0 1 min 7 mths

நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. ஆதியாகமம்: 6.8

தேவன் படைத்த உலகத்தில் பாவம் அதிகரித்த போது, அதை எண்ணி அவர் வருந்தினார். இதனால் உலகத்தையே அழித்து விடலாம் என்று நினைக்கும் போது, நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. எனவே தனது திட்டத்தை நோவாவிடம் தெரிவித்தார்.

நாம் வாழும் இந்த காலத்தில் கூட உலகம் எல்லா வகையிலும் பாவத்தில் பெருகி வருகிறது. இதுவரை உலகம் காணாத பல பாவங்களில் மூழ்கி திளைக்கிறது. இந்த நிலையில் தான், உலகத்தின் முடிவை குறித்த செய்தி நமக்கு சுவிஷேசமாக அறிவிக்கப்பட்டது. அதை கேட்டு, மனந்திருந்திய நாம் உலகத்தோடு சேர்ந்து அழியாமல் கிறிஸ்துவ வாழ்க்கையில் பிரவேசித்து தேவனுடைய பாதுகாப்பில் இருக்கிறோம்.

தேவன் சொன்ன உடனே உலகிற்கு முடிவு வரவில்லை, சிறிது காலம் கொடுக்கப்பட்டது. அதேபோல இன்றும் உலக அழிவு சில காலமாக தாமதமாகி வருகிறது. ஆனால் ஒருநாள் திடீரென மழை பெய்து தேவ நீதி ஆரம்பித்தது போல, இயேசுவின் வருகையும் உலகத்தின் அழிவும் இருக்கும்.

அந்த நாளுக்காக எப்போதும் நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும். கர்த்தருடைய வார்த்தையை கேட்ட நோவா, சரியான நேரத்தில் பேழையை செய்து அதற்குள் குடும்பத்தோடு சென்றார். நமக்கும் பேழை என்ற தேவாலயம் அளிக்கப்பட்டுள்ளது.

நோவாவை போல தேவனுடைய ஆலயத்தை கட்டும் பணி நம்மிடம் அளிக்கப்பட்டுள்ளது. தேவ ஆலயம் என்றவுடன் சர்ச்சு கட்டும் பணியை எண்ணிவிடக் கூடாது. புதிய ஆத்துமாக்களை சம்பாதிக்கும் பணியை குறிக்கிறது.

இன்று பலருக்கும் சத்தியம், நியாயத்தீர்ப்பு, இயேசுவின் வருகை என்று எல்லாமே தெரியும். ஆனால் தேவாலயத்திற்கு போக நேரமில்லை. நோவாவின் காலத்திலும், இதேபோல பலரும் இருந்தார்கள் என்று வேதம் கூறுகிறது. அந்த பட்டியலில் நாம் சேராமல் ஜாக்கிரத்தையாக இருப்போம்.

மழை பெய்ய ஆரம்பித்த போது, இடி, மின்னல், காற்று, சத்தம் என்று எல்லாம் இருந்தது. பேழைக்குள் இருந்தவர்களுக்கும் வெளியே இருந்தவர்களுக்கும் இதன் தாக்கம் இருந்தது.

ஆனால் பேழைக்கு வெளியே இருப்பவர்கள் பாதிக்கப்பட்டார்கள், உள்ளே இருப்பவர்கள் அதை உணர மட்டுமே செய்தார்கள். இன்றும் நாம் ஒரு ஆவிக்குரிய தேவாலயத்திற்குள் உண்மையான விசுவாச வாழ்க்கையை நடத்தும் போது, உலகில் எல்லோருக்கும் வருவது போன்ற பிரச்சனைகள் வரக்கூடும்.

ஆனால் நாம் சந்திக்கும் பாதிப்புகள் மிக குறைவாக இருக்கும். பேழை மழை நீரில் இங்கும் அங்குமாக அல்லாடி இருக்கும். ஆனால் யாரும் பலியாகவில்லை. ஆனால் பேழைக்கு வெளியே இருந்தவர்கள், மழையில் உள்ளே வரவும் முடியவில்லை, குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ளவும் முடியவில்லை.

இன்னொரு விஷயம் என்னவென்றால், தொடர்ந்து ஏறக்குறைய ஓராண்டிற்கு மேலாக பேழைக்குள் இருந்த நோவாவின் குடும்பத்திற்கு, ஒரே இடத்தில் குறிப்பிட்ட மனிதர்களையே பார்த்து கொண்டிருப்பது சலிப்பை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் அவர்கள் வெளியே வந்த போது, தான் தாங்கள் காக்கப்பட்ட தன்மையை உணர்ந்திருப்பார்கள்.

இன்று விசுவாச வாழ்க்கையில் இருக்கும் பலரும், நாம் மட்டும் எதற்கு இவ்வளவு நல்லவர்களாக வாழ வேண்டும். தேவனுக்கு பயந்து ஜீவிக்க வேண்டும் என்ற கேள்வி எழுலாம். ஆனால் இயேசுவின் வருகைக்கு பிறகு தான், அதன் பயனை தெரிந்து கொள்ள முடியும்.

எனவே கிறிஸ்துவ வாழ்க்கையை ஒரு கஷ்டமான, சலிப்பான வாழ்க்கையாக நினைக்காமல், அதை ஒரு பாக்கியமாக கருத வேண்டியது எவ்வளவு உண்மை அல்லவா?

ஜெபம்:

எங்களை நேசிக்கிற அன்புள்ள ஆண்டவரே, கிறிஸ்துவ வாழ்க்கையின் மேன்மையான அனுபவத்தை குறித்து பேசிய உம் வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். எங்கள் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை கண்டு, நாங்கள் மனமடிந்து போகாமல், உமது வருகையை எதிர்நோக்கி வாழ உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *