0 1 min 1 week

இந்த வேதப்பாடத்தில் லேகியோன் பிசாசின் தன்மைகளை குறித்து நாம் படித்து வரும் நிலையில், மாற்கு:5.9-ல் பிசாசு பிடித்த மனிதனிடம் இயேசு பெயரை கேட்கிறார். அதற்கு அவன், நாங்கள் அநேகர் என்பதால், என் பேர் லேகியோன் என்று கூறுகிறான்.

லேகியோன் என்பதற்கு 6000 என்று பொருள். அப்படியென்றால், அந்த மனிதனுக்குள் 6000 பிசாசின் ஆவிகள் கிரியை செய்துக் கொண்டிருந்தன என்பதை அறியலாம். எனவே அவனது உண்மையான பெயரை குறிப்பிடாமல், அவனுக்குள் இருந்த பிசாசின் எண்ணிக்கையை தான் இயேசுவிடம் கூறுகிறான்.

இதிலிருந்து அவனால் எந்தவொரு காரியத்திலும் சொந்தமாக செயல்பட முடியாத நிலைக்கு, அந்த பிசாசின் ஆவிகள் கட்டி வைத்திருந்தன என்று அறியலாம். ஒரு மனிதனுக்குள் 6 ஆயிரம் பிசாசின் ஆவிகள் எப்படி கிரியை செய்ய முடியும்? என்று உங்களுக்குள் ஒரு கேள்வி எழக்கூடும்.

உண்மைதான், இவை அனைத்தும் ஒரே நாளில் அவனை பிடித்தவை என்று கூற முடியாது. பிசாசு, ஒரு மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக தான் அடிமைப்படுத்துகிறான். இதனால் தான் நாம் ஒரு குறிப்பிட்ட பாவத்தில் விழுந்தவுடனேயே தேவனால் உணர்த்தப்படுகிறோம். தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியும் போது, பிசாசின் அடிமைத்தனப் பிடிகள் நம்மில் இருந்து விலகுகிறது.

இந்நிலையில், ஒவ்வொரு பாவப் பழக்கங்களுக்கு பின்னாலும் ஒரு அசுத்தாவி கிரியை செய்கிறது. ஒரு குறிப்பிட்ட பாவத்தை நாம் செய்ய துவங்கும் போது, அந்த ஆவி நமக்குள் நுழைகிறது. முதலில் நாம் கூறியபடி, அது கேட்கிறது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல நம்மையே அது அடிமைப்படுத்தி, அதன் ஆலோசனையில் நம்மை நடத்துகிறது.

எடுத்துக்காட்டாக, ஒரு மனிதன் குடிப்பழக்கத்தை துவங்கும் போது, அவன் நினைக்கும் போது குடிக்கிறான். மற்ற நேரங்களில் அதைப் பற்றிய நினைவு அவனுக்குள் இருப்பதில்லை. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, அவனுக்குள் குடித்தால், எல்லாவற்றையும் மறக்கலாம். ஒரு இன்பம் கிடைக்கும் என்று உள்ளே நுழைந்துள்ள அசுத்தாவி ஆலோசனை அளிக்கிறது.

அதற்கு அவன் கீழ்படிந்து செயல்படும் போது, பிற்காலத்தில் அவனை குடிப்பழக்கத்திற்கு அடிமையாக மாற்றி விடுகிறது. இதனால் தான் பலரும், அந்த பாவத்தை விட முடியவில்லை. நான் செய்யக் கூடாது என்று நினைத்தால் கூட, எனக்கே தெரியாமல் செய்து விடுகிறேன் என்றெல்லாம் கூறுகிறார்கள்.

மேலும் அந்த குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒரு மனிதன், பிற்காலத்தில் மற்ற பாவங்களுக்கும் அடிமையாக மாறுவதை காணலாம். ஒரு கட்டத்தில் அவனிடம் உள்ள எந்த பழக்கத்தில் இருந்தும் வெளியே வர முடியாத நிலைக்கு, அந்த அசுத்த ஆவிகள் அவனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, தேவனிடம் செல்லாதபடி தடுத்து விடுகின்றன.

இது போன்ற பாவத்தின் அசுத்த ஆவிகள் உள்ளே இருப்பவர்களுக்கு, தாங்கள் செய்வது ஒரு பாவம் என்ற குற்ற உணர்வே இருக்காது. அதேபோல, நாம் அந்த குறிப்பிட்ட பாவத்தை குறித்து அவருக்கு எடுத்துக் கூறினால், அதற்கு எதிர்த்து நிற்பதோடு, நாம் எதிர்பார்க்காத சாக்குப்போக்குகளையும் தேவையில்லாத வாதங்களையும் செய்வார்கள்.

அதேபோல நம் உடலில் பலவீனத்தை ஏற்படுத்தும் அசுத்த ஆவிகள் உள்ளன. வேதத்தில் பல இடங்களில், இயேசு பிசாசுகளை துரத்திய பிறகு, அவர்களின் உடல் நோய்கள், பலவீனங்கள் நீங்கியதாக காண்கிறோம்.

எனவே பல நாட்களாக நமக்குள் ஒரு குறிப்பிட்ட பலவீனம் இருந்து, அது எந்த மருந்து, மாத்திரைகளாலும் குணமாகவில்லை என்றால், அதன் பின்னணியில் ஒரு அசுத்த ஆவி கிரியை செய்கிறது என்பதை அறியலாம்.

அப்படி நமக்கு வந்துள்ள பலவீனம் ஒரு அசுத்தாவியின் கிரியை என்றால், அது நம்மை தேவனிடம் இருந்து அகற்றுவதாகவே செயல்படும். குடும்ப ஜெபம், தனி ஜெபம், வேதம் வாசிப்பு, ஜெபக் கூட்டத்தில் பங்கேற்றல் போன்ற சந்தர்ப்பங்களில், அந்த பலவீனம் அதிகரிக்கும். இதில் இருந்து அது அசுத்த ஆவியின் வல்லமை என்பதை அறிந்து கொள்ளலாம்.

எனவே நமக்குள் எந்த உடல் பலவீனங்கள் ஏற்பட்டாலும், தேவ சமூகத்தை அலட்சியப்படுத்தக் கூடாது. அப்படி செய்தால், அவை நம்மை மேற்கொண்டு அடிமைப்படுத்திவிடும்.

இப்படி ஒவ்வொரு பிசாசின் ஆவிகளாக அந்த மனிதனுக்குள் நுழைந்து, அவை எண்ணிக்கையில் அதிகரித்து உள்ளன. அவனுக்குள் செயல்படும் ஒவ்வொரு அசுத்த ஆவியும், தங்கள் விருப்பம் போல அவனை நடத்தி வந்தபடியால், நாம் இந்த வேதப்பாடத்தில் முன்பே பார்த்தது போல, சாதாரண மனிதர்களுடன் அவனால் வசிக்க முடியவில்லை.

உடை இல்லாமல், எந்த கட்டுப்பாட்டிற்குள்ளும் நிற்காமல், கல்லறைகளில் வசித்து, மனிதர்கள் விரும்பாத கூக்குரலிட்டு வாழ்ந்து வந்துள்ளான். அந்த ஒரே ஒரு மனிதனை பிசாசின் ஆவிகளிடம் இருந்து விடுவிக்க, இயேசு அங்கு சென்றதாக (மாற்கு:5.21) காண்கிறோம்.

அந்த மனிதனை போல, நமக்குள் விட முடியாத பாவப் பழக்கங்கள் இருக்கிறதா? தீரான நோய்கள் நம்மை பலவீனப்படுத்துகிறதா? அப்படியென்றால், இன்றே இயேசுவிடம் நம்மை ஒப்புக் கொடுப்போம். நம் இரக்கம் உள்ள இயேசு, நமக்குள் கிரியை செய்யும் பாவப் பழக்கங்கள், நோய்கள் ஆகியவற்றில் இருந்து நம்மை விடுவிக்க விரும்புகிறார்.

எனவே நம்மால் மேற்கொள்ள முடியாத பாவத்தை, அவரிடம் அறிக்கையிடுவோம். அப்போது அவற்றை நம்மில் இருந்து நீக்கி நம்மை அவர் பரிசுத்தப்படுத்துகிறார். இயேசுவின் வருகைக்கு பிறகு, லேகியோன் பிசாசுகள் நீங்கிய அந்த மனிதன், அவரை குறித்து ஊரெங்கும் சாட்சிக் கொடுக்கிறான் (மாற்கு:5.20). அதேபோல தேவனிடம் இருந்து நாம் விடுதலையைப் பெற்று, இயேசுவின் சாட்சிகளாக மாறுவோம்.

(பாகம் – 8 தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *