ஊழியர் வார்த்தைகள் மதிப்பு மிகுந்தவை

பெங்களூரூவைச் சேர்ந்த சகோதரி ராணி கூறுகிறார்…

இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட எனது வாழ்க்கையில் தேவன் அநேக அற்புதங்களை செய்துள்ளார். அவற்றை எல்லாம் கூறி தேவ நாமத்தை மகிமைப்படுத்த எனக்கு விருப்பம் உண்டு. ஆனால், அதில் தேவ ஊழியர்களின் வார்த்தைகளை தேவன் எந்தளவுக்கு மதிக்கிறார் என்பதை உணர்த்திய ஒரு சம்பவத்தை மட்டும் உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.ஒரு முறை ஆட்டோவில் பயணித்த போது, நான் எடுத்துச் சென்ற பொருட்கள் அடங்கிய பெரிய பை ஒன்றை ஆட்டோவிலேயே மறந்துவிட்டு இறங்கி சென்றுவிட்டேன். அதில் 7 சுடிதார்களுடன், சில விலை மதிப்புள்ள பொருட்களும் இருந்தன. ஆட்டோவில் இருந்து இறங்கி பல கிலோ மீட்டர்களை கடந்து சென்ற பிறகே, நான் மறந்து விட்டு வந்த பையை குறித்த ஞாபகம் வந்தது.

ஆனால் அந்த ஆட்டோகாரரை முன்பின் பழக்கமில்லாத நிலையில் அது திரும்ப கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை இழந்தேன். துக்கத்தோடு அறிமுகமான ஒரு பாஸ்டரின் வீட்டிற்கு சென்று, அவரது மனைவிடம் இது குறித்து கூறினேன். எனக்காக ஜெபித்த அவர், கவலைப்பட வேண்டாம், நீங்கள் தொலைத்த பை, 10 நாட்களுக்குள் உங்களுக்கு திரும்ப கிடைக்கும் என்று கூறினார். அதை அரை மனதோடு நம்பியவளாக வீடு திரும்பினேன்.

அதன்பின் அந்த சம்பவத்தை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விட்டேன். ஆனால் தேவ ஊழியரின் வார்த்தைக்கு மதிப்பளித்த தேவன், நான் ஆட்டோவில் விட்டு வந்த பையில் எந்த பொருட்களும் குறையாமல், அதே ஆட்டோ டிரைவர், என்னை தேடி வந்து அளித்தார்.

ஆச்சரியமடைந்த நான், அவரிடம் இது குறித்து கேட்டேன். அதற்கு அவர், “கடந்த ஒரு வார காலமாக உங்களை தேடி வந்தேன். நேற்று உங்கள் தெருவில் வசிக்கும் ஒரு சகோதரியின் மூலம் உங்கள் முகவரி கிடைத்தது” என்றார்.

நான் பயணித்த போது, அவருக்கு அளித்த ஆட்டோ கட்டணத்தை விட, என்னை அவர் தேடுவதற்காக செலவளித்த பெட்ரோல் அதிகமாக இருக்கும் என்பதை உணர்ந்தேன். நேர்மையான அந்த ஆட்டோ டிரைவருக்கு இதய பூர்வமான நன்றி தெரிவித்தேன். அதே நேரத்தில் தேவ ஊழியர்களின் வார்த்தைகளுக்கு, நம் தேவன் எவ்வளவு மதிப்பளிக்கிறார் என்பதை அறிந்து ஸ்தோத்தரித்தேன்.

அது வரை தேவ ஊழியர்களின் வார்த்தைகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்த நான், எனது அறியாமையை எண்ணி வருந்தினேன். இனி தேவ ஊழியர்களுக்கும், அவர்களின் வார்த்தைகளுக்கும் தகுந்த மதிப்புளிக்க வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டேன்.

Spread the Gospel