0 1 min 1 mth

கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபை வைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார். ஆதியாகமம்: 39.21

ஒரு மனிதனுடன் தேவன் இருக்கிறார் என்பதை அவர்களின் செயல்பாடுகள் மூலம் அறியலாம். அந்த வகையில், அன்பான தந்தை, வெறுக்கும் சகோதரர்கள், பெரிய குடும்பம் என்று எல்லாவற்றையும் இழந்த யோசேப்பிற்கு, தேவன் மட்டுமே நம்பிக்கையாக இருந்தார் என்று வேதம் குறிப்பிடுகிறது.

நம் வாழ்கையில் நம்பிக்கையாக இருக்கும் உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் என்று எல்லாரும் கைவிடும் சில சூழ்நிலைகள் வரலாம். ஆனால் தேவன் நம்மோடு இருப்பார் என்பதை நம்ப வேண்டும்.

அதே நேரத்தில், யோசேப்பு போல தேவ சித்தமுள்ள வாழ்க்கையை நாம் வாழ வேண்டியுள்ளது. யோசேப்பிற்கு வந்தது போல, தேவனை விட்டு பிரிக்கக் கூடிய பாவ இன்பங்கள் நம்மை தேடி வரலாம். அதை தவிர்த்து, பரிசுத்தமாக வாழ வேண்டும்.

நம் வாழ்க்கையில் வரும் பாவ இன்பங்களை எப்படி கண்டுபிடிப்பது? என்று பலருக்கும் சந்தேகம் இருக்கலாம். அதற்கு யோசேப்பின் செயல்பாடுகளையே எடுத்துக்காட்டாக வைத்து கொள்ளலாம். நமக்கு தகுதியில்லாத அல்லது அநியாயமான முறையில் கிடைக்க பெறும் எல்லாமே பாவ சந்தோஷமாக தான் இருக்கும்.

இன்று குறுக்கு வழியில் உயர்வை எதிர்நோக்கி பலரும் ஓடுகிறார்கள். எப்படியாவது பணம் சம்பாதித்தால் போதும், எப்படியாவது பிரபலமடைந்தால் போதும் என்று செயல்படுபவர்கள் அநேகர். ஆனால் அவை யாவும் நமக்கு ஆசீர்வாதம் போல தெரிந்தாலும், அது பிற்காலத்தில் பெரிய சாபத்தை வருவிக்கும்.

போத்திபார் மனைவியின் அழைப்பிற்கு, யோசேப்பு ஒத்து போயிருந்தால், அவன் விரைவில் பணக்காரனாக மாறியிருக்கலாம். அந்த வீட்டிற்கே அதிகாரியாக கூட மாறி இருக்கலாம். மேலும் அவனுக்கு சிறைச்சாலை போக வேண்டிய தேவையும் ஏற்பட்டு இருக்காது. ஆனால் அநியாயமாக வரும் அந்த சந்தோஷத்தை தவிர்த்ததால், அவனுக்கு இழப்பு ஏற்பட்டது மட்டுமின்றி, செய்யாத குற்றத்திற்கு தண்டனையும் அனுபவித்தான்.

ஆனால் தேவன் அவனோடு இருந்ததால், சென்ற எல்லா இடங்களிலும் அவனுக்கு இரக்கம் கிடைத்தது. மேலும் அவனுக்கு பல ஆவிக்குரிய அனுபவங்களும் கிடைத்தன.

நாமும் பாவ சந்தோஷத்திற்கு எதிர்த்து நின்றால், முதலில் எதிர்ப்புகளும் ஏமாற்றங்களும் உண்டாகலாம். ஆனால் அது மிகப்பெரிய தெய்வீக ஆசீர்வாதத்திற்கு நம்மை தகுதிப்படுத்தும் என்பதை நினைவில் கொள்வோம்.

எனவே தேவனோடு உள்ள உறவை பாதுகாத்து கொள்வோம். நம்மை தேடி வரும் பாவ சந்தோஷங்களை உதரி தள்ளி, கிறிஸ்துவின் ஆசீர்வாதமான பாதையை நோக்கி முன்னேறுவோம்.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற ஆண்டவரே, பாவ சந்தோஷத்தை கண்டறிந்து எப்போதும் தேவ சமூகத்தை அனுபவிக்க எங்களுக்கு உதவி செய்யும். தேவ சமூகத்தில் இருந்து எங்களை விட்டு விலக்கும் எல்லா வல்லமைகளையும் ஜெயித்து பரிசுத்தத்தை காத்து கொள்ள உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *