0 1 min 10 mths

மாற்கு:5.3,4 ஆகிய வசனங்களை வாசிக்கும் போது, பிசாசு பிடித்த நபரின் மற்றொரு சுபாவம் சுட்டிக் காட்டப்படுகிறது. அந்த மனிதனை எந்த சங்கிலிகளாலும், விலங்குகளாலும் அடக்க முடியவில்லை என்று காண்கிறோம். அப்படியே சங்கிலிகளாலும், விலங்குகளாலும் கட்டி வைத்தாலும், அதை தகர்த்து போடும் தன்மை அவனுக்குள் இருந்தது என்று காண்கிறோம்.

இதை ஆவிக்குரிய முறையில் இயேசு கிறிஸ்துவின் அன்பை சுட்டிக் காட்டுவதாக உள்ளது. ஏனெனில் நாம் பாவத்தின் கட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, கிறிஸ்துவின் அன்பின் கட்டுகளால் கட்டப்பட்டிருக்கிறோம். பவுல் கூறும் போது, நான் கிறிஸ்துவின் அன்பினால் சுவிசேஷத்திற்காக கட்டப்பட்டிருக்கிறேன் (2 தீமோத்தேயு:2.9) என்று கூறுகிறார்.

கிறிஸ்துவின் அன்பினால் கட்டப்படுவது என்பது ஒரு அடிமைத்தனம் என்று நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் ஒருவர் மீது நமக்கு அளவுக்கு அதிகமான அன்பு இருக்கும் போது, அவர் கூறும் எல்லா காரியங்களையும் நாம் அங்கீகரிப்போம். அதுபோலவே இயேசுவின் மீதான அன்பு அதிகரிக்கும் போது, தேவ வசனத்திற்கு முழுமையாக நம்மையே ஒப்புக் கொடுக்கிறோம்.

அப்போது பரிசுத்தாவி நமக்குள் இருக்கும் பாவத்தை குறித்து உணர்த்தி, நம்மை பரிசுத்தமாக மாற்றுகிறார். திரும்ப அந்த பாவ சிந்தனை, யோசனை ஆகியவை நம்முள் வரும் போது, அவர் நம்மை உணர்த்தி, அதில் ஜெயம் கொள்ள செய்கிறார். நான் இயேசுவின் பிள்ளை, இனி அந்த பாவத்தை செய்யமாட்டேன் என்ற மனஉறுதியுடன் வாழ முடிகிறது. இந்த மாற்றத்தை தருவது தான் கிறிஸ்துவின் அன்பின் கட்டு.

ஆனால் இந்த அன்பின் கட்டுகளை, நம்மில் பலரும் அவ்வப்போது தகர்த்துப் போடுகிறோம். இதனால் நாம் விட்ட பாவங்களில் திரும்பவும் சிக்கி தவிக்கும் நிலை உருவாகிறது. இதனால் தேவன் விரும்பும் பரிசுத்த வாழ்க்கையை நமக்குள் கொண்டு வர முடியாமல் போகிறது. மேலும் ஒரு நிலையற்ற ஆவிக்குரிய வாழ்க்கையினால், மற்றவர்களுக்கு முன்னால் நம்மால் தேவனுக்காக சாட்சியாக நிற்க முடிவதில்லை.

திடீர் பரிசுத்தவானாகவும், திடீர் பாவியாகவும் மாறி வாழ்ந்து வந்தால், நாம் இயேசுவின் 2ம் வருகையில் செல்ல முடியாது. எனவே இயேசுவின் அன்பினால் கட்டப்பட, பவுலை போல நம்மையே ஒப்புக் கொடுப்போம். அதற்கு தடையாக நிற்கும் எந்த மாதிரியான பாவத்தையும் நம்மில் இருந்து வேரறுப்போம். இல்லாத பட்சத்தில் அந்த பிசாசு பிடித்த மனிதனை போல, நமது நிலையும் பரிதாபமாக மாறிவிடும்.

மேலும் கட்டுகளை தகர்த்து எறியும் பழக்கம், நமது கீழ்படியாமையை குறிப்பதாகவும் உள்ளது. இந்த உலகில் நமக்கு சரியான பாதையை காட்ட, பெற்றோர், தேவ ஊழியர்கள், விசுவாசிகள், சபை என்று ஒரு நீண்ட பட்டியலையே தேவன் அளித்துள்ளார். நாம் தவறான பாதைகளுக்கு செல்லும் போது அல்லது செல்ல விளையும் போது, மேற்கூறிய இவர்களால், தடுக்கும் வகையில் உபதேசிக்கப்படுகிறோம்.

ஆனால் இன்றைய இளம் தலைமுறைக்கு மற்றவர்களின் உபதேசம் பிடிப்பதில்லை. அதிலும் தாங்கள் செய்வதே சிறந்தது என்று நம்புவோர் இடையே, நல்ல காரியங்களை உபதேசிக்கும் மனிதர்கள் பகைவர்களாகவே எண்ணப்படுகின்றனர். இதனால் சில நேரங்களில், நமக்கு அதிகம் பழக்கமில்லாத, அனுபவமில்லாத பாவ வழிகளில் எளிதாக நுழைந்து, அதற்கு அடிமைப்பட்டு விடுகிறோம்.

பாவத்திற்குள் நுழைவது எளிது என்றாலும், அதிலிருந்து விடுதலை பெறுவது என்பது மிகவும் கடினம். தேவனுடைய தயவு இருந்தால் மட்டுமே அதிலிருந்து விடுதலை பெற முடியும். இதை கூறும் போது, இளம் தலைமுறையினரை நாங்கள் குற்றச்சாட்டுவதாக எண்ண வேண்டாம். கிறிஸ்துவின் அன்பில் இருந்து யாரும் பின்வாங்கி போய், உலகத்தோடு சேர்ந்து அழிவை காண கூடாது என்ற எண்ணத்தில் தான் இதை கூறுகிறோம்.

இயேசு சந்தித்த லேகியோன் பிசாசு தாக்கிய மனிதனை பாருங்கள், அவனுக்கு உதவ பலரும் வந்தார்கள், ஆனால் அவனது பிசாசின் கட்டுகளில் இருந்து அவனை மீட்க முடியவில்லை. அவன் எவ்வளவு ஆண்டுகளுக்கு இதுபோல கஷ்டப்பட்டான் என்பதை வேதம் குறிப்பிடவில்லை என்றாலும், அந்த ஊர் மக்களுக்கே அவன் பெரிய ஒரு தொல்லையாக இருந்திருக்க கூடும் என்று கருதலாம்.

எனவே நாமும் தேவனுக்கு கீழ்படியாமை காட்டி, தேவ ஊழியர்கள், பெற்றோர், விசுவாசிகள் ஆகியோருக்கு விரோதமாக நிற்கும் போது, இதே போன்ற ஆவிக்குரிய அனுபவத்தை தான் பெறுகிறோம் என்பதை மறக்க கூடாது. எனவே தேவனுக்கும், அவரது வசனத்திற்கு முதலில் கீழ்படிவோம். மற்றவர்களுக்கு கர்த்தருக்குள் கீழ்படிவோம். அது நம் வாழ்க்கையில் பெரிய ஒரு ஆசீர்வாதத்தை கொண்டு வரும். மேலும் பிசாசின் வல்லமைகளில் இருந்து நம்மை அகற்றி, கிறிஸ்துவின் அன்பின் கட்டுகளில் நிலைநிற்க நமக்கு உதவும்.

(பாகம்-4 தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *