0 1 min 3 mths

சாராயின் அடிமைப் பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்… ஆதியாகமம்: 16.8

ஆபிரகாமின் வீட்டில் பணிப்பெண்ணாக வரும் ஆகார், ஒரு கட்டத்தில் சாராளின் யோசனையின் பேரில், ஆபிரகாமின் மனைவியாகிறார். இதனால் கர்ப்பமாகும் ஆகார், தனக்கு இந்த வாழ்க்கையை அளித்த எஜமானி சாராளை அற்பமாக எண்ணுகிறாள்.

இதன் விளைவாக, ஆபிரகாமின் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டு, ஆகாரை கடினமாக நடத்துகிறார் சாராள். இதில் வெறுத்து போகும் ஆகார், அங்கிருந்து ஓடி போகிறாள். சூருக்கு போகிற வழியில் ஆகாரை சந்திக்கும் தேவ தூதன், எங்கிருந்து வருகிறாய்? எங்கே போகிறார்? என்று கேட்கிறார்.

ஆகார் செய்த மேற்கூறியது போன்ற தவறை நம் வாழ்க்கையில் செய்யக்கூடாது. நம்மை கணப்படுத்தி மேன்மையான இடத்தில் அமர வைக்கும் எந்த நபரையும் நாம் அற்பமாக எண்ணக்கூடாது. அப்படி செய்தால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இன்று பணியிடத்தில், சபையில், ஊழியங்களில் பலரும் பிரிந்து செல்வதை காணலாம். இது குறித்து விசாரித்தால், என்னை மட்டும் கஷ்டப்படுகிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அதன் பின்னணியில் ஆகாரை போல மற்றவர்களை அற்பமாக நடத்துவது போன்ற செயல்பாடுகள் இருக்கலாம்.

நம்மை விட வயது, படிப்பு, அறிவு, பணம் என எல்லாவற்றிலும் தாழ்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு மரியாதை தருவதில் எந்த தவறும் இல்லை. சில நேரங்களில் இந்த செயல், நமக்கு பெரும் ஆதரவை பெற்று தரும்.

ஆகாரை சந்திக்கும் தேவ தூதன், ஓடி வந்த இடத்திற்கே திரும்பி போய், அடங்கி இரு என்று கூறுகிறார். அதற்கு கீழ்படிய தயாரான ஆகாருக்கு, வருங்காலத்தை குறித்து சில காரியங்களையும் தேவன் வெளிப்படுத்தி தருகிறார்.

நம் செயல்பாடுகள் பிறரை அற்பமாக எண்ணும் வகையில் அமைய கூடாது. அதனால் நமக்கு தேவையில்லாத கஷ்டங்களும் நெருக்கங்களும் ஏற்படலாம். அப்போது நம்மில் உள்ள குறைகளை மாற்றி கொள்ளாமல், அங்கிருந்து ஓடுவது சரியான தீர்வாக அமையாது.

தவறு நம் மீது இருக்கும் பட்சத்தில், தேவன் நம்மை எங்கே வைத்திருக்கிறாரோ, அங்கேயே அடங்கி இருப்பது தான் நல்லது. தேவன் வைத்திருக்கும் இடத்தில் கீழ்படிந்து, அடங்கி இருக்கும் போது, நாம் அதிகமாக பயந்து கொண்டிருக்கும் நம் வருங்காலத்தை குறித்து காரியங்களை தேவன் வெளிப்படுத்தி தருவார்.

அன்று ஆகார் தேவ தூதனின் வார்த்தைக்கு கீழ்படியாமை காட்டி அடங்காமல் போயிருந்தால், இன்று நம்மிடையே உலகில் உள்ள ஒரு பெரிய ஜாதியே இல்லாமல் போயிருக்கும். எனவே தேவன் நம்மை உயர்த்தும் போது, நம்முடன் இருப்பவர்களை அற்பமாக நினைக்காமல் இருப்போம்.

அப்படி நம்மில் அற்பமாக நினைக்கும் தவறு நேர்ந்திருந்தால், அதை கைவிட்டு, தேவன் நம்மை வைத்திருக்கும் இடத்தில் அடங்கி இருப்போம். அப்போது தேவன் நம்மை விசாரித்து, செழிப்பும் ஆசீர்வாதமுமாக வைப்பார்.

ஜெபம்:

எங்களை அதிகமாக நேசிக்கும் கர்த்தாவே, பல கஷ்டமான சந்தர்ப்பங்களின் நடுவில் இருந்து ஓடி ஒளிய விரும்புகிறோம். எங்களின் அறியாமையை மன்னியும். தேவ ஆலோசனையை பெற்று, அதன்படி செய்து ஆசீர்வாதங்களைப் பெற்று கொள்ள உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், நல்ல பிதாவே ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *