிற தேவன்.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற பரலோக பிதாவே, எங்களுக்குள் ஏற்படும் பயத்தை நீக்கும்படி எங்களோடு நீர் பேசுகிற தேவனாக இருக்கிறபடியால், உம்மை துதிக்கிறோம். தேவ அன்பில் நிறைந்து, தேவ சத்ததை கேட்டு, பயங்களின் மீது ஜெயமெடுக்க உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே ஆமென்.

Spread the Gospel