0 1 min 3 mths

சபைகளுக்கு அசுத்தாவி பிடித்தவர்கள் வருவதும், அவர்கள் விடுதலை பெறுவதையும் பார்த்திருப்போம். பிசாசு பிடித்த நபர்களிடம் ஊழியர்கள் கேட்கும் போது, பெரும்பாலும் இறந்த யாராவது பெயர்களை தான் கூறுகின்றன.

இதனால் இறந்தவர்களின் ஆவிகள் இந்த உலகிலேயே உலா வருகிறது என்ற நம்பிக்கை பலருக்கும் உண்டாகிறது. இது குறித்து ஊழியர்களிடம் கேட்டால், இரு வேறு மாதிரியான விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.

இறந்தவர்களின் ஆவிகள் திரும்ப வராது. அவை பிசாசின் ஏமாற்றும் ஆவிகள் என்று ஒரு தரப்பும், தகுந்த இரட்சிப்பை அடையாத இறந்தவர்களின் ஆவிகள் அல்லது நிறைவேறாத ஆசைகள் உள்ள ஆவிகள், இந்த உலகில் உலா வரும் என்று மற்றொரு தரப்பும் கூறுகிறது.

கேட்டது:

இது குறித்து கேட்டால், பெரும்பாலானோர், பரிசுத்த வேதாகமத்தில், சாமுவேல் இறந்த பிறகு ஆவியாக வந்து பேசும் சம்பவத்தை குறிப்பிடுகிறார்கள். இதை 1 சாமுவேல் 28ம் அதிகாரத்தில் காண்கிறோம்.

தேவனை விட்டு பின்வாங்கி, பொல்லாத ஆவியின் ஆலோசனையில் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த ராஜா சவுல், போருக்கு வந்த பெலிஸ்தரை கண்டு பயந்து, அஞ்சனம் பார்க்கிற பெண்ணிடம் சென்று சாமுவேலை எழுப்ப கூறுகிறார். சாமுவேலின் ஆவியும் வந்து சவுலுடன் பேசுவதாக வேதம் குறிப்பிடுகிறது.

இங்கும் மேற்கூறிய அதே ஆவி பிரச்சனை தான் வருகிறது. எழும்பி வந்த ஆவி சாமுவேலின் ஆவி அல்ல என்று ஒரு தரப்பு வாதிடுகிறது. ஏனெனில் தேவனுக்காக உண்மையாக ஊழியம் செய்த ஒருவரின் இறந்த ஆவியை ஒரு அஞ்சனம் பார்க்கிற பெண்ணால் எப்படி அழைக்க முடியும்?

அப்படியே அழைத்தாலும், அந்த ஆவி எப்படி வரும்? வரவே வராது என்று ஒரு சிலர் கூறுகிறார்கள். அப்படியென்றால், வந்தது எந்த ஆவி என்று கேட்டால், அது ஏமாற்றும் பிசாசின் ஆவி என்றும், அது சவுலை ஏமாற்றியது என்றும் கூறுகிறார்கள். ஆனால் மற்றொரு குழுவினர் இந்த கருத்தை மறுக்கிறார்கள். இந்நிலையில் வந்தது சாமுவேலின் ஆவியா? அல்லது பிசாசின் ஆவியா? என்ற குழப்பம் நீடிக்கிறது.

சிந்தித்தது:

என்னை பொறுத்த வரை, பரிசுத்த வேதாகமத்தில் நம்மை குழப்பும் எந்த காரியங்களும் இல்லை. எல்லாவற்றிற்கும் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளன.
அதேபோல மேற்கூறிய சாமுவேலின் சம்பவத்திலும் தெளிவான விளக்கத்தை பரிசுத்த வேதாகமம் அளித்துள்ளது. 1 சாமுவேல்.28.11 வசனத்தில் அஞ்சனம் பார்க்கும் பெண்ணிடம் சாமுவேலை எழுப்ப சவுல் கேட்கிறார்.

1 சாமுவேல் 28.12-14 வரையிலான வசனங்களில், வந்திருப்பது சாமுவேலின் ஆவி என்பதை சவுல் புரிந்து கொண்டதாக காண்கிறோம். அடுத்த வசனத்தின் துவக்கத்திலேயே சாமுவேல் சவுலை நோக்கி என்று எழுதப்பட்டுள்ளது.

அதே அதிகாரம் 15வது வசனத்தில் இருந்து சாமுவேல் பேசியதாக பரிசுத்த வேதாகமம் கூறியுள்ளது. இப்படியிருக்க, அது பிசாசின் ஆவி, ஏமாற்றும் ஆவி என்றெல்லாம் எப்படி கூற முடியும்?

வேத வசனத்தில் சாமுவேலை போன்ற ஆவி, ஏமாற்றும் ஆவி, பிசாசு என்று எந்தொரு வார்த்தையும் பயன்படுத்தவில்லை. எனவே அது சாமுவேலின் ஆவி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அப்படியென்றால், தேவனுடைய தீர்க்கத்தரிசியான ஒருவரின் ஆவி எப்படி அஞ்சனம் பார்க்கிற ஒரு பிசாசின் நபருக்கு கீழ்படிந்தது என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் ஏற்படலாம். அதற்கான பதிலை காண்போம்.

இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்கு முன் வரை, மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல் பிசாசின் கையில் தான் இருந்துள்ளது. இயேசு மரணம் மற்றும் பாதாளத்தை வென்று அந்த திறவுகோலை பெற்றார். இதை வெளிப்படுத்தின விஷேசம்.1.18ல் இயேசு கூறுகிறார்.

எனவே அதுவரை பரிசுத்தமாக வாழ்ந்தவர்கள் மரணத்தை சந்திக்கும் போது, அந்த ஆவிகள் பரதீசில் ஓய்வெடுக்கும். இதற்கான குறிப்பை இயேசு கூறிய லாசரு-பணக்காரன் கதையில் காண முடிகிறது.

சாமுவேலின் ஆவியும் ஓய்வில் இருந்து அழைத்து வரப்பட்டது என்பதை குறிக்கும் வகையில், 1 சாமுவேல்.28.15ல் என்னைக் கலைத்தது என்ன? என்று கேட்கப்படுகிறது.
மேலும் 1 சாமுவேல்.28.19 வசனத்தில் சாமுவேலின் ஆவி கூறும் தீர்க்கத்தரிசனம், 31வது அதிகாரத்தில் நிறைவேறுகிறது. சவுலிடம் பேசியது ஒரு ஏமாற்றும் ஆவி என்றால், அது கூறிய தீர்க்கத்தரிசனம் எப்படி நிறைவேறும்? எனவே சவுலிடம் பேசியது சாமுவேலின் ஆவி தான் என்பது உறுதியாகிறது.

ஆனால் இயேசு மரணத்தை வென்ற பிறகு, மேற்கூறிய நிலை மாறியது. ஏனெனில் கிறிஸ்துவுக்குள் மரிக்கும் யாரும் ஆவியாக வந்து யாருடனும் பேசமாட்டார்கள். அப்படி பேசவும் முடியாது. மரணத்தை நியமிக்கவும், மரித்த நபரை உயிரோடு கொண்டு வரவும் இயேசுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

அசுத்தாவி பிடித்து இருப்பவர்கள் பிசாசு மூலம் வழிநடத்தப்படுகிறார்கள். இதனால் ஒரு நபருக்கு நன்கு பழக்கமான நபரின் பெயரை கூறி கொண்டு வந்தால், அவர்களை எளிதில் ஏமாற்றலாம் என்பது தான் இதன் பின்னணியில் உள்ள பிசாசின் தந்திரம். எனவே இறந்த யாருடைய ஆவியும் இந்த உலகில் சுற்றி கொண்டு இருக்காது. அது இயேசுவின் வருகைக்கு பிறகு நடக்கும் நியாயத்தீர்ப்பு நாளில் மட்டுமே காண முடியும்.

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *