
இயேசுவை சிலுவையில் அறைந்தது யார் என்று கேட்டால், கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, மற்ற மதத்தினர் கூட யூதர்கள் என்று உடனே கூறி விடுவார்கள். இந்நிலையில், எல்லா ஆண்டும் புனித வெள்ளி அன்று, பொதுவாக தேவாலயங்களில் கிறிஸ்துவின் மரணம், சிலுவையில் இயேசுவின் 7 மொழிகள், கொல்கத்தா பாடுகள் என்று பல கோணங்களில் இயேசுவின் சிலுவை மரணத்தை குறித்து பிரசங்கிக்கப்படுகிறது.
இதன்மூலம் இயேசுவை சிலுவையில் அறைந்தது யூதர்கள் என்பது வெளியோட்டமாக தெரியுமே தவிர, அவர்களை குறித்து அதிகமாக பலருக்கும் தெரிவதில்லை. எனவே அவர்களை குறித்து சற்று அறிந்துக் கொள்வோம்.
சிந்தித்தது:
இயேசு கிறிஸ்து உலகிற்கு வந்த நோக்கங்களில், மிகவும் முக்கியமானது அவரது சிலுவை மரணம். இதற்காக அவரது வாலிப பருவத்தை, இளம் இரத்தத்தை, தியாகம் செய்ய வேண்டி இருந்தது. அவர் வேறு ஜாதிகளின் மத்தியில் வந்து பிறக்காமல், தேவ அழைப்பை பெற்று கானானுக்கு சென்ற தேவனின் நண்பனான ஆபிரகாமின் சந்ததியிடமே சென்று பிறந்தார்.
ஆனால் அந்த இஸ்ரவேல் அல்லது யூதர்களால் அவரை அடையாளம் காண முடியவில்லை. இயேசுவின் மூன்றரை ஆண்டு கால ஊழியம் முழுவதையும் யூதர்கள் இடையே மட்டுமே செய்தார். இதை உறுதிப்படுத்தும் வகையில் யூதர்களை தேவ பிள்ளைகள் என்றும், மற்றவர்களை நாய்க்குட்டிகள் என்றும் ஒரு இடத்தில் (மத்தேயு:15.26) இயேசு குறிப்பிட்டுள்ளார்.
அப்படியென்றால் அந்த அளவிற்கு யூதர்களை, அதாவது ஆபிரகாமின் சந்ததியை தேவன் நேசித்துள்ளார். வரலாற்றுக் குறிப்புகளை வைத்து பார்க்கும் போது, இஸ்ரவேல் நாடெங்கிலும், இயேசு வாழ்ந்த காலத்தில் அவரால் ஏறக்குறைய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அற்புதங்கள் செய்யப்பட்டதாக (யோவான்:21.25) தெரிகிறது.
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, அவரை அவர்கள் தெய்வமாக வணங்கி இருக்க வேண்டுமே தவிர, அந்த காலத்தில் கொடூரமான கைதிகளுக்கு மட்டுமே அளிக்கப்படும் சிலுவை மரணத்தை அவருக்கு அளிக்குமாறும், குற்றமற்ற அந்த இரத்தத்தின் தண்டனை தங்களின் சந்ததியின் வருமாறும் ஏற்றுக் கொண்டிருக்கமாட்டார்கள்.
இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை குறித்து ஆராய்ந்தால், கிறிஸ்து என்ற இரட்சகரை குறித்து பழைய ஏற்பட்டு தீர்க்கத்தரிசனங்கள் கூறிய பல காரியங்களையும் அவர்கள் தவறாக புரிந்து கொண்டது தான் என்பது விளங்கும். அதில் ஒன்று மேசியா என்பவர் யூதக் கோத்திரத்தின் தாவீதின் குடும்பத்தில் பிறக்கும் ஒரு ராஜாவாக இருப்பார் என்பது. இயேசு உண்மையில் அந்த தகுதியோடு இருந்தும், அதை அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை.
இரண்டாவதாக, அடிமைத்தனத்தில் சிக்கித் தவித்த யூதர்களை விடுக்கும் நபராக மேசியா வருவார் என்று எதிர்பார்த்தனர். உண்மையில் அவர் பாவம், சாபம், அக்கிரமம், நோய், பிசாசு ஆகியவற்றின் அடிமைத்தனங்களில் இருந்து விடுவிக்க வந்தவர் என்பதை அறிந்து கொள்ளாமல், அப்போது இருந்த ரோமர்களின் அடித்தனத்தை தீர்க்கத்தரிசிகள் குறிப்பதாக எண்ணினர்.
இந்த குழப்பம் இயேசுவின் முன்னோடியான யோவான் ஸ்நாபகனுக்கு கூட இருந்ததாக வேதம் (லூக்கா:7.19) கூறுகிறது. மேற்கூறிய காரணங்களால் தேவனுடைய மிகப்பெரிய திட்டத்தை விளங்க இஸ்ரவேல் மக்கள் தவறிவிட்டதால், அவர்களின் இடத்திற்கு எந்த தகுதியும் இல்லாத நாம் அழைக்கப்பட்டோம்.
ஆபிரகாமின் பிள்ளைகளுக்காக இயேசுவின் சிலுவை மரணத்தின் மூலம் அளிக்கப்பட்ட ஆசீர்வாதத்தையும், விடுதலையையும் நாம் பெற்றோம். இப்படி கிறிஸ்துவை பின்பற்றி கிறிஸ்தவர்களாக மாறிய நாமும், இன்று இஸ்ரவேல் மக்களின் தகுதியை கிறிஸ்துவிற்குள் பெற்றுள்ளோம்.
வெளிப்புறமாக நாம் இஸ்ரவேல் மக்களின் வழக்கங்களையும், பழைய ஏற்பட்டு முறைமைகளையும் பின்பற்றாமல், ஆவிக்குரிய இஸ்ரவேலாக இருக்கிறோம். ஆனால் நம் வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களில், இதை மறந்து போவதால், இரட்சிப்பின் மேன்மையை சாதாரணமாக கருதுகிறோம்.
மேலும் நாம் ஒரு ஆவிக்குரிய இஸ்ரவேல் மக்கள் என்பதை மறந்து போவதால், ஒவ்வொரு பாவத்தை செய்யவும் நாம் பயப்படுவதில்லை. இதனால் இயேசுவின் நாட்களில் இஸ்ரவேல் மக்கள் எப்படி இயேசுவை யார் என்றும், அவர் வந்த நோக்கம் என்ன என்பதையும் அறியாமல், அவரை சிலுவையில் அரைந்தார்களோ, அதேபோல நாம் செய்யும் ஒவ்வொரு பாவத்தின் மூலம் அவரை சிலுவையில் அறைந்து வருகிறோம்.
இதற்கு முக்கியமான காரணம், அன்று இஸ்ரவேல் மக்கள் செய்த அதே தவறை இன்று நாமும் செய்கிறோம். அன்று ஆவிக்குரிய விடுதலையோடு கூட உலகத்திற்குரிய விடுதலையை அவர்களுக்கு அளிக்க இயேசு வந்தார் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. அதேபோல, இன்று நமது ஆவிக்குரிய வாழ்க்கையின் விடுதலையை முன்னிறுத்தியே, உலகத்திற்குரிய ஆசீர்வாதங்கள் உள்ளன என்பதை நாம் மறந்து போகிறோம்.
மேலும், தங்களை மீட்க வந்த உண்மையான இரட்சகரான இயேசுவை, கிறிஸ்துவாக ஏற்று கொள்ளாமல் விட்ட இஸ்ரவேல் மக்கள், இனி வரப் போகும் அந்தி கிறிஸ்துவை நம்பி ஏற்று கொள்வார்கள். அவனுடைய ஆட்சியில் ஏற்படும் காரியங்கள் குறித்து, நாம் வெளிப்படுத்தின விசேஷத்தில் காண முடிகிறது.
எனவே இஸ்ரவேல் மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி, நமக்கு ஏற்படாமல் இருக்க நாம் விழிப்புடன் இருக்க வேண்டியுள்ளது. இயேசுவின் இரண்டாம் வருகை எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம் என்ற தற்போதைய சூழ்நிலையில், அதில் கைவிடப்பட்டு போகாமல் நம் பரம அழைப்பையும், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் விடுதலையையும் பெற்று கொண்டு, அதை காத்து கொள்வோம்.
இதுவரை, நாம் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்று கொள்ளாவிட்டால், இயேசுவின் சிலுவை மரணத்தின் மூலம் கிடைக்கும் ஆவிக்குரிய விடுதலையையும், பரம பாக்கியத்தையும் அடைய தயாராவோம். இந்த பொன்னான தருணத்தை நாம் தவறவிட்டால், இயேசுவின் இரண்டாம் வருகையில் கைவிடப்பட்டு, இஸ்ரவேல் மக்களை போல அந்தி கிறிஸ்துவை வரவேற்க வேண்டிய நிலை நமக்கு ஏற்படும் என்பதில் எந்த சந்தேகமில்லை.
ஆவிக்குரிய உலகில் நாமே தேவனுக்கு பிரியமான இஸ்ரவேல் மக்கள் என்பதை உணர்ந்து, அதை எப்போதும் நினைவில் கொள்வோம். அவரை தினமும் நம் பாவங்களால் சிலுவையில் அடிக்காமல், அவரை தேவனாக வணங்குவோம். அப்போது நமக்காக ஆதாயம் செய்துள்ள பரலோக ராஜ்ஜியத்தில் நமக்காக சிலுவை தன் சொந்த உயிரையே தந்த இயேசுவோடு யுகாயுகமாக வாழ முடியும்.
– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.