
தேவனுக்கு ஊழியம் செய்ய நம்மில் பெரும்பாலானோருக்கு விருப்பம் இருக்கிறது. ஆனால் அதை எங்கே, எப்படி, எப்போது துவங்குவது என்பது தான் தெரியவில்லை. அதற்கான தகுந்த சந்தர்ப்பம் கிடைத்தால், கட்டாயம் செய்யலாம் என்ற எண்ணமும் நம்மில் பலருக்கும் இருக்கிறது.
இப்படியிருக்க, சில மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவரின் செயல், என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது. அந்த சம்பவத்தை கண்டு, நானும் ஆவியில் உணர்த்தப்பட்டேன். எனவே அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
பார்த்தது:
சில மாதங்களுக்கு முன் எங்கள் வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு, நெருங்கிய நண்பர் ஒருவரை அழைத்து இருந்தேன். அவரும் நேரத்திற்கு முன்னதாகவே வந்து, வீட்டின் முன்புறம் நிகழ்ச்சி நடக்க வேண்டிய இடத்தில் பல உதவிகளைச் செய்தார்.
நண்பர்கள், உறவினர்கள் என கூட்டம் அதிகரிக்க, வீட்டின் முன்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் வருபவர்களை கவனித்து கொள்ளுமாறு நண்பருக்கு கூறினேன். அவரும் அந்தப் பணியை சிறப்பாக செய்து கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் எங்கள் வீட்டு பக்கத்தில் இருந்த சிறுவர், சிறுமியர் எல்லாரும், இங்கே என்னமோ நடக்கிறது என்ற எண்ணத்தில் வீட்டின் முன் இருந்த பந்தலில் கும்பலாக கூடினார்கள். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் உறவினர்கள் திணறினார்கள்.
நேரம் செல்ல செல்ல சிறுவர், சிறுமியரின் கூட்டத்தை அடக்க முடியவில்லை. எனவே அப்பகுதியில் இருந்தவர்கள், அவர்களை அப்படியே விட்டுவிட்டு மற்ற பணிகளை கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்நிலையில், என் நண்பர் எல்லா சிறுவர், சிறுமிகளையும் அழைத்து, அவர்களுடன் அன்பாக பேசி, கும்பலாக ஒரு இடத்தில் உட்கார வைத்தார். அதன்பிறகு, அவர்களுக்கு ஸ்நாக்ஸ் கொடுத்து, அவர்களுக்கு கதை சொல்லவும், ஞாயிறு பள்ளி கோரஸ்களை பாடவும் ஆரம்பித்தார்.
இதில் சுவாரஸ்யமான சிறுவர்களும், அவருடன் சேர்ந்து பாட்டு பாட துவங்கினர். நிகழ்ச்சியின் பரபரப்பான பணிகளுக்கு இடையில், பாடல் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த எனக்கு ஆச்சரியமானது. ஏனெனில் அதுவரை கலாட்டா செய்து கொண்டிருந்த பிள்ளைகள் அவருடன் ஜாலியாக பாடி கொண்டிருந்தனர்.
ஏறக்குறைய நிகழ்ச்சி ஆரம்பிக்கும் வரை, இந்த பணியை தொடர்ந்த நண்பர், முடிவில் எல்லாருக்கும் ஒரு கேக் கொடுத்து விட்டு, அடுத்த வாரம் இதே இடத்துல வந்தீங்கன்னா, இதே மாதிரி பாட்டு பாடி கதை கேட்கலாம் என்று கூறி அனுப்பினார். பிள்ளைகளும் சந்தோஷமாக வீடுகளுக்கு திரும்பி போனார்கள்.
சிந்தித்தது:
மேற்கூறிய சம்பவத்தில் தனக்கு எந்த பழக்கமும் இல்லாத இடத்தில், கிடைத்த சந்தர்ப்பத்தில் பிள்ளைகளுக்கு சுவிசேஷ விதையை விதைத்துள்ளார் நண்பர். எதிர்காலத்தில் அந்த பிள்ளைகளின் மனதில் தேவன் பெரிய மாற்றங்களைச் செய்வார் என்று நம்புகிறேன்.
அந்த சம்பவத்திற்கு பிறகு, எந்த இடத்திற்கு சென்றாலும், அங்கிருக்கும் பிள்ளைகளுடன் பேசி, தேவனை பற்றியும், அவருடைய அதிசயமான வழிகளைப் பற்றியும் விவரிக்கும் பாடல்கள், கதைகளைக் கூறுவதை என் பழக்கமாக மாற்றி கொண்டேன்.
எனவே தேவனுக்கு ஊழியம் செய்ய எல்லா சந்தர்ப்பங்களும் ஏற்றதாக அமைந்து, எல்லா காரியங்களும் கைக்கூடி வர வேண்டும் என்று காத்திருக்க தேவையில்லை. நமக்கு கிடைக்கும் எந்த சந்தர்ப்பத்தையும், சுவிசேஷம் கூறவும் அல்லது ஊழியம் செய்யவும் தகுந்ததாக மாற்றி கொள்வது தான் புத்திசாலித்தனம்.
– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்