
எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் மாத்திரம் அதைக் காண்பான்; அவன் கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், நான் அவன் மிதித்து வந்த தேசத்தை அவனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் கொடுப்பேன் என்றும் ஆணையிட்டார். உபாகமம்:1.36
எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து மோசேயின் மூலம் விடுவிக்கப்பட்ட இஸ்ரவேல் மக்களுக்கு, பாலைவனத்தில் 40 வருட அலைச்சலுக்கு பிறகு தேவன் கூறிய வார்த்தைகளில் இதுவும் ஒன்று.
மேற்கண்ட வார்த்தைகளை கூறிய மோசே கூட, இஸ்ரவேல் மக்களுக்கு வாக்குத்தத்தமாக அளிக்கப்பட்ட கானான் தேசத்திற்குள் நுழையவில்லை என்பது நாம் அறிந்ததே. எகிப்தில் இருந்து புறப்பட்ட ஆண்கள் மட்டும் 6 லட்சம் பேர் என்றால், அவர்களின் மனைவிகள், பிள்ளைகள் என்று ஒரு யூக கணக்கிட்டால் கூட ஏறக்குறைய 25 லட்சம் பேரை தாண்டிவிடும்.
ஆனால் அவ்வளவு பேரில், மோசேயின் உதவியாளரான யோசுவா மற்றும் காலேப் ஆகிய இருவர் மட்டுமே, தேவனால் இஸ்ரவேல் மக்களுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட கானான் தேசத்திற்குள் நுழைய முடிந்தது. ஏன் மற்றவர்கள் நுழைய முடியவில்லை என்ற நமது மனதில் எழும் கேள்விக்கு, தியான வசனம் பதில் அளிக்கிறது. ஏனெனில் மேற்கண்ட இருவரும், தேவனை உத்தமமாய் பின்பற்றினவர்கள்.
இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் இருந்து புறப்பட்ட பயணத்தை, இன்றைய நமது விசுவாச வாழ்க்கை உடன் ஒப்பிட்டு பார்த்தால், நாம் கூட பரம கானான் என்ற தேவனுடைய ராஜ்ஜியத்திற்காக அழைக்கப்பட்டவர்கள் என்பது விளங்கும். எனவே அவர்களுக்கு நேர்ந்தது வந்த போலவே, நமக்கும் கூட பலவிதமான சோதனைகள் வருகின்றன.
ஆனால் அந்த சோதனைகளில் நாம் விழிப்பாய் இருந்து, தேவனின் அற்புத செய்கைகளை கண்டு அவரை விசுவாசிக்க வேண்டியுள்ளது. அதற்கு பதிலாக, இஸ்ரவேல் மக்களை போல, தேவன் எங்களை கைவிட்டார் என்று கூறுவதோடு, நம்மை மேய்ப்பதற்காக நியமிக்கப்பட்டு உள்ள தேவ ஊழியர்களுக்கு விரோதமாக பேசினால், நாம் அழைக்கப்பட்ட தேசத்திற்கு சென்று சேர முடியாது.
நாம் இரட்சிக்கப்பட்டு, ஞானஸ்நானம் எடுத்து ஒரு சபையில் சேர்ந்து விட்டால் மட்டும், பரலோகத்திற்கு சென்றுவிடலாம் என்பது உறுதி ஆகாது. அதன்பிறகு விசுவாசத்தில் உறுதியாக நின்று, நம் வாழ்க்கையில் வரும் சோதனைகளில் தேவ பலத்தை கொண்டு ஜெயம் பெற வேண்டும்.
ஆனால் இன்று பலருக்கும் சோதனைகளே வேண்டாம் என்ற மனநிலை உள்ளது. எப்போதும் எல்லா வசதிகளோடு வாழ்ந்து, சம்பூரணமாக இருக்கவே விரும்புகிறார்கள். விசுவாச சோதனைகள் இல்லாமல், நாம் எப்படி ஜெயம் கொண்டவர்களாக மாற முடியும்?
இந்த உலகத்தையும், அதன் பாவத்தையும், அதற்கு அதிகாரியான சாத்தானையும் எதிர்த்து போராடி ஜெயிக்கிறவனுக்கு மட்டுமே பரலோகத்தில் இடம் அளிக்கப்படுகிறது. அந்த ஜெயத்தின் அனுபவம் நம் வாழ்க்கையில் அனுதினமும் புதுப்பிக்கப்பட வேண்டும். இந்த ஜெயத்தை பெறுவதற்கு இயேசுவை பின்பற்றினாலே போதுமானது.
ஜெபம்:
அன்பான தேவனே, எங்களோடு பேசிய உமது வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். எங்கள் வாழ்க்கையில் வரும் பலவிதமான சோதனைகளில் நாங்கள் சோர்ந்து போகும் போதெல்லாம், எங்களை ஆறுதல்படுத்தி, பரலோகத்திற்கு நேராக வழிநடத்தி வருகிறீர். ஆனால் அதை அறியாமல், சில நேரங்களில் உமக்கும், தேவ ஊழியர்களுக்கும் விரோதமாக முறுமுறுத்த எங்கள் குறைகளை மன்னியும். இனி ஜெயம் கொண்டவர்களாக மாற கிருபை தாரும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே ஆமென்.