0 1 min 1 yr

அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள். அதினாலே சிலர் அறியாமல் தேவ தூதரையும் உபசரித்ததுண்டு. எபிரேயர்:13.2

நம்மில் பலரும் வேதத்தில் உள்ள வாக்குத்தத்தங்களை விசுவாசித்து ஜெபிக்கிறோம். ஆனால் சில காரியங்களுக்காக நீண்டகாலம் காத்திருந்தாலும் அது கிடைப்பதில்லை. அதன் பின்னணியை குறித்து ஆராய்ந்தால், பல தடைகள் காணப்படுவதை அறியலாம்.அதில் ஒன்றாக நாம் அந்நியரை உபசரிக்க வேண்டும் என்று வேதம் குறிப்பிடுகிறது. அந்த வகையில் விசுவாசத்தின் பிதா என்ற வர்ணனையை பெற்ற ஆபிரகாம், இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார். அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிக்கோடிட்டு காட்டி, எபிரேயருக்கு நிருபம் எழுதி உள்ளார், அந்த புத்தகத்தின் எழுத்தாளர்.

ஆபிரகாமின் வாழ்க்கையில் அவரது சந்ததியை குறித்து, தேவன் அளிக்கும் முதல் வாக்குத்தத்தம் ஆதியாகமம்:12.2–ல் காணப்படுகிறது. அங்கு உன்னை பெரிய ஜாதியாக்கி… என்று தேவன் ஆசீர்வதிக்கிறார். அப்போது ஆபிரகாமிற்கு வயது 75 என்று ஆதியாகமம்:12.4-ல் வாசிக்கிறோம். அதன்பிறகு அந்த வாக்குத்தத்தை குறித்து அவ்வப்போது ஆபிரகாமோடு, தேவன் பேசுகிறார். ஆனால் அது நிறைவேறும் காலம் குறித்து வெளிப்படுத்தவில்லை.

ஆனால் ஆபிரகாமின் 99-வது வயதில் மூன்று பேர் வழிப்போக்கர்களாக, ஆபிரகாமின் வீட்டிற்கு வருகிறார்கள். அவர்களை யார் என்றே தெரியாவிட்டாலும், அவர்களை சிறப்பாக உபசரிக்கிறார் ஆபிரகாம். அதன்பிறகு வந்தவர்கள், ஆபிரகாமிற்கு அளிக்கப்பட்ட தேவ வாக்குத்தத்தை உறுதிப்படுத்தி, அதற்கான நேரத்தையும் அறிவிக்கிறார்கள்.

இந்த வகையில் யார் என்றே தெரியாதவர்களை உபசரித்த ஆபிரகாம், தனது வாழ்க்கையில் 24 ஆண்டுகளுக்கு முன் கூறப்பட்ட தீர்க்கத்தரிசனத்தின் நிறைவேறுதலை பெற்றார்.

நம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் மக்களுக்கு, ஆபிரகாமை போல விருந்து தயாரித்து அளிக்காவிட்டாலும், நம்மால் முடிந்த உதவிகளை செய்யலாம். அது தேவனுடைய பார்வையில் விலையேறப்பட்டதாக தெரியும் என்பதோடு, மற்றவர்கள் இடையே ஒரு தெய்வீக தன்மையை வெளிப்படுத்தவும் உதவும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஆபிரகாமின் நீண்டகால காத்திருப்பில் இருந்த வாக்குத்தத்தம் நிறைவேறிய போது, மகிழ்ச்சி அல்லது சிரிப்பு என்று அர்த்தம் கொண்ட ஈசாக்கு பிறந்தார். அதேபோல நாமும் அந்நியரை உபசரிக்கும் போது வெளிப்படும் தெய்வீகத் தன்மை மூலம் தேவ நாமம் மகிமைப்படுகிறது.

தேவ சித்தத்தை நிறைவேற்ற முடிகிறது. அப்போது நம் வாழ்க்கையில் நீண்டகாலமாக காத்திருக்கும் பல ஆசீர்வாதங்களை பெற்று, நமக்கும் மிகுந்த மகிழ்ச்சியை பெற முடிகிறது.

எனவே நமது அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் மக்களுக்கு, நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். துயரப்படுகிறவர்களுக்காக ஜெபிப்போம். அதன்மூலம் தேவ நாமத்தை மகிமைப்படுத்தி, தேவ சித்தத்தை நிறைவேற்றி, தேவனிடம் இருந்து ஆசீர்வாதங்களை பெற்று கொள்வோம்.

ஜெபம்:

அன்புள்ள இயேசுவே, ஆபிராமிடம் இருந்த ஒரு தெய்வீகத் தன்மையை முன்னிறுத்தி எங்களோடு பேசின உமது வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். அவரது வாழ்க்கையில் அந்நியரை உபசரித்து, நீண்டகால காத்திருப்பதில் இருந்த ஆசீர்வாதத்தை பெற்றது போல, நாங்களும் அந்நியரை உபசரிக்கும் காரியத்தில் சளைக்காதவர்களாக விளங்க, எங்களுக்கு உதவி செய்யும். இயேசுவின் நாமத்தினாலே கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *