0 1 min 5 mths

இன்றைய பெரும்பாலான தேவ ஆலயங்களின் முக்கிய போதனை தலைப்பாக இடம் பெறுவது ‘ஆசீர்வாதம்’ ஆகும். ஏனெனில் ஆசீர்வாதம் குறித்து பிரசங்கத்தை கேட்க, மக்களுக்கு விருப்பம் உண்டு. ஆனால் கிறிஸ்துவிற்காக பாடு அனுபவிக்க விரும்புவோர் வெகு சிலரே.

அதற்காக ஆசீர்வாதத்தை குறித்து பிரசங்கிப்பது தவறு என்றோ, அது தவறான போதனை என்றோ நாங்கள் கூறவில்லை. ஏனெனில் நம் தேவன், ஆசீர்வாதங்களின் ஊற்றாக இருக்கிறார். அதே நேரத்தில் இவ்வுலகில் கிறிஸ்துவிற்காக பாடு அனுபவிக்கும் போது, பரலோகத்தில் நமது பொக்கிஷத்தின் அளவு அதிகரிக்கிறது.

படித்தது:

கிறிஸ்துவின் பாடுகளினால் கிடைக்கும் பலனை குறித்து, சமீபத்தில் ஒரு புத்தகத்தில் படித்த சம்பவம் நினைவில் வருகிறது. முதலாம் நூற்றாண்டில் கிறிஸ்துவை மறுதலிக்க வேண்டும் என்பதற்காக கிறிஸ்தவர்கள் பல வகைகளில் துன்புறுத்தப்பட்டனர். அதில் ஒரு முறை தான் கடும்குளிரான இரவில், ஆடைகள் முழுவதும் உடலில் இருந்து நீக்கபட்டு, பனிக்கட்டிகள் மிதக்கும் ஆற்றில் கழுத்து வரை மூழ்கிய நிலையில் நிறுத்தி சித்திரவதை செய்து கொல்லும் முறை.

இதுபோல ஒரு முறை கிறிஸ்து விரோதிகளிடம் சிக்கிய 7 கிறிஸ்தவர்களுக்கு சித்திரவதை தண்டனை அளிக்கப்பட்டது. இந்த 7 பேரில் யார் வேண்டுமானாலும் கிறிஸ்துவை மறுதலித்து, மேற்கூறிய தண்டனையில் இருந்த தப்பி, அப்புறத்தில் மூடப்பட்ட அக்கினியில் குளிர் காய்ந்து, தனது உயிரை மீட்டு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

7 பேரில் ஒவ்வொரு நபராக, கிறிஸ்துவை மறுதலிக்குமாறு கேட்கப்பட்டது. அப்போது அவர்களை காவல் காக்கும் பணியில் சில ராணுவ வீரர்களும் அங்கிருந்து, இந்த சம்பவத்தை பார்த்து கொண்டிருந்தனர். இறுதியில் 6 பேர் கிறிஸ்துவிற்காக ஜீவன் கொடுக்க தயாரான போது, ஒருவர் மட்டும் கிறிஸ்துவை மறுதலிப்பதாக ஒத்து கொண்டார்.

அப்போது காவலுக்கு நின்ற ராணுவ வீரர்களில் ஒருவர், குளிர்ந்த ஆற்று நீரில் நின்ற 7 பேரையும் உற்று பார்த்த போது, அவர்களின் தலைகளின் மீது மின்னும் தங்க கிரீடங்கள் இருப்பது தெரிந்தது. அதில் கிறிஸ்துவை மறுதலிக்க தயாரான ஒருவரது கிரீடம் மட்டும் மேலும், கீழுமாக ஆடி கொண்டிருந்தது. மற்ற 6 பேரின் கிரீடங்களும் அவர்களின் மீது நிலையாக இருந்தன.

இதை கண்ட ராணுவ வீரனுக்கு, அந்த கிறிஸ்துவின் பாடு அனுபவிக்கும் போது கிடைக்கும் கிரீடத்தை பெறும் ஆவல் ஏற்பட்டது. கிறிஸ்துவை மறுதலித்த நபர் வெளியே வர, அந்த ராணுவ வீரன் தனது எல்லா உடைகளையும் களைந்து விட்டு, மற்ற 6 பேருடன் சேர்ந்து தானும் இயேசுவிற்காக இரத்தச் சாட்சியாக மரிக்க தயாராக இருப்பதாக கூறினான்.

அதை கண்டு ஆச்சரியப்பட்ட மற்ற ராணுவ வீரர்கள், அவனது ஆசைக்கு ஒத்துக் கொண்டனர். இரவில் குளிர் அதிகமாகவே, 6 பேரும் ரத்த சாட்சிகளாக மரித்தனர். கடைசியாக, கிறிஸ்துவிற்காக பாடு அனுபவிக்க தன்னை ஒப்புக் கொடுத்த அந்த ராணுவ வீரன், தன் தலை மீது அந்த கிரீடம் இருப்பதை கண்டு மகிழ்ச்சியோடு கிறிஸ்துவிற்காக உயிரை விட்டான்.

சிந்தித்தது:

மேற்கூறிய சம்பவத்தை பார்த்தவுடன், இன்று இயேசுவின் நாமத்திற்காக உயிரை கொடுக்க வேண்டிய தேவை இல்லாததால், நாம் எதுவும் செய்ய முடியவில்லை என்று தோன்றுகிறதா? அதற்கு நீங்கள் தயாராக இருந்தால் வழி இருக்கிறது.
இதற்காக நீங்கள் இதுவரை கேள்விப்படாத தேசத்திற்கோ, இடத்திற்கோ போக தேவையில்லை.

மாறாக, நாம் இருக்கும் இடத்தில் நமக்கு நன்கு அறிமுகமானவர்களின் இரட்சிப்பிற்காக உபவாசம் எடுத்து ஜெபிக்கலாம். நமக்கு அறிமுகமானவர்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், பேச்சு வாக்கில் தேவன் நமக்கு செய்த நன்மைகளை அவர்களுக்கு கூறலாம்.

நாம் பிறருக்கு இயேசுவை பற்றி கூறும் போது, அவர்கள் நம்மை கேலி, கிண்டல், பரிகாசம் செய்யலாம். அதற்காக அவர்களை எதிர்த்து பேசுவதோ, அவர்கள் வாழ்க்கை முறையில் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டவோ செய்யாமல், அதை சகித்து கொள்ளலாம். ஒரு புன்னகையோடு இது போன்ற சந்தர்ப்பங்களை எதிர்கொள்வது கூட ஒரு வகையில், இயேசுவிற்காக செய்யும் சிறிய அளவிலான தியாகம் தான்.

எனவே, கிறிஸ்துவிற்காக கடைசி நேரத்தில் ரத்த சாட்சியாக மரித்த அந்த ராணுவ வீரனை போல, இன்று இயேசுவை அறியாமல் பலரும், அவருக்காக பாடுகளை அனுபவிக்க கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி கொள்கிறார்கள்.

ஆனால் இயேசுவை சொந்த இரட்சகரான ஏற்றுக் கொண்ட நாம், அவருக்காக பாடு அனுபவிக்க தயாராக இருக்கிறோமா? நமக்காக தன் மானம், மரியாதை ஆகியவற்றை இழந்து, சொந்த உயிரையே நமக்காக அளித்த இயேசுவிற்காக, இதுவரை நாம் வாழ்க்கையில் என்ன தியாகம் செய்துள்ளோம்?

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *