ஆதியாகமம்:2.22

“தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார்” ஆதியாகமம்:2.22

வானத்தையும், பூமியையும், அதிலுள்ள சகல காரியங்களை தமது வார்த்தையினால் உண்டாக்கிய தேவன், மனிதனை மட்டும் சொந்த சாயலில் சிருஷ்டித்தது அதிசயமான காரியம். அவனை தன்னோடு வைத்து கொள்ள விரும்பிய தேவன், அவனை தனியே விடவில்லை.

தேவனுடைய படைப்பை குறித்து நாம் வாசித்துக் கொண்டே வரும் போது (ஆதியாகமம்:2 ஆம் அதிகாரம்), மிருகங்களை தேவன் பெயரிட்டு அழைக்காமல், அந்த அதிகாரத்தை கூட மனிதனுக்கே வழங்குகிறார் என்று காண்கிறோம். மனிதனை அந்த அளவுக்கு நேசித்த தேவன், அவனுக்கு தகுந்த துணையை உண்டாக்குவதில் எவ்வளவு கவனம் காட்டி இருப்பார்.

அதனால் தான் ஆதாமிற்கு துணையாக இருக்க, படைக்கப்பட்ட ஏவாளின் படைப்பில் கூட ஒரு அதிசயத்தை காண முடிகிறது. அது குறித்த வசனத்தையே தியான வசனமாக எடுத்துள்ளோம். தேவன், ஆதாமின் விலா எலும்பை எடுத்து ஏவாளை உண்டாக்கினார் என்று வாசிக்கிறோம்.

அதற்கு பதிலாக தலையில் உள்ள ஒரு எலும்பை எடுத்துக் கூட ஏவாளை உண்டாக்கி இருக்கலாம். ஆனால் தேவன் அதை செய்யவில்லை. ஏனெனில் அவளுக்கு, ஆதாம் தலையாக இருக்க வேண்டியவன். தலையில் இருந்து எடுத்தால், ஆதாமிற்கு அவள் தலைவியாகி விடுவாள்.

தலையில் எடுத்தால் இந்த பிரச்சனை என்றால், அதற்கு பதிலாக ஆதாமின் காலில் இருந்து ஒரு எலும்பை எடுத்து ஏவாளை படைத்திருக்கலாம். ஆனால் தேவன் அதையும் செய்யவில்லை. ஏனெனில் ஆதாம் அவளை அடிமையாக நடத்த கூடாது. காலில் இருந்து எடுத்திருந்தால், அவளை ஆதாம் ஒரு பொருட்டாக கூட நினைத்திருக்கமாட்டான்.

இது போன்ற எந்த பிரச்சனைகளும் வராத வகையில், ஆதாமின் விலா எலும்பில் இருந்து ஏவாளை படைத்தார். விலா எலும்பு மனித உடலின் சரி பாதியான இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அது முழு உடலின் இயக்கத்திற்கும் முக்கிய காரணியாக விளங்கும் இரத்தத்தை சுத்திகரித்து அளிக்கும் இதயத்தை பாதுகாப்பது.

எனவே ஆதாமின் துணையாக அளிக்கப்பட்ட ஏவாளை அவன், தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டு நடக்கவும் கூடாது. காலின் கீழே போட்டு மிதிக்கவும் கூடாது. ஆனால் தனக்கு சரி சமமாக நடத்த வேண்டும். தனது உயிருக்கு உயிராக அவளை நேசிக்கவும் வேண்டும் என்று தேவன் மறைமுகமாக உணர்த்தி இருக்கிறார் என்று நாம் கருதலாம்.

ஆனால் இன்று உலகில், திருமணம் செய்து கொண்டால், வாழ்க்கையின் இன்பமே மறைந்து, எல்லாம் துன்ப மையமாகிவிடும் என்று பேசுவதை அதிகமாக கேட்க முடிகிறது. இதுபோல கிறிஸ்தவர்கள் கூட பேசுகிறார்கள். இந்த பேச்சாளர்களின் வாழ்க்கையில், மேற்கூறிய அம்சங்கள் அமையவில்லை என்பதே அதற்கான காரணம் ஆகும்.

கர்த்தருக்கு பயந்து வாழ்கின்ற ஒருவன், அவனது மனைவிக்கு சமஉரிமை அளித்து அன்பாக நடத்துவான். அதேபோல கர்த்தருக்கு பயந்து நடக்கிற ஒரு பெண், தன் கணவனுக்கு கீழ்படிந்து, அன்பு கூர்ந்து அவனது வாழ்க்கைக்கு எல்லா வகையிலும் இன்பம் சேர்ப்பாள். இந்த இருவரின் கூட்டணி தான் ஒரு சிறந்த குடும்பமாக இருக்கும் என்று வேதம் குறிப்பிடுகிறது.

மேற்கூறிய அம்சங்கள் நம் குடும்பத்தில் இருக்கிறதா? என்று சோதித்து பார்ப்போம். நம்மை நாமே இந்த வேத வசனத்திற்கு ஒப்புக் கொடுத்து வாழ்ந்தால், உலக மனிதர்கள் கூறுவது போல, குடும்ப வாழ்க்கை என்பது எந்த காலத்திலும் கசப்பாகவோ, வெறுப்பாகவோ இருக்காது. என்றும் இனியாக இருக்கும்.

ஜெபம்:

எங்களை நேசிக்கும் அன்பான தேவனே, உமது வசனத்தின்படி சந்தோஷமான, சமாதானமான குடும்ப வாழ்க்கை எப்படி அமையும் என்று பேசினீர். அதை பெற்று கொள்ள எங்களில் தடையாக இருக்கும் காரியங்களை நீக்கி, அந்த ஆசீர்வாதமான குடும்பத்தை அமைத்து கொள்ள உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel