0 1 min 2 mths

தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இரட்சிக்கப்பட்ட எல்லாருக்கும் இருக்கிறது. ஆனால் அதன் பின்னணியில் எந்த வயதில் அவருக்கு ஊழியம் செய்யலாம்? என்ற கேள்வி எழும்புகிறது.

நவீன காலத்தில் இந்த கேள்வியை கேட்டால், நாம் பெறும் பதில்கள் ஆச்சரியமாகவும், வியப்பளிப்பதாகவும் இருக்கும். அதை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.

கேட்டது:

சிறுவர் ஊழியம் செய்யும் இடத்தில் இருந்த பிள்ளைகளிடம் ஊழியம் செய்வதை குறித்து கேட்டேன். அப்போது, எங்களுக்கு எதுமே தெரியாது பிரதர் என்றார்கள். நான் அவர்களுக்கு விளக்கி கூறினேன். அப்போது சிலர், உங்கள மாதிரி பெரிசான பிறகு, ஊழியம் செய்கிறேன் என்றார்கள்.

சிறுவர்களை ஊழியம் செய்ய பழக்க வேண்டும் என்று கூறினால், சிறுவர்களுக்கு ஊழியத்தை பற்றி என்ன தெரியும்? அனுபவம் இருக்காது. எனவே மனந்திரும்பி ஞானஸ்நானம் எடுத்த பிறகு தான், ஊழியம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்.

பள்ளி பருவத்தில் இருப்பவர்கள் பற்றி கேட்டால், ஸ்கூல் வயசுல இந்த மாதிரியெல்லாம் திசை திருப்பிவிட்டா, அவங்க படிப்பு மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படும். எனவே பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு தான் ஊழியம் செய்ய வேண்டும் என்கிறார்கள்.

கல்லூரியில் படிப்பவர்களிடம் கேட்டால், ஒரு மனிதனின் வாழ்க்கையில் கல்லூரி வயது என்பது ஜாலியாக இருக்க வேண்டியது. அந்த நேரத்தில் ஊழியம், சபை ஜெபம் என்றெல்லாம் இருக்க முடியாது என்கிறார்கள்.

வேலை செய்பவர்களிடம் கேட்டால், இப்பத்தான் நாலு காசு சம்பாதிக்க ஆரம்பிச்சிருக்கேன். இந்த நேரத்துல ஊழியம் செஞ்சா எப்படி? மேலும் தேவையில்லாம லீவ் போட்டா, இருக்கற வேலையும் போயிடும். வாழ்க்கையில செட்டிலான பிறகு தான் ஊழியம் செய்யணும் என்பார்கள்.

திருமணமானவர்களிடம் கேட்டால், இப்பத்தானே கல்யாணம் பண்ணியிருக்கோம். எங்கள கொஞ்சம் தனியாக இருக்க விடுங்க. அதெல்லாம் சும்மா இருக்கறவங்களுக்கு தான் செட்டாகும் என்கிறார்கள்.

திருமணமாகி குழந்தைகள் பிறந்துவிட்டால், வாரம் முழுவதும் உழைக்கிறேன். ஒருநாள் தான் குடும்பத்தோடு இருக்கேன். பசங்களுக்கு ஸ்கூல் பீஸ், வீட்டு வாடகை என்று ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கு. அதெல்லாம் ப்ரீயா இருக்கறவங்களுக்கு தான் ஒத்துவரும் என்கிறார்கள்.

50 வயதை கடந்தவர்களிடம் கேட்டால், கல்யாண வயசை நெருங்குற பசங்க இருக்காங்க. அவங்களுக்கு கால காலத்துக்கு செய்ய வேண்டிய கடமைகள் எல்லாம் இருக்கு. நமக்கெல்லாம் ஊழியம் ஒத்துவராது என்கிறார்கள்.

பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களிடம் கேட்டால், உங்களுக்கு என்னப்பா, இள ரத்தம். ஓடிஓடி ஊழியம் செய்வீங்க. எங்களுக்கு ரத்த அழுத்தம் சர்க்கரை என்று பல உடல் பிரச்சனைகள் இருக்கு என்கிறார்கள்.

80 வயதை கடந்தவர்களிடம் கேட்டால், இதுவரை வாழ்க்கையில் நடந்த பழைய காரியங்களையும், ஒன்றுக்கும் உதவாத பெருமை பேச்சுகளை தான் கேட்கலாம்.

மேலும் இளம் வயதில் உழைத்து உழைத்து ஏதோ தேவ நாமத்திற்காக ஒரு நாட்டையே இரட்சிப்பில் நடத்தியது போல பேசுவார்கள். ஆனால் விசாரித்தால், அப்படி எந்தொரு சம்பவமும் நடந்திருக்காது. இப்படி ஊழியம் செய்ய முடியாது என்பதை, மறைமுகமாக சொல்லி விடுவார்கள்.

சிந்தித்தது:

மனிதர்களில் எல்லா வயதினருக்கும் அந்தந்த பருவத்தின் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அதை முன்னிறுத்தி தேவனுக்கு ஊழியம் செய்ய முடியாது என்று கூறுவது, வெறும் சாக்குப்போக்கு மட்டுமே எனலாம்.

4-6 வயதுள்ள குழந்தைகளுடன் கைப் பிரதி ஊழியம் செய்யும் தேவ ஊழியர்கள் இன்றும் இருக்கிறார்கள். பதின் பருவத்தில் உள்ளவர்கள், தேவாலயத்தில் நடக்கும் பல ஊழியங்களில் கலந்து கொள்வதை பார்த்திருக்கேன். 10 வயதுள்ள ஒரு சிறுவன், பரிசுத்தாவியில் நிரம்பி தீர்க்கத்தரிசனம் கூறியதை பார்த்திருக்கேன்.

கல்லூரியில் படிக்கும் வாலிபர்கள், சிறுவர்களின் ஊழியத்தில் முன்னணியில் நின்று செயல்படுவதை பார்த்திருக்கேன். எங்களோடும் சிறுவர்கள் ஊழியம் கலந்து இருக்கிறார்கள்.

திருமணமான பிறகு, புது மனைவியுடன் ஊழியர் செய்யும் சகோதர்களையும் பார்த்திருக்கிறேன். அவர்களுடன் ஊழியம் செய்தும் இருக்கிறேன். நிறுவனங்களில் வேலை செய்தாலும், கிடைக்கும் ஒரு ஓய்வு நாளையும் தேவனுக்காக செலவிடும் குடும்பங்களும் உண்டு.

தன்னோடு ஊழியம் முடிய கூடாது என்ற எண்ணத்தில் தன் பிள்ளைகளையும் அவர்களின் குடும்பத்தையும் ஊழியத்தில் ஈடுபடுத்தும் ஊழியர்களும் உள்ளார்கள்.
60 வயதை கடந்த பலரும் ஊழியத்தை பற்றி கேட்டாலே, இதெல்லாம் என்ன ஊழியம்? நாங்க வாலிப வயசுல செய்யாத ஊழியமா? இப்ப அப்படியெல்லாம் ஊழியம் செய்யவே முடியாது என்று கூறுவது இளம் வயதினரை ஊக்கப்படுத்தாது. மாறாக, எரிச்சலையும், கோபத்தையும் தான் ஊட்டும் என்பது கவனிக்கத்தக்கது.

முதிர் வயதிலும் தனக்கு தெரிந்த ஊழிய அனுபவ எங்களுடன் பகிர்ந்து, தானும் நேரில் வந்த 70 வயது விசுவாசியையும் பார்த்திருக்கேன். அவரது ஆலோசனைகள் எங்களுக்கு எரிச்சலை அல்ல, ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியவை.

எனவே, பள்ளியில் படிக்க ஆரம்பிக்கும் குழந்தை முதல், நாளை சாக போகும் தாத்தா வரை தேவனுக்கு ஊழியம் செய்யலாம். ஊழியம் செய்ய எந்த வயது வித்தியாசமும் இல்லை. ஒவ்வொரு வயதிற்கும் தகுந்தாற் போல அவர்கள் செய்யும் ஊழியமும், அளவும் மாறுப்படலாம், அவ்வளவுதான்.

நமக்கு அளவில்லாத நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் தந்த தேவனுக்கு கடைசி மூச்சு வரை, ஊழியம் செய்யலாம். நாம் எவ்வளவு ஊழியம் செய்தாலும், அவரின் இரக்கத்திற்கு நிகராகாது என்பது நினைவில் இருக்க வேண்டியது.

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *