எப்படி ஜெபித்தால் பதில் கிடைக்கும்?

நாம் சில நேரங்களில் ஜெபிக்கும் ஜெபங்களுக்கு பதில் கிடைப்பதில்லை. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முழு மனத்தோடு ஜெபிக்காமல் இருப்பதும் ஒரு காரணம். அந்த காரியத்தை உணர்த்திய ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நடந்தது:

சில நாட்களுக்கு முன் நான் வசிக்கும் தெருவை சேர்ந்த ஒரு தாய், அவரது மகன் ஒரு பெரிய ஆபத்தில் சிக்கி இருப்பதாகவும், அதற்காக என்னை ஜெபிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

அந்த தாயின் மகன், சில தீய நண்பர்களுடன் ஊர் சுற்றி கொண்டு ஜாலியாக இருந்தான். இந்நிலையில் ஒரு கொலை வழக்கில் அவனது நண்பர்களுக்கு தொடர்பு இருப்பது போலீசாருக்கு தெரிந்தது. இதையடுத்து இவனுக்கும் அந்த வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

ஆனால் அந்த தாயின் மகனுக்கு கொலை வழக்கில் எந்த தொடர்பு இருக்கவில்லை. இருப்பினும் சந்தேகத்தின் பேரில் இவனையும் சேர்ந்து கைது செய்து சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்தனர். இந்த விவரத்தை அறிந்த அவன் தலைமறைவாகிவிட்டான். இதனால் போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக எண்ணப்பட்டான்.

அந்த தாயின் மகன் எங்கே, எப்படி, யாருடன் இருக்கிறான் என்ற எந்த விபரமும் இல்லை. மகனை குறித்த தகவல் எதுவும் தெரியாமல் தவிக்கும் அந்த தாயின் நிலையை எண்ணி தேவனை நோக்கி ஜெபித்தேன். இப்படி ஓரிரு நாட்கள் கருத்தாக ஜெபித்துவிட்டு, அதை மறந்தே போய்விட்டேன்.

சில வாரங்களுக்கு பிறகு, திரும்பவும் எங்கள் வீட்டிற்கு வந்த அந்த தாய் மிகவும் சந்தோஷமாக காணப்பட்டார். காணாமல் போன மகனை குறித்து விசாரித்த போது, தனது மகன் தற்போது வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டதாகவும், ஜெபித்ததற்கு மிகவும் நன்றி என்றும் கூறினார். மேலும் உங்கள் தேவன் உண்மையில் ஜீவிக்கிறார் என்றார்.

கொலை வழக்கில் தொடர்புடையதாக கருதப்பட்ட அவன் எப்படி தப்பினான் என்று கேட்டேன். அதற்கு அவர், நான் உங்களிடம் ஜெபிக்குமாறு கேட்டுக் கொண்ட இரு நாட்களில், என் மகனை யார் என்றே தெரியாத அரசியல்வாதி ஒருவர், போலீசாருக்கு உறுதி அளித்ததின் பேரில் அந்த கொலை வழக்கில் இருந்து என் மகன் விடுவிக்கப்பட்டார். இதனால் அவனை தேடுவதை போலீசார் விட்டுவிட்டனர்.

அதன்பிறகு போலீசாரை சந்தித்து நன்றி கூறிய போது, கொலை வழக்கில் தேடப்பட்ட போது, உன் மகன் கிடைத்திருந்தால் நிச்சயம் சிறைச்சாலைக்கு சென்றிருப்பான். ஆனால் அந்த நேரத்தில் அவன் தலைமறைவாக இருந்ததால் தப்பினான்.

இல்லாவிட்டால் உன் மகன், இந்த வழக்கில் இருந்து தப்புவதற்கு எந்த வழியும் இல்லாமல் போயிருக்கும். இனிமேல் இது போன்ற நண்பர்களுடன் நட்புக் கொள்ள அனுமதிக்க வேண்டாம் என்று எச்சரித்து அனுப்பினர் என்று அந்த தாய் கூறி முடித்தார். அந்த தாய் சந்தோஷத்தோடு சென்ற பிறகு, நான் தேவனுக்கு நன்றியும், ஸ்தோத்திரமும் செலுத்தினேன்.

சிந்தித்தது:

இந்த சம்பவத்தில் இருந்து தேவனுடைய சமூகத்தில் நாம் முழு மனதோடு ஜெபிக்கும் எந்த காரியத்திற்கும் பதில் கிடைக்கிறது. அது எவ்வளவு நேரம் ஜெபிக்கிறோம் என்பதை பொறுத்து அல்ல என்பதை புரிந்துக் கொண்டேன்.

இனி வரும் நாட்களில் எந்த காரியத்திற்காக ஜெபித்தாலும் முழு மனத்தோடு ஜெபிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். அப்ப நீங்க எப்படி ஜெபிக்க போறீங்க?
– கர்த்தருக்குள் அன்பான சகோதரி

Spread the Gospel