
ஒவ்வொரு கிறிஸ்தவரின் வாழ்க்கையிலும் ஆதி அன்பு என்ற ஒன்று கட்டாயம் இருக்கும். இரட்சிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் அது மனதில் நிரம்பி வழியும். மற்றவர்களுடன் நம் எல்லா அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள தோன்றும்.
நாம் அடைந்த இரட்சிப்பை பிறருக்கு சொல்ல மனம் துடிக்கும். எப்போதும் மனதில் துதி, ஆராதனை, ஜெபம் போன்றவை தான் நினைவில் இருக்கும்.
பார்த்தது:
ஆதி அன்பை பற்றி கூறும் போது, என் சிறு வயதில் தேவாலயத்தில் ஒரு முறை முதியவர் ஒருவர் கூறிய சாட்சி நினைவுக்கு வரும். ஏறக்குறைய 65 வயதை தாண்டி இருந்த அவர், 10 கிமீ தொலைவில் உள்ள ஊரில் இருந்து எங்கள் சபைக்கு குடும்பமாக வருவார்.
இரட்சிக்கப்பட்டு சில மாதங்களே கடந்த அவர், பெரும்பாலும் சரியான நேரத்திற்கு கூட்டங்களுக்கு வந்து விடுவார். ஆனால் சாட்சி சொன்ன அன்று, சற்று தாமதமாக வந்திருந்தார்.
இந்நிலையில் தனது சாட்சியில் அவர் தாமதமாக வந்த காரணத்தை கூறினார். தனது ஊரில் இருந்து வரும் வழியில் பைக்கில் வந்த ஒருவர் இவர் மீது மோதி உள்ளார்.
இதில் நிலைத் தடுமாறி கீழே விழுந்து, கை கால்களில் காயமடைந்து உள்ளார்.
சாலையில் இருந்த சிலர், அவரை தூக்கிவிட்டு உதவி செய்தார்கள். அப்போது காயங்களில் இருந்து இரத்தம் வருவதை கண்ட அவருக்கு, சிலுவையில் இயேசுவின் உடலில் இருந்து இரத்தம் வருவது நினைவுக்கு வந்துள்ளது.
அவரை சொந்த ஊருக்கு திரும்ப அனுப்ப சிலர் முயற்சி செய்த போது, அதற்கு மறுத்துள்ளார். பக்கத்துல இருக்கற சர்ச்சுக்கு போகணும் என்று கூறி மெதுவாக நடந்து வந்துள்ளார். கை கால்களில் இருந்த காயத்தை விட, தனக்கு ஆராதனை நேரம் கடந்துவிடும் என்பது தான் பெரிய விஷயமாக தெரிந்தது என்று சாட்சியில் கூறினார்.
சிந்தித்தது:
மேற்கூறிய சம்பவத்தை போல, நம் ஒவ்வொருவருக்கும் ஆதி அன்பு பற்றி கூற பல சம்பவங்கள் இருக்கும். அதை கூறும் போதே, நமக்குள் பெரிய சந்தோஷமும் ஏற்படும். ஆனால் நாட்கள், மாதங்கள், வருடங்கள் செல்ல செல்ல அந்த ஆதி அன்பு தணிந்து விடுகிறது. ஆனால் அதை நாம் உணர காலம் கடந்து விடுகிறது.
இப்படியிருக்க, எனக்குள் இருந்த ஆதி அன்பு தணிந்து போனது ஏன்? என்ற சந்தேகம் நமக்கு ஏற்படலாம். அதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அப்பறம் செய்யலாம் என்ற ஒரு சாக்குபோக்கு தான் இதில் முக்கியமானது.
எடுத்துக்காட்டாக, ஆதி அன்பில் இருக்கும் ஒரு நபருக்கு ஜெபிக்க விருப்பம் ஏற்படும் போது, இப்போ வேண்டாம். கொஞ்சம் நேரம் கழித்து ஜெபிக்கலாம் என்று தள்ளி வைக்கிறார். முதல் முறை இது சற்று மனவருத்தத்தை ஏற்படுத்தினாலும், போக போக அது பழகி விடுகிறது. இப்படி பல முறை தள்ளி வைக்கும் போது, ஒரு கட்டத்தில் ஜெபத்தின் மீதான விருப்பமே அவருக்கு தணிந்து போகிறது.
இப்படி ஒவ்வொரு ஆவிக்குரிய நடவடிக்கையிலும் அப்பறம் செய்யலாம் என்ற எண்ணம் நமக்குள் வரும் போது, தேவ அன்பு நமக்குள் குறையும். அப்போது மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க ஆரம்பிப்போம்.
மற்றவர்களுக்குள் இருக்கும் குறைகள் நமக்கு பிரகாசமாக தெரிய, நான் மட்டும் எதுக்கு இப்படி ஊழியம் செய்யணும், ஜெபிக்கணும், வேதம் வாசிக்கணும்? என்ற யோசனைகள் நம் மனதை கல்லாக மாற வைக்கும்.
இதனால் ஆதி அன்பு கொஞ்சம் கொஞ்சமாக நம்மில் இருந்து மறைந்து, சாதாரணமான பெயருக்கு கிறிஸ்தவர் என்ற நிலைக்கு வந்து விடுவோம். அதன்பிறகு ஆவிக்குரிய எந்த காரியங்களையும் மற்றவர்கள் கூறினால் மட்டுமே செய்வோம். ஆனால் அதை தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது அல்ல.
எனவே நமக்குள் இருந்த ஆதி அன்பின் நிலைக்கு திரும்புவோம். அதற்கு மற்றவர்களை பார்ப்பதை தவிர்த்து, நான் ஏன் இந்த ஊழியத்தை செய்யக் கூடாது? இப்ப ஏன் ஜெபிக்க கூடாது? பைபிள் படிக்க ஏன் நேரம் ஒதுக்க கூடாது? சுவிசேஷம் சொல்ல ஏன் போகக் கூடாது? என்ற கேள்விகளை ஒவ்வொரு நாளும் நமக்குள் எழுப்புவோம். அப்போது கொஞ்சம் கொஞ்சமாக நாம் ஆதி அன்பின் நிலைக்கு திரும்புவதை உணரலாம்.
– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.