
உலகின் பாவங்களை சுமந்து தீர்க்க தேவ ஆட்டுக்குட்டியாக வந்தவர் இயேசு கிறிஸ்து. ஆனால் உலகில் அவர் வாழ்ந்த போது, மனிதனாக இருந்தாரா? அல்லது தேவனாக இருந்தாரா? என்ற சந்தேகம் இன்றைய பல கிறிஸ்துவர்கள் இடையே பரவலாக இருக்கிறது.
ஏனெனில் நம் இணையதளத்தின் சில செய்திகளில் இயேசுவை போல நாம் மாற வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தோம். அதற்கு சாத்தியமே இல்லை என்று சிலர் பதில் கூறி இருந்தார்கள்.
மேலும் இயேசு தேவனாக இருந்ததால், இந்த உலகில் எல்லாவற்றையும் ஜெயித்தார். ஆனால் சாதாரண மனிதர்களான நாம் எல்லாவற்றையும் இயேசுவை போல எப்படி ஜெயிக்க முடியும் என்று சிலர் கேட்டிருந்தார்கள்.
கேட்டது:
சமீபத்தில் ஒரு போதகரின் பிரசங்கத்தில் கூட இயேசு இந்த உலகில் தனது தெய்வீக தன்மையை வெளிப்படுத்தினார் என்று கூறினார். இதில் இருந்து, மேற்கூறிய தலைப்பில் உள்ள சந்தேகம் இன்றைய பெரும்பாலான கிறிஸ்தவர்களுக்கு இருப்பது தெளிவானது. எனவே அதற்கான பதிலை பரிசுத்த வேதாகமத்தில் இருந்து அலசி ஆராய்ந்தோம்.
ஆராய்ந்தது:
இயேசுவின் பிறப்பிற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அவரது வாழ்க்கையை குறித்த தீர்க்கத்தரிசனங்கள் வெளியாகின. மேலும் அவரது பிறப்பில் எந்த ஆண் மகனின் இணைப்பும் இல்லை. அவர் பரிசுத்தாவியில் உருவாகி, மரியாளின் கருவில் வளர்ந்தவர் என மத்தேயு.1.20 வசனத்தில் தேவ தூதன் கூறுகிறார்.
எனவே உலகின் சாதாரண மனிதனின் பாவம் அவருக்குள் இருக்காது. மேலும் வளர்ந்த பிறகு, 40 நாட்கள் உபவாசம் எடுத்து களைத்து போயிருந்த இயேசுவிற்கு தேவ தூதர்கள் வந்து உதவி செய்ததாக மத்தேயு.4.11 கூறுகிறது.
இதேபோல, சீஷர்களுக்கு முன்பாக மறுரூபமான இயேசு உடன் மோசே, எலியா என்ற பழைய ஏற்பாட்டு மனிதர்கள் மலையில் பேசுகிறார்கள் என்று மாற்கு.9.4 வசனத்தில் காண்கிறோம்.
மத்தேயு.14.25 வசனத்தில் இயேசு கடலின் மீது நடந்து வந்து சீஷர்கள் இருந்த படகில் ஏறி கொள்கிறார். மேலும் இறந்து 4 நாட்களான லாசர், சிறு பெண், விதவையின் மகன் ஆகியோரை உயிரோடு எழுப்புகிறார்.
இப்படி மேற்கூறிய காரியங்களை சாதாரண மனிதரால் எப்படி செய்ய முடியும்? எனவே இயேசு உலகில் இருந்த போது, தேவனாகவே வாழ்ந்தார்கள் என்று பலரும் கூறுகிறார்கள்.
இந்நிலையில் 4 சுவிசேஷங்களையும் தெளிவாக வாசித்தால், இயேசு நம்மில் ஒருவரை போல, இந்த உலகில் வாழ்ந்தார் என்பதை காண முடியும். அதாவது ஒரு சாதாரண மனிதனாக வாழ்ந்துள்ளார்.
இயேசு கரு தரித்தது முதல் அவரை ஒரு தெய்வீகமான குழந்தை என்று காட்ட, மரியாள்-யோசேப்பு ஜோடி எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. இயேசுவும் நீங்கள் என்னை யார் என்று நினைக்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்கவில்லை. பின்னாட்களில் சீஷர்களிடம் தான் கேட்கிறார்.
12 வயதில் தேவாலயத்தில் வேத அறிஞர்களுடன் பேசும் போது, இயேசுவின் அறிவை கண்டு எல்லாரும் ஆச்சரியப்படுகிறார்கள். ஆனால் அங்கேயும் தான் ஒரு தெய்வ பிறவி என்று இயேசு யாருக்கும் கூறவில்லை. ஆனால் வளர்ந்த பிறகு, தன்னை மனுஷகுமாரன் என்று ஆங்காங்கே குறிப்பிடுகிறார்.
வனாந்தரத்தில் 40 நாட்கள் உபவாசம் எடுத்த போது, அவருக்கு பசியும் தாகமும் எடுத்ததாக வேதம் கூறுகிறது. அந்த நேரத்தில் தான் பிசாசு, அவரது தெய்வீக தன்மையை வெளிப்படுத்தி உணவை சாப்பிட ஆலோசனை கூறுகிறான். ஆனால் அப்படி செய்யாமல், இயேசு வசனத்தால் அதை மேற்கொள்ள, பிசாசு தோல்வி அடைகிறான்.
இஸ்ரவேலை காக்கிறவர் தூங்குவதும் இல்லை உறங்குவதும் இல்லை என்று வேதம் குறிப்பிடுகிறது. ஆனால் படகில் சீஷர்களுடன் செல்லும் இயேசு, ஒரு மனிதனை போல களைப்பில் தூங்குகிறார். தாகம் எடுத்த இயேசு, சமாரியாவைச் சேர்ந்த பெண்ணிடம் குடிக்க தண்ணீர் கேட்கிறார். சிலுவையில் தாகமாயிருக்கிறேன் என்று கூறினார்.
இயேசு தெய்வீக தன்மையை காட்ட நினைத்திருந்தால், வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, தண்ணீரை பிளந்த தேவனால் ஒரு மழை பெய்ய வைக்க முடியவில்லையா?
இயேசுவிற்கு எதிராக எத்தனையோ பேர் எதிர்த்து வந்தார்கள், அவரை கொலை செய்ய பார்த்தார்கள். கூட இருந்த சீஷர்களே கோபமடைந்து, அவர்களை வானத்தில் இருந்து அக்னி இறக்கி கொலை செய்யட்டுமா? என்று கேட்கும் அளவிற்கு சம்பவங்கள் நடந்தன. ஆனால் இயேசு எந்தொரு காரியத்திலும் தெய்வீகமாக நடந்து கொள்ளவில்லை.
ஏனெனில் ஒரு மனிதனால், தெய்வீகமான வல்லமையை பெற்று, மகிமையான காரியங்களை செய்ய முடியும் என்பதை நிரூபித்தார். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, கடல் மீது நடந்த இயேசுவிடம், தன் ஆசையை பேதுரு கூற, அதற்கு அனுமதி அளித்து, கடல் மீது நடக்க வைக்கிறார்.
மேலும் என்னை காட்டிலும் நீங்கள் மேன்மையானதை செய்வீர்கள் என்று கூறினார் இயேசு. அதேபோல, இயேசு பரமேறிய பிறகு, பேதுரு, பவுல் போன்ற சீஷர்களால் நடந்த அற்புதங்கள் நமக்கு வியப்பு அளிக்கின்றன. சால்வை போட்டவர்களுக்கும், நிழல் பட்டவர்களுக்கும் தெய்வீகமான சுகம் கிடைத்ததாக அப்போஸ்தலரின் நடபடிகள் புத்தகத்தில் காணலாம்.
சிந்தித்தது:
எனவே இந்த உலகில் இயேசு தன்னை ஒரு தேவ பிறவியாக எங்கேயும் காட்டி கொள்ளவும் இல்லை. அவர் தெய்வீகமானவர் என்பதை நிரூபிக்க தனது வல்லமையை வெளிப்படுத்துவும் இல்லை. இதன் பின்னணியில் இருக்கும் ஒரே காரணம், தன்னை பின்பற்றி வரும் எந்த மனிதனாலும், அவரை போல மாற முடியும் என்பதை நிரூபிக்கவே அப்படி வாழ்ந்தார்.
இயேசு காட்டிய வாழ்க்கை நெறிகளை நாம் பின்பற்றினால், அவரை போல மாற முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு மனிதனால் செய்ய முடியாத எந்த காரியத்தையும் இயேசு உலகில் செய்யவில்லை. எனவே அவருக்கென்னப்பா இயேசு, தெய்வம், நம்மால் முடியாது என்பது போன்ற காரணங்கள், நமக்குள் இருக்கும் அவிசுவாசத்தை வளர்க்க மட்டுமே உதவும்.
– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.