
தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார். ஆதியாகமம்:2.22
உலகின் முதல் மனிதனும், தேவனால் உருவாக்கப்பட்டவனுமான ஆதாமிற்கு, ஏற்ற துணையாக ஏவாள் இருந்தாள். ஆதாமின் விலா எலும்பை வைத்து உருவாக்கப்பட்ட ஏவாள், அவனுக்கு எல்லா வகையிலும் சரிசமமாக இருந்தாள்.
மனிதனின் இதயத்தை காக்க பயன்படும் விலா எலும்பில் இருந்து உருவாக்கப்பட்ட ஏவாள், அவன் இதயத்திற்கு நெருங்கியவளாக இருந்து, காதல் சின்னம் போல அதன் இதயம் மீது அம்பு விட்டு உடைப்பவளாக அல்ல. அதில் உள்ள ரகசியங்களைக் காப்பவளாக இருக்க வேண்டியவள்.
அதேபோல கணவனுக்கு எல்லா வகையிலும் உதவியாக இருக்கும் வாழ்க்கை துணையை, தலைக்கு மேல் வைத்து கொண்டாடவும் கூடாது. காலின் கீழ் போட்டு மிதிக்கவும் கூடாது. அவளுக்கு கணவன் சரிசம உரிமையை தர வேண்டும் என்பதை வேதம் குறிப்பிடுகிறது.
மனிதனுக்கு தேவைப்பட்ட வாழ்க்கை துணையை, அவன் தேடி போகவில்லை. தேவனே அவனுடைய தேவையை அறிந்து, ஏவாளை கொண்டு வந்து விட்டார் என தியான வசனம் கூறுகிறது.
இன்று பலரும் தங்களுக்கு பிடித்தவர்களை தேடி கண்டுபிடித்து கொண்டு, அவர்களோடு வாழ விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் தான் தேவனால் அளிக்கப்பட்ட வாழ்க்கை துணையா என்பதை அறிய விரும்புவதில்லை.
தேவன் அளிக்கும் வாழ்க்கை துணையாக இருந்தாலும், குடும்பத்தில் சண்டைகள், கஷ்டங்கள் வராது என்றில்லை. ஆனால் அது போன்ற நேரங்களில் தேவனை மட்டுமே சார்ந்து வாழ வேண்டும் என்ற சிந்தனை ஏற்படும். அப்படி இருவரும் எல்லா காரியங்களையும் தேவனிடம் விசாரித்து செய்தால், வாழ்க்கையில் எந்த சிக்கல்களும் வராது.
எனக்கு ஒரு துணை வேண்டும் என்று ஆதாம், தேவனிடம் கேட்கவில்லை. ஆனால் அவரே ஏவாளை கொண்டு வந்து விடுகிறார். இதன்மூலம் வாழ்க்கையில் நமக்கு தேவையான மற்ற காரியங்களைப் போல, வாழ்க்கை துணையும் அவரே தருகிறார்.
ஏனெனில், ஒவ்வொருவரையும் தாயின் வயிற்றில் இருக்கும் போதே, தேர்ந்தெடுக்கும் தேவன், அவர்களுக்கான வாழ்க்கை துணையையும் நிச்சயித்து விடுகிறார். ஆதாமிற்கு தகுந்த துணையை தேவன் அளித்தது போல, ஏற்ற நேரத்தில் வாழ்க்கை துணையை கொண்டு வந்து சேர்க்கிறார்.
நமக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கை துணை, நமக்கு ஏற்றவளாக இல்லையே என்ற எண்ணம் ஏற்படலாம். ஆதாமில் இருந்த விலா எலும்பை வைத்து ஏவாள் உருவாக்கப்பட்டார்.
அதேபோல, நம் வாழ்க்கை துணை, தேவனால் அளிக்கப்பட்டவராக இருந்தால், நம்மில் உள்ள நற்கிரியைகள், தெய்வீக தாலந்துகள், உண்மையான பக்தி என பல காரியங்களின் மூலம் அவர் நமக்கு ஏற்றவராக உருவாக்கப்பட்டு இருக்கிறார் என்பதை அறியலாம்.
சிலர் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் வற்புறுத்தலுக்காக தவறான நபர்களை, தங்கள் வாழ்க்கையாக ஏற்று கொள்கிறார்கள். அதன்பிறகு வாழ்க்கையில் வரும் கஷ்டமான பாதையை பொறுத்து கொள்ள முடியாமல், தேவனையே குற்றப்படுத்துகிறார்கள். இன்னும் சிலர் பணம், ஆஸ்தி மட்டுமே இலக்காக வைத்து வாழ்க்கை துணையை தேடுபவர்களும் உண்டு.
இதை எல்லாம் கடந்து மதம், ஜாதி, சபை, மொழி, அழகு, அறிவு ஆகியவற்றை மையப்படுத்தி வாழ்க்கை துணையை தேடுபவர்களும் உண்டு. மேற்கண்ட இவை எல்லாமே, வாழ்க்கையில் சந்தோஷத்தையும், திருப்தியையும் தராது என்பது தான் உண்மை.
தேவனால் அளிக்கப்படும் வாழ்க்கை துணை, எந்த வகையிலும் நமக்கு ஒத்து வராத நபராக இருக்கமாட்டார். ஆனால் பாவம் செய்த பிறகு ஆதாமிற்கு, நீர் தந்த துணை என்று ஏவாள் குற்றம் கொண்டவளாக தெரிந்தார்.
அந்த தவறை நாம் செய்யாமல் இருக்க, நம் வாழ்க்கையில் பாவ எண்ணங்களும், ஆலோசனைகளும் வரும் போதே அதை நீக்கிவிட வேண்டும். அப்போது தேவனால் நமக்கு அளிக்கப்பட்ட துணை, எல்லா வகையிலும் ஆசீர்வாதமாக, நம்மில் உள்ள குறைகளை நிறைவு செய்பவராக இருப்பார்.
ஜெபம்:
எங்களை நேசிக்கும் அன்புள்ள ஆண்டவரே, ஆதாமை போல ஒவ்வொருவருக்கும் ஏற்றத் துணையை நீர் தருகிறீர். அந்த ஆசீர்வாதத்தை தகுந்த நேரத்தில் பெற்று, அதை சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள எங்களுக்கு உதவி செய்யும். எந்த சூழ்நிலையிலும் முறுமுறுக்காமல், பொறுமையோடு வாழ்க்கையை நடத்தி செல்ல கிருபை தாரும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.