
ஆண்டவர் எதற்காக இந்த கஷ்டத்தை என் வாழ்க்கையில் அனுமதித்தாரோ? என்று பல கிறிஸ்தவர்களும் கூறுவதை கேட்டிருக்கிறேன். நம்மிடமே இப்படி கூறுகிறார்கள் என்றால், தேவனிடம் எத்தனை முறை இந்த கேள்வியை கேட்டிருப்பார்களோ? நம் வாழ்க்கையில் வரும் துன்பங்கள், கஷ்டங்கள் இடையே பெரும்பாலானோர், இந்த கேள்வியை தேவனை நோக்கி கேட்டு விடுகிறோம்.
அதிலும் ஏதாவது ஊழியத்திற்கு செல்லும் வழியில் ஒரு அசம்பாவிதமோ, விபத்தோ ஏற்பட்டால், அதைவிட ஒரு தவறை தேவன் செய்திருக்க முடியாது என்பது நம்மில் பெரும்பாலானோரின் எண்ணம். ஆனால் உண்மையில், நம் வாழ்க்கையின் ஒவ்வொரு தேவனுடைய கிரியைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட காரணம் இருக்கிறது.
படித்தது:
சமீபத்தில் ஒரு வெளிநாட்டு மிஷினரியின் புத்தகம் ஒன்றை படிக்க நேர்ந்தது. அதில் தனது சாட்சியை கூறி வரும் அந்த சகோதரன், தனது வாழ்க்கையில் தேவனை கேள்வி கேட்ட ஒரு சந்தர்ப்பத்தை குறிப்பிட்டிருந்தார். உண்மையில் அதை படித்த போது, நானும் பெரிய அளவில் ஆவியில் உணர்வடைந்தேன்.
வெளிநாட்டில் ஊழியம் செய்து வந்த அந்த சகோதரன், தனது ஊழியத்தின் நிமித்தம் பல ஆயிரக்கணக்கான கி.மீட்டர்கள் காரில் தினமும் பயணிக்க வேண்டியிருந்தது. இதனால் உடலில் அதிக சோர்வும், பலவீனமும் அனுபவித்து வந்த போதும், தேவனுக்காக எத்தனையோ பேர் பாடு அனுபவித்து இருக்கிறார்கள் என்று எண்ணிய அவர், தொடர்ந்து தனது ஊழியத்தை செய்து வந்துள்ளார்.
ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் காரில் நெடுந்தூரம் பயணித்து ஊழியத்திற்காக சென்று கொண்டிருந்த போது, அவரது கார் விபத்தில் சிக்கியது. இதில் அவரது கார் சுக்குநூறாக நொறுங்கியது மட்டுமின்றி, அந்த சகோதரனின் தண்டுவடத்தில் முறிவு ஏற்பட்டது. இதனால் சுயநினைவு இழந்து பல நாட்கள் மருத்துவமனையில் கிடந்தார்.
அவருக்கு சுயநினைவு திரும்புவதற்குள், தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை முடிந்திருந்தது. கண் முழித்த அவருக்கு தோன்றிய முதல் சிந்தனை, நான் ஏன் விபத்தில் சிக்கினேன். தேவன் ஏன் என்னை கைவிட்டார்? என்பதே. படுக்கையில் படுத்துக் கொண்டே தேவனை நோக்கி ஜெபித்தார்.
அப்போது தேவன், அவரோடு பேசினார். அந்த சகோதரன் நீண்டநாட்களாக தேவ ஊழியத்தின் நிமித்தம் நீண்ட பயணம் செய்ததால், அதிக முதுகுவலியால் கஷ்டப்பட்டு வந்தார். தற்போது செய்யப்பட்ட அறுவை சிகிச்சையிலும், 3 மாத ஓய்விலும், அந்த முதுகுவலி முழுமையாக நீங்கும். எனவே புத்துணர்ச்சியோடு ஊழியத்தை தொடரலாம். இதற்காகவே தேவன், அந்த விபத்தை அனுமதித்ததாக கூறினார்.
அதேபோல, அப்போதைய ஊழியத்திற்கு அவர் பயன்படுத்திய சிறிய கார் போதுமானதாக இருக்கவில்லை. எனவே அந்த விபத்தில் கிடைத்த நஷ்டஈடு மூலம், அதைவிட பெரிய அளவிலான காரை வாங்க, தேவன் உதவி செய்தார்.
தேவன் கூறியது போலவே 3 மாத ஓய்விற்கு பிறகு, முன்பை விட அதிக தூரம் காரை ஓட்டி சென்று கர்த்தருக்காக ஊழியம் செய்தாராம். அதன்பிறகு அவருக்கு, முன்பு இருந்த முதுகுவலி வரவே இல்லையாம்.
சிந்தித்தது:
மேற்கூறிய சகோதரனின் காரியங்களை குறித்து படித்த போது, உண்மையில் நம் மீது தேவன் எவ்வளவு கருத்தாக இருக்கிறார் என்பதை அறிய முடிந்தது. மேலும் நம் வாழ்க்கையில் அவர் அனுமதிக்கும் ஒவ்வொரு காரியங்களுக்கு பின்னாலும், ஒரு பெரிய திட்டமும் நோக்கமும் இருப்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது.
இதை அறிந்து கொண்ட பிறகு, தேவனிடம் கேள்வி கேட்கும் பழக்கத்தை நான் விட்டுவிட்டேன். அப்ப, இனி நீங்களும் தேவனிடம் கேள்வி கேட்கமாட்டீங்க தானே?
– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.