பெங்களூரில் இருந்து ஒரு சகோதரன் கூறுகிறார்…

இந்து குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நான், பக்தி வைராக்கியத்துடன் வளர்க்கப்பட்டேன். ஆனால் சிறு வயதிலேயே தந்தையை இழந்த என் குடும்பத்தை நடத்தி செல்ல தாய் மிகவும் சிரமப்பட்டார். ஒரு சந்தர்ப்பத்தில் இயேசுவே உண்மையான தேவன் என்று அறிந்த எனது தாயார், எங்களையும் அந்த சத்தியத்திற்கு நேராக அழைத்து சென்றார்.

எனது சகோதரியும், நானும் மட்டுமே இயேசுவின் அன்பை ருசித்து அறிந்தோம். எனது மற்ற இரண்டு சகோதரர்களுக்கு இயேசுவை பிடிக்கவில்லை. இந்நிலையில் எனது பள்ளிப் படிப்பை முடித்த தருவாயில், கிறிஸ்துவை அறிந்து கொண்டதற்காக, எனது மூத்த சகோதரன் மூலம் பிசாசு போராட்டத்தை கொண்டு வந்தான்.

ஒரு வாலிபக் கூட்டத்திற்கு நான் சென்றிருந்த போது, குடி போதையில் வீட்டிற்கு வந்த எனது மூத்த சகோதரன், தாயாரையும், சகோதரியையும் அடித்து உதைத்துள்ளார். மேலும் இனி தேவாலயத்திற்கு செல்லக் கூடாது என்று எச்சரித்துள்ளார். கிறிஸ்துவின் அன்பை அறிந்த இவர்களுக்கு, சகோதரனின் மிரட்டலை ஏற்க முடியவில்லை.

இதனால் இருவரும் எங்காவது சென்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் குடும்பத்தில் செல்லமாக வளர்க்கப்பட்ட என்னை ஒரு முறை பார்த்துவிட்டு அப்படி செய்ய முடிவு செய்தனர். இதற்காக வாலிபக் கூட்டத்தில் இருந்த என்னை பார்க்க சபைக்கு வந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவரின் மூலம் தீர்க்கத்தரிசன வார்த்தைகளை தேவன் பேசினார்.

“எனது சமூகத்திற்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தோடு வந்துள்ள எனது மகளே! நான் உன்னை அழைத்த தேவன், முடிவு பரியந்தம் நடத்தி செல்ல வல்லமையுள்ளராக இருக்கிறேன். பயப்படாதே. சோர்ந்து போகாதே…” என்று தேவன் பேசியுள்ளார்.

இதை கேட்ட எனது தாய்க்கும், சகோதரிக்கும் மனதில் பெரும் ஆறுதலும் சமாதானமும் ஏற்பட்டது. தற்கொலை எண்ணத்தை கைவிட்ட இருவரும், என்னை சந்தித்துவிட்டு வீடு திரும்பினர். அதன்பிறகு என் சகோதரன் மூலம் எவ்வளவோ தொந்தரவுகள் வந்த போது, இருவரும் கிறிஸ்துவ வாழ்க்கையில் தளர்ந்து போகவில்லை.

பிசாசு பல சோதனைகளை எங்கள் வாழ்க்கையில் கொண்டு வந்த போதும், இன்றும் சாட்சியாக நிற்க, கர்த்தர் எங்களுக்கு உதவி செய்து வருகிறார். எங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளராக, தற்கொலைக்கு நேராக சென்ற என் குடும்பத்தை காத்து கொண்டதை எண்ணி நன்றியுள்ள இருதயத்தோடு கர்த்தரை துதிக்கிறேன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *