
…நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். ஆதியாகமம்:11.4
மற்றவர்கள் நம்மை மேன்மையான எண்ணி பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் எல்லா மனிதருக்குள்ளும் இருக்கிறது. அதற்காக ஒவ்வொருவரும், தங்களுக்கு தெரிந்த முறையில் பல முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். சிலர் அதில் வெற்றிப் பெறுகிறார்கள்; சிலர் தோல்வி அடைகிறார்கள்.
இதேபோல அதிகாலத்தில் வாழ்ந்த நிம்ரோத் என்ற தலைவரின் கீழ் ஒரு கூட்டம் மக்கள் செய்த முயற்சியைக் குறித்தே தியான வசனம் குறிப்பிடுகிறது. பூமியில் பாவம் பெருகிய போது, தேவன் வெள்ளத்தை அனுப்பி அழித்தார். அதில் இருந்து தேவனுடைய கண்களில் கிருபைக் கிடைத்த நோவாவின் குடும்பம் தப்பியது.
அவர்களை ஆசீர்வதிக்கும் தேவன், பலுகிப் பெருகி பூமியை நிரப்புமாறு கூறுகிறார்.
ஆனால் ஒருசில தலைமுறைகளைக் கடந்த நிலையில், பூமியெங்கும் சிதறிபோய் வாழாமல், ஒரே இடத்தில் சேர்ந்து வாழ விரும்பினார்கள். அதற்கான ஒரு திட்டமாக, வானத்தை எட்டும் பெரிய கோபுரத்தைக் கட்டும் பணியை ஆரம்பிக்கிறார்கள்.
கோபுரம் கட்டுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் தியான வசனத்தில் குறிப்பிட்டுள்ளது போல, அவர்களுக்கு பெயர் உண்டாகும் வகையில், இந்த முயற்சியில் ஈடுபட்டது தான் தவறு. அதாவது சொந்த முயற்சியில் புகழைச் சம்பாதிக்க விரும்பினர்.
நம் வாழ்க்கையில் கூட, நாம் பணியாற்றும் அலுவலகத்தில், தேவனைத் துதிக்கும் தேவாலயத்தில், நமது உறவினர்களின் மத்தியில் என்று எல்லா தளங்களிலும், நம்மை மற்றவர்கள் புகழ வேண்டும் என்று நினைக்கிறோம். அதில் தவறு எதுவும் இல்லை. ஆனால் அந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள தேவ சித்தத்தையும் மீறலாம் என்று நாம் நினைக்கக் கூடாது.
மேலும் நமக்கு அளிக்கப்பட்டுள்ள ஞானம், பணம், பொருள், ஆஸ்தி ஆகியவற்றைப் பயன்படுத்தி, நமது பெயரையும் புகழையும் வளர்த்துக் கொள்ள நினைக்கக் கூடாது. ஏனெனில் தன்னைத் தான் உயர்த்துகிறவன் எவனும் தாழ்த்தப்படுவான் என்று வேதம் குறிப்பிடுகிறது.
அந்த வசனத்தின் நிறைவேறுதலை, நிம்ரோத்தின் கீழ் பணியாற்றிய மக்களின் மொழியின் தாறுமாறுதலில் காண முடிகிறது. இது போன்ற தாறுமாறுகள் நம் வாழ்க்கையில் வராமல் ஜாக்கிரதையாக செயல்படுவோம்.
இன்று பெரிய அளவிலான ஊழியங்களைச் செய்யும் அநேகர், தாங்கள் கடந்த வந்த பாதைகளை மறந்து விடுகிறார்கள். தங்களால் செய்யப்பட்ட அதிசயங்களையும் ஊழியங்களையும் குறித்து பெருமையாகப் பேசுகிறார்கள்.
அதன்மூலம் தங்களைப் பெரிய மனிதராக அல்லது ஊழியக்காரனாக காட்டிக் கொள்ள நினைக்கிறார்கள். ஆனால் இந்த செயல்பாட்டின் மூலம் அவர்களின் வாழ்க்கையில் அநேக தாறுமாறுகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில் இதே ஆதியாகமத்தில் வரும் ஆபிரகாம், தேவனிடத்தில் இருந்து பெற்ற ஆசீர்வாதங்களில், (ஆதியாகமம்:12.2) அவருடைய பேரைப் பெருமைப்படுத்துவதாக உள்ள ஒரு ஆசீர்வாதத்தைக் காண முடிகிறது. ஆபிரகாமின் வாழ்க்கையில் எத்தனையோ சந்தர்ப்பங்களில், தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஆபிரகாம் அப்படி செய்யவில்லை. இன்னும் சொல்லப் போனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தாழ்மையாக தான் நடந்து கொண்டார்.
இதனால் தேவனால் ஆபிரகாம் உயர்த்தப்பட்டார். தனது குலத்தைச் செழிக்க செய்ய ஒரு குழந்தைக் கூட இல்லாமல் இருந்த ஆபிரகாம், இஸ்ரவேல் என்ற ஒரு ஜாதிக்கு தகப்பனாக மாறினார். மேலும் விசுவாசத்தின் மூலம் நாமும் அவருடைய பிள்ளைகளாக மாறி உள்ளோம்.
எனவே தேவனால் வரும் உயர்வைப் பெற, நம்மை நாமே அவருடைய கரங்களில் தாழ்மையோடு ஒப்படைப்போம். நிம்ரோத் உடன் இணைந்து செயல்பட்ட மக்களைப் போல, நம்மை நாமே உயர்த்தி, பெயர்பெற்றவர்களாக மாறும் முயற்சிகளைக் கைவிடுவோம். ஏற்ற நேரத்தில் உயர்த்தும்படி, தேவனுடைய கரத்தின்கீழ் அடங்கி இருப்போம்.
ஜெபம்:
எங்களை நேசிக்கிற அன்புள்ள ஆண்டவரே, இந்த உலகத்தில் பெயர்பெற்றவர்களாக மாறுவதற்கு, பல சந்தர்ப்பங்களிலும் நாங்கள் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்த உயர்வைப் பெற முடியவில்லை. ஆனால் ஆபிரகாமைப் போல, உமது சித்தம் செய்து காத்திருந்தால், எங்களை ஏற்ற நேரத்தில் உயர்த்த நீர் வல்லமையுள்ளவர் என்று பேசிய உமது வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். இனி வரும் நாட்களில், தேவனிடம் இருந்து வரும் உயர்வைப் பெற எங்களைத் தாழ்த்துகிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.