
மாற்கு:5.5ல் அவனுக்குள் கூக்குரலிட்டு திரியும் அனுபவம் இருந்தது என்று காண்கிறோம். அதுவும் ஓய்வின்றி இரவும், பகலும், மலைகளிலும், கல்லறைகளிலும் இருந்து கூக்குரலிட்டு திரிந்துள்ளான்.
இதை நாம் உலகில் காணும் சண்டைச் சச்சரவுகளுக்கு குறிப்பாக எடுத்துக் கொள்ளலாம். இரட்சிக்கப்படுவதற்கு முன் பெரிய சண்டைக்காரனாகவும், கோபக்காரனாகவும் இருந்த பலரும், இரட்சிக்கப்பட்ட பிறகு சாந்தமாக மாறிவிட்டதாக, பலரின் சாட்சிகளை நாம் கேட்டிருப்போம்.
ஆனால் சிலர், பெயரளவில் கிறிஸ்தவர்களாக மாறுகிறார்களே தவிர, மனதளவில் அந்த பழைய மனிதனை முழுமையாக சிலுவையில் அறைவது இல்லை. இதனால் சபையில் ஆட்டுக்குட்டிகளாக வரும் இவர்கள், வெளியே செல்லும் போது ஓநாய்களாக மாறி விடுகிறார்கள். இவர்களை எதிர்த்து வரும் யாரையும் பீறிப் போடும் அளவிற்கு பேசி விடுகிறார்கள்.
சிலர் அப்படியெல்லாம் செய்யாவிட்டாலும், “நான் மட்டும் இரட்சிக்கப்படாமல் இருந்திருந்தால்…” என்று ஒரு வரியைக் கூறி, தாங்கள் இரட்சிக்கப்பட்ட சம்பவத்தை ஒரு பேரிழப்பு போல கூறுவார்கள். பழைய மனிதனை முழுமையாக சிலுவையில் அறைந்தவர்களுக்கு, அவனது ஞாபகம் வராது. எனவே இப்படி கூறுகிறவர்கள் கூட, தங்களை முழுமையாக தேவனிடம் ஒப்புக் கொடுக்க வேண்டியுள்ளது.
வேறு சிலர் சபையிலும், வெளிலும் குழப்பம் ஏற்படுத்தும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். தனக்கு எந்த தொடர்பும் இல்லாத காரியங்களில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்திவிட்டு பின்வாங்கி கொள்வார்கள். இது கூட ஒரு கூக்குரலின் ஆவி தான்.
இதனால் சமாதானம் பண்ணுகிறவர்களாக இருக்க வேண்டிய அவர்கள், சமாதானத்தை கெடுக்கிறவர்களாக மாறுகிறார்கள். இதன்மூலம் தேவனுடைய புத்திரர்கள் என்ற பெயரை இழந்து, பிசாசின் புத்திரராக மாறுகிறார்கள்.
லேகியோன் பிசாசு பிடித்த நபர், கல்லறைகளில் கூக்குரலிட்டதாக வாசிக்கிறோம். இது பின்மாற்ற அனுபவத்தில் சென்ற நபர்களுடனான ஐக்கியத்தை காட்டுகிறது. தங்களின் பாவ மனிதன் சிலுவையில் அறைய ஒப்புக் கொடுக்காத நபர்களுக்கு, பரிசுத்தமாக ஜீவனுக்கு செல்லும் பரலோக வாசிகளுடனான ஐக்கியம் இருக்காது. பாவத்தின் சம்பளமாகிய மரணத்தை நோக்கி ஓடும் பின்மாற்றத்தில் உள்ளவர்களுடன் தான் ஐக்கியம் வைத்திருப்பார்கள்.
இதனால் உலகத்திற்கு மரித்து, கிறிஸ்துவிற்குள் உயிர்த்தெழுந்து ஜீவனை பெற விரும்பாமல், மரித்த அனுபவத்திலேயே இருந்து மற்றவர்களுக்கும் தொல்லையாக இருப்பார்கள். தேவாலயத்தில் சிறிய காரியங்களுக்கு கூட பெரிய அளவில் சண்டை சச்சரவுகளை உண்டாக்கி சமாதானத்தை கெடுக்கும் நபர்கள், இந்த குழுவை சேர்ந்தவர்கள் எனலாம்.
அடுத்தப்படியாக மலைகளில் லேகியோன் கூக்குரலிட்டதாக வாசிக்கிறோம். இது ஜெபத்தில் ஏற்படும் குழப்பமான நிலையை குறிக்கிறது. சிலரின் ஜெபத்தில் எந்தவிதமான ஆவிக்குரிய தேவைகளும் இருக்காது. உலகில் செல்வச் செழிப்போடு வாழ்ந்து, மரிக்க தேவையான காரியங்களையே ஜெபிப்பார்கள். இந்த ஜெபத்தை தேவன் கேட்கிறார் என்பதற்காக, அவருக்கு விருப்பமானது என்று கூற முடியாது.
ஏனெனில் நாம் எப்போது கீழானவைகளை அல்ல, மேலானவைகளை தேட வேண்டியவர்கள். உலக தேவைகளையே முன்நிறுத்தி ஜெபித்துவிட்டு, ஆவிக்குரிய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக விண்ணப்பிக்காமல் இருப்பது மாபெரும் தவறு எனலாம். இது தேவனுடைய சமூகத்தில் கூக்குரலாகவே கேட்கப்படுகிறது.
இயேசுவின் மணவாட்டியாக அழைக்கப்பட்ட நமக்குள் இது போன்ற எந்த கூக்குரலும் இருக்க கூடாது. நமது சத்தம் இன்ப சத்தமாக மணவாளனாகிய இயேசுவின் காதுகளில் கேட்க வேண்டும் (உன்னதப்பாட்டு:2.14). அப்போது அவர் நமக்கு பதிலளித்து, தமது வருகையில் நம்மையும் சேர்த்துக் கொள்வார்.
(பாகம்-5 தொடரும்)