
அவர் படவிலிருந்து இறங்கின உடனே, அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் பிரேதக் கல்லறைகளில் இருந்து அவருக்கு எதிராக வந்தான். மாற்கு:5.2
இயேசுவின் ஊழியத்தில் பலரையும் சந்தித்து தேவ ராஜ்ஜியத்தை குறித்து அறிவித்தார். அதற்கு தடையாக இருந்த பிசாசின் கட்டுகளை விடுவித்தும், நோய்களை குணமாக்கியும், மக்களை தனது வார்த்தைகளுக்கு நேராக இயேசு திருப்பினார்.
பலரும் அவரது செய்கைகளை கண்டு அவரை ஏற்றுக் கொண்டனர். சிலர் மறுதலித்து ஒதுங்கினர். சிலர் அவரை கொலை செய்ய வகை தேடினர். இயேசுவின் மீது இப்படி பலவிதமான கருத்துக்கள் மக்கள் இடையே இருந்தபோதும், பிசாசிற்கும் அவனது கூட்டத்திற்கும் அவர் மீது தொடர்ந்து பயம் இருந்தது.
மேற்கூறிய வசனத்தில் வரும் மனிதனை குறித்து நாம் ஏற்கனவே ஒரு தினத்தியானத்தில் சுருக்கமாக தியானித்து இருந்தாலும், அதை விரிவாக காண்பது நமது ஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு உதவும் என்று நம்புகிறோம்.
ஏனெனில் அந்த பிசாசு பிடித்த மனிதனுக்குள் இருந்த பல காரியங்களும், இன்றைய கிறிஸ்தவர்கள் இடையே மறைமுகமாக கிரியை செய்கின்றன. எனவே அவற்றை நாம் தெளிவாக அறிந்து கொள்வதன் மூலம் மேற்கூறிய பிசாசின் வல்லமையை இனங்கண்டு கொள்வது நமக்கு எளிதாக இருக்கும்.
மாற்கு:5.1-ம் வசனத்தை வாசிக்கும் போது, இயேசு கதரேனருடைய நாட்டிற்குள் சென்று தேவனுடைய ராஜ்ஜியத்தை குறித்து பிரசங்கிக்க விரும்புவதை காண முடிகிறது. ஆனால் அந்த ஊரில் இருந்து அவரை வரவேற்க வரும் முதல் நபரே இந்த பிசாசு பிடித்த மனிதன் தான்.
சாதாரண மனிதர்கள் கூட செய்யாத காரியங்களை கூட, முதல் சந்திப்பிலேயே அந்த பிசாசு பிடித்த நபர் செய்கிறான் என்பதை அதற்கு அடுத்தடுத்த வசனங்களில் காண முடிகிறது. இதில் இருந்து நாம் ஒரு ஊருக்கு சுவிசேஷம் கூற சென்றால், நம்மை முதலில் வரவேற்க வருவது பிசாசாக தான் இருக்கும் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
எனவே நாம் தகுந்த முறையில் ஜெபித்துவிட்டு பரிசுத்தாவியின் வல்லமையுடன் செல்லாத பட்சத்தில், அது நம்மை மேற்கொண்டு, தேவ பணிகளை தடை செய்துவிடும் வாய்ப்புள்ளது. ஜெபித்து பரிசுத்தாவியில் நிரம்பி சுவிசேஷம் கூற செல்லும் போது, எவ்வளவு பெரிய பிசாசாக இருந்தாலும், நம் கால்களில் வந்து விழும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
இன்றைய கிறிஸ்தவர்கள் இடையே சுவிஷேசம் அறிவிப்பதில் அதிக ஆர்வத்தை காண முடிகிறது. கைப்பத்திரிக்கை, மருத்துவமனை ஊழியம், ஜெயில் ஊழியம், கிராம ஊழியம் என்று பல ஊழியங்களை செய்ய விருப்பம் உண்டு. அதற்காக சிலர் கஷ்டப்படவும் செய்கிறார்கள். ஆனால் அதற்கு எந்த அளவிற்கு பலன் கிடைக்கிறது என்று பார்க்கும் போது, துக்கம் உண்டாகிறது. ஏனெனில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது இல்லை.
இதற்கு என்ன காரணம் என்பதை குறித்து பலரும் யோசிப்பதை விட்டுவிட்டு, நாம் வசனத்தை விதைத்து விட்டோம். எப்போதாவது பலன் தரட்டும் என்று சாதாரணமாக விட்டு விடுகிறார்கள். ஆனால் உண்மையில் இயேசுவின் ஊழியத்தை நாம் கவனித்தால், அவர் எந்த இடத்திலும் அப்புறம் பலன் தரட்டும் என்று விட்டு சென்றதாக காண முடிவதில்லை.
இயேசு சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் குவிந்தார்கள். அவரது கிரியைகள், வார்த்தைகள், உவமைகள், பழமொழிகள் என்று எல்லாமே தேவனுடைய ராஜ்ஜியத்தை குறிப்பதாகவே இருந்தன. இந்நிலையில் நாம் செய்யும் ஊழியங்களில் வளர்ச்சி இல்லை என்றால், அதற்கான காரணத்தை நாம் கண்டறிய வேண்டியது அவசியமாக உள்ளது.
இயேசு இரவு முழுவதும் ஜெபிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தார் என்று சுவிஷேசங்களில் வாசிக்கிறோம். இதனால் அவர் எப்போதும் பரிசுத்தாவியின் துணையுடன் ஊழியத்தை செய்துள்ளார். எனவே எந்த மாதிரியான தேவ ஊழியத்திற்கு சென்றாலும், நன்றாக ஜெபித்துவிட்டு, பரிசுத்தாவியின் துணைக் கொண்டு செய்வது தான் பலன் மிகுந்ததாக இருக்கும். அப்போது இயேசுவை போல, எதிர்த்து வரும் எல்லா பிசாசின் வல்லமைகளையும், ஒன்றுமில்லாமல் செய்து ஜெயத்தோடு ஊழியம் செய்ய முடியும்.
இதுவரை நாம் செய்து வரும் ஊழியங்களில், எதிர்பார்க்கும் பலன் கிடைக்கவில்லை என்றால், அதில் உள்ள இந்த குறையை நாம் நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளது. கடமைக்காக ஜெபித்துவிட்டு செல்லாமல், உண்மையாக தேவனை நோக்கி பார்க்கும் போது, அவர் நமக்கு சமீபமாக வந்து உதவுகிறார். ஊழியத்தில் ஜெயத்தை தருகிறார்.
(பாகம்-2 தொடரும்)