0 1 min 4 mths

கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப் பண்ணுகிறார் என்றும் அவன் எஜமான் கண்டு, ஆதியாகமம்: 39.3

சகோதரர்களால் அடிமையாக விற்கப்பட்ட யோசேப்பு, பார்வோனின் பிரதானியான போத்திபாரின் வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறான். போத்திபாரின் வீட்டில் யோசேப்பு செய்யும் எல்லா காரியங்களும் ஆசீர்வாதமாக இருப்பது கவனிக்கப்பட்டு, வீட்டின் முழு பொறுப்பும் யோசேப்பிடம் ஒப்படைக்கப்படுகிறது.

தேவன் யோசேப்புடன் இருந்ததே இதற்கு முக்கிய காரணம். அதை யோசேப்பாக மற்றவர்களுக்கு சொல்லி கொள்ளவில்லை. அவன் செயல்பாடுகளின் மூலம் மற்றவர்கள் அறிந்து கொண்டார்கள். இதனால் யோசேப்பிடம் ஒப்படைக்கப்பட்ட வீட்டு காரியங்களை குறித்து போத்திபார் எதையும் விசாரிக்கவில்லை என்று காண்கிறோம். அதாவது முழு நம்பிக்கையை யோசேப்பு பெற்றிருந்தார்.

நாம் வேலை செய்யும் இடம், போகும் சபை, செய்யும் ஊழியம், குடும்பத்தோடு தங்கியிருக்கும் வீடு மற்றும் நமது உறவினர்கள், நண்பர்கள் இடையே நமக்கு மேற்கூறியது போன்ற முழு நம்பிக்கையை பெற முடிகிறதா? என்று யோசிக்க வேண்டியுள்ளது.

நான் ஒரு இரட்சிக்கப்பட்ட தேவ பிள்ளை என்று நமது செயல்பாடுகளில் மற்றவர்கள் புரிந்து கொள்கிறார்களா? அல்லது நாம் சொல்லி தான் பிறருக்கு தெரிகிறதா? நம்மோடு தேவன் இருந்தால், நாம் கையிட்டு செய்யும் எல்லாவற்றிலும் தேவ ஆசீர்வாதம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆசீர்வாதத்தில் மட்டுமல்ல, உண்மையாக நடந்து கொள்வதிலும் நாம் தேவனுக்கு பயந்து நடப்பவர்கள் என்பது மற்றவர்களுக்கு தெரியவரும்.

போத்திபாரின் வீட்டில் யோசேப்பு ஆசீர்வாதமாக இருந்த போது மட்டுமல்ல, செய்யாத குற்றத்திற்காக சிறைச்சாலையில் இருந்த போதும் சிறைச்சாலை தலைவன் எல்லா காரியங்களையும் யோசேப்பிடம் ஒப்படைத்தார் என்று ஆதியாகமம்.39.23 வசனத்தில் காண்கிறோம். மேலும் சிறைச்சாலை தலைவனும் யோசேப்பிடம் எதை குறித்தும் விசாரிக்கவில்லை என்று வாசிக்கிறோம்.

பிற்காலத்தில் பார்வோன் மூலம் எகிப்து முழுமைக்கும் அதிகாரியாக யோசேப்பு நியமிக்கப்பட்ட போதும், பஞ்ச காலத்தில் யோசேப்பிடம் தீர்வை கேளுங்கள் என்று பார்வோன் கூறுவதாக ஆதியாகமம்.41.55ல் காண்கிறோம். இதிலிருந்து, நம்பிக்கையான நபராக யோசேப்பு பணியில் நியமிக்கப்பட்டதால், தேசத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் ராஜாவான பார்வோன் தலையிடவில்லை என்பதை அறியலாம்.
எந்த கஷ்டமும் இல்லாத நிலையில், நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கும் பலரும்,

நெருக்கடியான நேரங்களில் நம்பிக்கையை இழக்க வைக்கும் செயல்களில் ஈடுபடுவதை காணலாம். ஆனால் யோசேப்பு எல்லா சூழ்நிலையிலும் நம்பிக்கைக்குரியவனாக இருந்தார். இதனால் தேவனால் தேசத்திற்கே அதிபதியாக உயர்த்தப்பட்டார்.

இன்று பலரும் சூழ்நிலைக்கு தகுந்தாற் போல தங்களை மாற்றி கொள்கிறார்கள். இதனால் தங்கள் பெயரை மட்டுமின்றி, தேவ நாமத்திற்கும் அவப்பெயரை பெற்று தருகிறார்கள்.

எனவே தேவன் நம்மை வைத்திருக்கும் எல்லா இடங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும் உண்மையுள்ளவர்களாக இருப்போம். தேவனுக்கு பயந்து, நம் மீதான நம்பிக்கையை காப்பாற்றுவோம். எல்லா சந்தர்ப்பங்களிலும் தேவன் நம்மோடு இருக்கிறார் என்பதை உறுதி செய்து கொள்வோம். அப்போது யோசேப்பை போல, தேவன் நம்மை மேன்மையான இடங்களில் பலருக்கும் ஆசீர்வாதமாக உட்கார வைப்பார்.

ஜெபம்:

எங்களை அளவில்லாமல் நேசிக்கும் ஆண்டவரே, நீர் எங்களை வைத்திருக்கும் எல்லா இடங்களிலும் உண்மையுள்ளவர்களாகவும், நம்பிக்கைக்கு பத்திரவான்களாகவும் இருக்க கிருபை தாரும். நீர் எங்களோடு இருப்பதால், நாங்கள் கையிட்டு செய்யும் எல்லா காரியங்களும் ஆசீர்வாதமாக இருக்கும் என்று விசுவாசிக்கிறோம். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *