0 1 min 2 mths

அப்பொழுது அவர்: ….லாபான் உனக்குச் செய்கிற யாவையும் கண்டேன். ஆதியாகமம்:31.12

தகப்பன் வீட்டில் இருந்து தப்பியோடிய யாக்கோபுக்கு அடைக்கலம் தந்து, தன் இரு மகள்களையும் திருமணம் செய்து வைக்கிறார் லாபான். அதை சாதகமாக வைத்து, தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட யாக்கோபின் உழைப்பிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் செழிப்பாக வாழ்ந்து விடலாம் என்ற எண்ணத்தை கொண்டிருந்தார் லாபான்.

ஆனால் யாக்கோபை சந்திக்கும் தேவ தூதன், லாபான் உனக்குச் செய்கிற யாவையும் கண்டேன் என்று கூறினார். இன்றும் நாம் வேலை செய்யும் இடங்களில் உள்ளவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்ற போர்வையில் பல லாபான்கள் நம்மை சுற்றிலும் உள்ளார்கள். இவர்கள் பல நெருக்கடியான பாதைகளில் நம்மை நடத்துகிறார்கள்.

யாக்கோபின் சம்பளத்தை லாபான் 10 முறை மாற்றியதாக கூறுகிறார். இதேபோல நமது காரியங்களுக்காக சிலர் நம்மை அவர்கள் அலைய வைக்கலாம். ஆனால் யாக்கோபு சோர்ந்து மன உடைந்து போன சூழ்நிலைகளில் தேவன் அவனுடன் இருந்தார்.

எல்லா நெருக்கடிகளிலும், செழிப்பையும் உயர்வையும் பெறும் வழிகளை தேவன் போதித்து கொடுத்தார். அதேபோல நாம் சோர்ந்து போகும் நேரத்தில் தேவனை நோக்கி பார்க்கும் போது, அவர் சகலத்தையும் நமக்கு ஆசீர்வாதமாகவும் செழிப்பாகவும் மாற்றி தருகிறார்.

லாபானின் வீட்டை விட்டு ஓடி போகும் யாக்கோப்பை, தன் மகன்களுடன் துரத்தி செல்கிறார் லாபான். யாக்கோபிடம் தந்திரமாக பேசி எல்லாவற்றையும் பறித்து விட்டு, அவனை வெறும் கையாக அனுப்பலாம் என்ற திட்டத்தில் லாபான் பின்தொடர்ந்து சென்றிருக்கலாம்.

இதனால் தான் ஆதியாகமம்.31.24ல் யாக்கோபுக்கு நன்மையை தவிர ஒன்றும் செய்யக்கூடாது என்று தேவனால் லாபானுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
ஊரில் பெரிய செல்வந்தனாக இருந்த லாபான் போன்ற ஒருவரை, யாக்கோபு எதிர்த்து நிற்க முடியாது. இதனால் தான் யாக்கோபு, தன் குடும்பத்துடன் எந்த அறிவிப்புமின்றி ஓடி போகிறார்.

நமக்கு எதிராக தந்திரமாக கிரியை செய்யும் லாபானை போன்ற பூமிக்குரிய, ஆவிக்குரிய சக்திகளிடம், தேவனே பேசி நம் மீதான பயத்தை ஏற்படுத்துகிறார். யாக்கோபை துரத்தி கொண்டு வந்த லாபான், அவனுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டு திரும்பி போகிறார்.

இந்த அளவுக்கு தேவனுடைய பாதுகாப்பை பெற்றிருந்த யாக்கோபு ஏமாற்றுகிறவன் தான். ஆனால் தேவனை சார்ந்து வாழும் பண்பை கொண்டிருந்தான். இதனால் அவனுடைய நெருக்கடியான நேரத்தில் அவனை சந்திக்கும் தேவன், அவனுடைய பெயரை இஸ்ரவேலாக மாற்றுகிறார்.

தேவனை சார்ந்து வாழும் நமக்குள் குறை, குற்றங்கள், பாவ சுபாவங்கள் இருக்க தான் செய்கின்றன. நம்மை பலருடைய கைகளுக்கும் பாதுகாக்கும் தேவன், நம்மில் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார். அதற்காக நாம் தேவ சமூகத்தில் நமது குறைகளை அறிக்கையிட்டு யாக்கோபை போல காத்திருந்தால், யாக்கோபை புதிய பெயரோடு மாற்றிய தேவன், நம்மையும் மாற்றி ஆசீர்வாதங்களால் நிரப்பி நடத்த தேவன் தயாராக இருக்கிறார்.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற அன்புள்ள ஆண்டவரே, எங்களுக்கு எதிராக வரும் எல்லா பொல்லாத யோசனைகளிலும் செயல்பாடுகளிலும் இருந்து நீர் எங்களை பாதுகாக்கிறீர் என்பதால் ஸ்தோத்திரம். அந்த பாதுகாப்புடன் எங்களில் நீர் விரும்பும் மாற்றத்தையும் பெற்று கொள்ள எங்களையே உம் கரங்களில் ஒப்புக் கொடுக்கிறோம் எங்களை நீர் விரும்பும் நிலைக்கு மாற்றி, அநேகருக்கு ஆசீர்வாதமாக நிற்க கிருபை தாரும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *