0 1 min 3 mths

திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு சகோதரர் கூறுகிறார்…

உலக தோற்றத்திற்கு முன்பாக என்னையும் முன்குறித்த தேவன், தகுந்த நேரத்தில் இயேசுவே மெய்யான தேவன் என்பதை அறிந்து கொள்ள உதவி செய்தார். ஆனால் எங்கள் ஊரில் இரட்சிக்கப்பட்ட எனது நடவடிக்கைகள் பலருக்கும் பிடிக்கவில்லை. இதனால் எதிர்ப்புகளுக்கு எந்த குறையும் இருக்கவில்லை.

விவசாய தொழிலை செய்து வந்த எங்களின் தேவைகளுக்கு தேவன் போதுமானவராக இருந்தார். இந்நிலையில் எங்கள் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள விளைச்சலை பாதிக்கும் புழு, பூச்சிகளின் தாக்குதல் ஏற்பட்டது. இவற்றை அழிக்கும் வகையில் வழக்கமான பூச்சிக் கொல்லிகளை விவசாயிகள் பயன்படுத்தியும், எந்த பயனும் ஏற்படவில்லை. இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர்.

இது குறித்து, எங்கள் ஊரில் உள்ள தோட்டக் கலை மற்றும் விவசாய அலுவலகத்தில் விவசாயிகள் அறிவித்தனர். அரசு அதிகாரிகள் வந்து தோட்டங்களை பார்வையிட்டு, சில மாதிரிகளை எடுத்து சென்றனர்.

சில நாட்களுக்கு பிறகு, மேற்கண்ட புழு, பூச்சிகளை அழிக்கும் புதிய பூச்சிக் கொல்லிகளை தயாரித்துள்ளதாகவும், அதை விவசாயிகள் பயன்படுத்தி தங்களின் மகசூல் பாதிப்பை தவிர்க்கலாம் என்றும் அறிவித்தனர்.

எங்கள் பகுதியில் உள்ள எல்லா விவசாயிகளும் கடும் நஷ்டத்தை சந்தித்திருந்த நிலையில், இது பெரும் ஆறுதலை அளிக்கும் செய்தியாக இருந்தது. எங்கள் நிலத்திற்கு பக்கத்தில் உள்ள மற்ற விவசாயிகள் இது குறித்து என்னிடம் தெரிவித்தனர்.

ஆனால் அந்த காரியத்தில் எனக்கு பெரும் மனக்கலக்கம் ஏற்பட்டதால், இது தொடர்பாக தேவ சமூகத்தில் ஜெபித்தேன். அப்போது என்னை பாவங்களில் இருந்து மீட்ட தேவனுடைய இரக்கங்கள் என் நினைவிற்கு வந்தது.

எங்களுக்கு ஏற்பட்ட எவ்வளவோ நோய்களுக்கு, தேவனே வைத்தியராக இருந்துள்ள நிலையில், எங்கள் நிலத்தில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனைக்கும் அவரே நிச்சயம் தீர்வை அளிக்க கூடியவர் என்ற விசுவாசம் எனக்குள் ஏற்பட்டது.

உடனே தேவாலயத்திற்கு சென்று, இது குறித்து தேவ ஊழியரிடம் கூறினேன். நான் கூறிய காரியங்களை கேட்ட அவரும், விசுவாசத்தை அளிக்க கூடிய வார்த்தைகளை கூறி என்னை மேலும் உறுதிப்படுத்தினார். முடிவாக, இந்த காரியத்தை நாம் தேவ சமூகத்தில் கொண்டு செல்வோம். கர்த்தர் வல்லமையுள்ளவர் என்ற முடிவுக்கு வந்தோம்.

அடுத்த நாள் காலையில் மற்ற தோட்டத்தை சேர்ந்த விவசாயிகள், பூச்சிக் கொல்லி மருந்து வாங்க செல்வதால், கூட வருகிறாயா? என்று கேட்டனர். அவர்களுடன் போக மறுத்த நான், என்னிடம் ஏற்கனவே அதற்கான மருந்து இருக்கிறது என்றேன்.

எனது பதிலை கேட்டு ஆச்சரியப்பட்ட மற்ற விவசாயிகள், தங்களுக்கு தேவையான பூச்சிக் கொல்லி மருந்துகளை வாங்கி விட்டு வீடு திரும்பினர். நாளை எனது தோட்டத்திற்கு நான் பூச்சிக் கொல்லி மருந்தை தெளிக்க போகிறேன் என்று அவர்களிடம் கூறி இருந்தேன்.

எங்களுக்கு தெரியாமல் அப்படி என்ன மருந்தை இவன் கண்டுபிடித்தான் என்று பார்போம் என்று சிந்தித்த மற்ற விவசாயிகள், அடுத்த நாள் காலையிலேயே எனது தோட்டத்திற்கு வந்துவிட்டனர்.

காலையில் ஜெபத்துடன் எனது தோட்டத்திற்கு வந்த தேவ ஊழியர், மற்ற எல்லா விவசாயிகளும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, ஒரு கேனில் இருந்த கிணற்று தண்ணீரில் விரலை வைத்து, பரிசுத்தாவியின் அபிஷேகத்தில் நிறைந்து ஜெபித்தார்.

ஜெபத்தின் முடிவில், இதை வழக்கமாக பூச்சிக் கொல்லி மருந்தை கலந்து தெளிக்கும் இயந்திரத்தில் சாதாரண தண்ணீருடன் கலந்து பயிர்களுக்கு தெளிக்குமாறு தேவ ஊழியர் கூறினார். நானும் அப்படியே செய்தேன்.

நாங்கள் செய்வது ஒன்றும் புரியாதவர்களாக, மற்ற விவசாயிகள் பார்த்துக் கொண்டிருந்தனர். தேவ ஊழியர் வீட்டிற்கு சென்ற பிறகு, அங்கு நின்ற மற்ற விவசாயிகள் என்னை நோக்கி கேலி, கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.

நாங்கள் பூச்சிக் கொல்லி மருந்தை தெளித்த பிறகும், பூச்சிகளின் நடமாட்டம் இருக்கும் நிலையில், நீ வெறும் தண்ணீரை என்னமோ மந்திரத்தை கூறிவிட்டு தெளிக்கிறாயே? இது ஏதாவது பயன் தருமா? என்றனர். மற்ற விவசாயிகள் மருந்தை தெளித்துவிட்டு, நல்ல விளைச்சலை எதிர்நோக்கி காத்திருந்தனர்.

நாட்கள் கடந்தன. மற்ற தோட்டத்தில் தெளிக்கப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்தின் மூலம் பூச்சிகளின் நடமாட்டம் சற்றுக் குறைந்தது என்றாலும், முழுமையான விளைச்சலை பெற முடியவில்லை. ஆனால் தேவ ஊழியர் ஜெபித்து அளித்த தண்ணீரை விசுவாசத்தோடு தெளித்த எனது நிலத்தில், அதற்கு பிறகு எந்த ஒரு பூச்சியின் பாதிப்பையும் பார்க்க முடியவில்லை.

இதனால் அந்த முறை எனக்கு முழுமையான விளைச்சலை பெற முடிந்தது. அதை கண்டு ஆச்சரியப்பட்ட பக்கத்து நிலத்தை சேர்ந்த விவசாயிகள், உங்க கடவுள் இப்படி கூட செய்வாரா? என்று வாய்விட்டு கூற ஆரம்பித்துவிட்டனர்.

இந்த சம்பவத்தில் இருந்து நான் ஆராதிக்கும் தேவனுக்கு, இயற்கையின் மீதும், அதில் உள்ள எல்லா உயிரிகளின் மீதும் அதிகாரம் உண்டு என்ற உண்மையை, மற்ற எல்லா விவசாயிகளும் புரிந்து கொண்டனர். என் வாழ்க்கையில் தேவன் செய்த எண்ணிலடங்க நன்மைகளுக்காக கர்த்தரை நன்றியுள்ள இதயத்தோடு துதிக்கிறேன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *