0 1 min 8 mths

அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் கிடைக்கும் புத்தகங்களை எல்லாம் படிப்பவர்கள் அநேகர். ஆவிக்குரிய உலகிலும் இந்த பழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். இதன்மூலம் பிற பிரிவினருக்கு சுவிஷேசம் சொல்வது எளிதாகும் என்று சிலர் நினைக்கிறார்கள். இது நல்ல விஷயம் தானே என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.

இந்த கருத்தோடு தொடர்புடைய ஒரு சம்பவம், என் நண்பருக்கு நேர்ந்தது. மனதை மிகவும் வேதனைப்படுத்திய அந்த கதி நம் வாசகர்கள் யாருக்கும் ஏற்படக் கூடாது என்ற எண்ணத்தில் அதை பகிர விரும்புகிறேன்.

கண்டது:

புத்தகங்களை படிப்பதில் அதிக ஆர்வம் கொண்ட நண்பர் ஒருவர், எங்களோடு ஊழியத்தில் ஈடுபட்டு வந்தார். ஒரு முறை அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, குறிப்பிட்ட மத நூல் குறித்து மேன்மையாக பேசிக் கொண்டிருந்தார்.

மேலும் தான் வேலை செய்யும் இடத்தில் அந்த மதத்தினர் அதிகம் இருப்பதாகவும், அவர்களை இரட்சிப்பில் நடத்துவதற்காக, தான் அந்த மத நூலை படிப்பதாகவும் கூறினார். துவக்கத்தில் எங்களுக்கு அவரது பேச்சு வியப்பாக இருந்த நிலையில், போக போக அவரது செயல்பாடுகளில் அதிக அளவில் மாற்றங்களை காண முடிந்தது.

சில மாதங்களுக்கு பிறகு, அவருக்கு சில ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்பட்டதாக கேள்விப்பட்டு, நாங்கள் சென்று விசாரித்தோம். அப்போது வழக்கத்திற்கு மாறாக, இயேசு என்ற வார்த்தையை பயன்படுத்துவதையே தவிர்த்தார். அதை நாங்கள் பெரிய விஷயமாக எடுத்து கொள்ளாமல், ஜெபித்துவிட்டு வந்துவிட்டோம்.

சில நாட்களுக்கு பிறகு, அவர் தேவாலயத்திற்கு வருவதை நிறுத்தினார். மேலும் குறிப்பிட்ட மத நபர்களுடன் தொடர்பு கொண்டு, அந்த மதத்திற்கு மாறிவிட்டதாக, அவரது வீட்டார் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

அதிர்ச்சியடைந்த நாங்கள், அவரது வீட்டிற்கு சென்று அவரிடம் விசாரித்தோம். அதற்கு அவர், பரிசுத்த வேதாகமம் முழுமையாக இல்லை என்றும், தான் தற்போது படித்து வரும் மத நூல் முழுமையாக இருப்பதாகவும் கூறினார். மேலும் இஸ்ரவேல் மக்களைப் போல, கீழ்படியாமல் போன கிறிஸ்தவர்களை பிதாவாகிய தேவன் தள்ளிவிட்டு, தான் இப்போது சார்ந்திருக்கும் மதத்தினரை தேர்ந்தெடுத்துள்ளார் என்று கூறினார்.

பரிசுத்த வேதாகமத்தில் இருந்து அவருக்கு வேத வாக்கியங்களை எடுத்துகாட்டி விளக்கினோம். அதற்கு அவர், தான் படித்த மத நூலின் பகுதிகளை கூறி பதில் அளித்தார். ஒரு கட்டத்தில் இயேசு தெய்வமே இல்லை. அவர் ஒரு மாமனிதர் அவ்வளவு தான் என்று கூறினார்.

அவர் குறிப்பிடும் மத நூலின் தோற்றம், அந்த மதத்தை பரப்பியவர், எழுதியவர் குறித்த எந்த தகவலும் தெரியாத அவர், அதுவே முழுமையான வேதம் என்று வாதிட்டார். முடிவாக, உங்களுக்கு அந்த வேதத்தை குறித்து தெரியவில்லை. அதனால் அறியாமல் பேசுகிறீர்கள். அதை இலவசமாக வாங்கி தருகிறேன். படித்துவிட்டு பேசுங்கள் என்றார்.

ஏறக்குறைய 4 மணிநேரங்களுக்கு மேலாக பேசியும், அவர் பரிசுத்த வேதாகமத்தின் எந்த வாக்கியங்களையும் ஒப்பு கொள்ளாத நிலையில், நேரம் வீணாவது தான் மிச்சம் என்ற முடிவுக்கு வந்த நாங்கள், ஜெபித்துவிட்டு கிளம்பினோம்.

ஜெபத்தை முடித்த பிறகு, அறியாமை என்ற இருளில் இருக்கும் நீங்கள் விரைவில் நான் இருக்கும் ஒளிக்கு வந்துவிடுங்கள். இல்லாவிட்டால், நரகத்திற்கு தான் செல்ல வேண்டும் என்று அந்த மத நூல் குறிப்பிடுவதாகவும், அந்த மத நூலை படித்து திருந்துங்கள் என்றும் கூறி அனுப்பி வைத்தார்.

துக்கத்தோடு வீடு திரும்பிய எனக்கு மனதில் பெரிய குழப்பம் ஏற்பட்டது. ஒரு காலத்தில் தேவனுக்காக கடும் வைராக்கியமாக நின்று ஊழியம் செய்த சகோதரன், இப்படி விழுந்து போனது ஏன்? என யோசிக்க ஆரம்பித்தேன்.

அப்போது அவர் கூறிய வார்த்தைகள் நினைவிற்கு வந்தன. அந்த மத நூலை வாங்கி படித்து பாருங்கள். அப்போது தான் அதில் உள்ள உண்மையை தெரிந்து கொள்ள முடியும் என மீண்டும் மீண்டும் மனதில் ஒலித்தது. அந்த மத நூலை வாங்கி படித்து, அதிலுள்ளவைகளை விளக்கி கூறினால், அவரை திரும்ப தேவனிடமாக திருப்பிவிடலாம் என்ற ஆலோசனை மனதில் ஏற்பட்டது.

வேறெந்த வழியும் எனக்கு முன்பாக இல்லாதது போல, அந்த கருத்து மீண்டும் மீண்டும் என் மனதை ஆக்கிரமித்தது. ஆனால் மனதில் இருந்த குழப்பம் அப்படியே இருந்தது. அது சரியான தீர்வு என்றால், என் மனதில் குழப்பம் தொடர்வது ஏன்? என்ற எண்ணம் எழுந்தது.

மனக்குழப்பதில் எந்த முடிவு எடுக்கப்பட்டாலும், அது சரியாக இருக்காது. முடிவு தேவனுடைய கரங்களில் இருக்கட்டும் என்ற முடிவோடு, இதற்காக ஜெபிக்க முடிவு செய்தேன்.

தனியாக அமர்ந்து ஜெபிக்க துவங்கினேன். அந்த சகோதரனோடு பேசிய வார்த்தைகளும், அவர் அதற்கு கூறிய பதில்களும், நினைவில் வந்து போராடின. நீண்டநேரம் போராடிய பிறகே ஒருமனதை பெற முடிந்தது. ஜெபத்தில் உறுதிப்பட்ட உடன், கர்த்தருடைய சமாதானம் உள்ளத்தை நிரப்பியது.

அப்போது மனதில் ஒரு குரல் கேட்டது. உன் கரங்களில் முழுமையான புத்தகமாக பரிசுத்த வேதாகமத்தை தந்திருக்கிறேன். அப்படிருக்க, சாதாரண ஒரு புத்தகத்தை படித்து, ஒரு மனிதனை இரட்சிப்பிற்குள் நடத்தலாம் என நீ நினைப்பது ஏன்? பரிசுத்த வேதாகமத்தில் உள்ள ஜீவனுள்ள வார்த்தைகளைக் கேட்டு கீழ்படிந்தால், அவனுக்குள் ஜீவன் உண்டாகும் என்று உரைத்தது.

சிந்தித்தது:

உலகத்தின் துவக்கம் முதல் முடிவு வரையிலான எல்லா காரியங்களையும் முழுமையாக கொண்ட பரிசுத்த வேதாகமம், நமக்கு தேவனால் அளிக்கப்பட்டுள்ளது. அதை சரியாக படித்து, அதன்படி வாழ்ந்தாலே, தேவ சித்தம் செய்து பரலோகம் சென்று சேரலாம். அதேபோல, அந்த வசனங்களில் உள்ள ஜீவன், கேட்பவர்களை இரட்சிப்பிற்கு நேராக நடத்தும்.

அதே நேரத்தில், வேறு மத புத்தகங்களை படித்து, அதிலுள்ள குறைகளை எடுத்துக்காட்டி, பிறரை இரட்சிப்பிற்கு நடத்துவதற்கு தேவனுடைய விசேஷ வரம் இருந்தால் அதை செய்யலாம். அதை விட்டுவிட்டு, எல்லாருக்கும் அது ஒத்து வராது.

எனவே பரிசுத்த வேதாகமத்தை கவனிக்காத அந்த நபருக்காக, அவர் குறிப்பிடும் மத நூலை படித்து விளக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற முடிவுக்கு வந்தேன். மேலும் பரிசுத்த வேதாகமத்தின் வார்த்தைகளில் ஜீவன் இருப்பது போல, பிற மத நூல்களில் சாவுக்கேதுவான வல்லமை இருக்கலாம் அல்லவா?

அந்த சகோதரன் எனக்கு கூறியது போல, ஒரு வேளை வேறு யாராது அவருக்கு கூறிய ஆலோசனையின்படி, குறிப்பிட்ட மத நூலை வாங்கி அவர் படித்த பிறகே, இந்த ஆவிக்குரிய வீழ்ச்சி உண்டாகி உள்ளது. தற்போது அந்த விழுந்த சகோதரன் மூலமாக, எங்களையும் வீழ்த்த பிசாசு முயற்சி செய்துள்ளான்.

அந்த சகோதரனுடன் பேசிய பிறகு, மனதில் குழப்பமான நிலை ஏற்பட்ட போது, தேவ சமூகத்தில் ஆலோசனையை பெற்றதால், நான் தப்பினேன். அவசரப்பட்டு முடிவு எடுத்திருந்தால், நான் விழுந்து போயிருக்கலாம். கர்த்தர் கிருபையாக என்னை பாதுகாத்தார்.

எனவே முதலில் பரிசுத்த வேதாகமத்தை படித்து, அதிலுள்ள ஜீவனை பெற்று கொள்வோம். குழப்பமான கருத்துகளை கொண்ட புத்தகங்கள், பிற மத நூல்கள், கட்டுரைகள் படிக்கும் முன், அது நமக்குள் பாதிப்பை ஏற்படுத்துமா? என்று ஒரு முறை யோசித்த பிறகு படிப்பது நல்லது. கண்ணில் காணும் புத்தகங்களையும், பிறர் நமக்கு தரும் தேவையில்லாத புத்தகங்களைப் படிக்கும் முன் யோசிக்கலாமே?

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *