
சோர்ந்து போகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப் பண்ணுகிறார். ஏசாயா: 40.29
இன்றைய உலகில் சோர்வு என்பது எந்த வயது வித்தியாசம் இல்லாமல் எல்லாருக்கும் ஏற்படுகிறது. அதேபோல சத்துவமில்லாமல் கஷ்டப்படுகிறவர்களைக் காண முடிகிறது. பல சோதனை நேரங்களில், மேற்கண்ட இரு நிலைகளையும் நாம் கடக்க வேண்டியுள்ளது.
சோர்வு என்பது வெறும் உடல் அளவில் மட்டுமின்றி, மனதளவிலும் ஏற்படுகிறது. உடல் சோர்வை நீக்க, சத்தான உணவு வகைகளைச் சாப்பிட்டால் போதுமானது. ஆனால் மனதளவில் ஏற்படும் சோர்வை நீக்குவது அவ்வளவு எளிதல்ல.
இன்று மனச்சோர்வை நீக்கும் வகையில், சிலர் போதைப் பொருட்களை உட்கொள்கிறார்கள். சிலர் பொழுதுப் போக்கு, கேளிக்கை நிகழ்ச்சிகளைப் பார்த்து, மனப்பாரத்தில் இருந்து தப்பலாம் என்று நினைக்கிறார்கள். வேறு சிலர், தியானம், யோகா, சிரிப்பு மருத்துவம் என்று பல காரியங்களைச் செய்கிறார்கள்.
ஆனால் மேற்கண்ட இவை அனைத்தும் குறிப்பிட்ட நேரத்திற்கு மனப்பாரத்தை மறக்க உதவுமே தவிர, நிரந்தரமான தீர்வாக அமையாது. இதை அறியாமல் இன்று பல ஆயிரக்கணக்கான பணத்தைச் செலவிடுகிறார்கள்.
இந்நிலையில் நமக்கு ஏற்படும் எந்த மாதிரியான சோர்வாக இருந்தாலும் அதை அகற்ற, முதலில் பெலன் தேவைப்படுகிறது. அந்தப் பெலனை தேவன் அளிப்பதாக வேதம் குறிப்பிடுகிறது.
தியான வசனத்தில் வரும் மற்றொரு தரப்பினர் சத்துவமில்லாதவர்கள். சத்துவம் என்பதை எளிமையாக கூறினால், திறமை என்று பொருள் கொள்ளலாம். திறமை இருந்தால், திறவுகோல் (சாவி) இல்லாமலே (பூட்டு) திறக்கலாம் என்ற ஒரு வாய்ச்சொல் உண்டு. இன்றைய அவசர உலகில் திறமைக்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
சுய திறமையை மேம்படுத்திக் கொள்ள பல பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. அந்த திறமைகளைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட அளவிலான செழிப்பை அடைகிறார்கள். ஆனால் நம்முடைய சொந்த முயற்சிகளையும் திறமைகளையும் கடந்து, தேவன் அளிக்கும் திறமையின் பலன் நிற்கிறது. இதை அறியாத பலரும், இன்று சத்துவமில்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.
இந்நிலையில் தேவன் அளிக்கும் பெலனையும், சத்துவத்தையும் பெற வேண்டுமானால், அவருக்காக காத்திருக்க வேண்டும் என்று ஏசாயா:40.31 இல் காண்கிறோம். மேலும் நமக்கு இருக்கும் பழைய பெலனையே மேம்படுத்தும் நிலையில் அமையாமல், தேவன் புதுபெலனை அளிக்கிறார்.
இன்றைய தேவனுடைய பிள்ளைகளின் பெரிய பிரச்சனையே, தேவனுக்கு காத்திருப்பது தான். இதைப் பற்றி கேட்டால், “ஆண்டவரிடம் கேட்டேன், அவர் தரவில்லை. அவரை பார்த்து கொண்டிருந்தால், வேலை நடக்காது” என்று சொந்த விருப்பத்தைத் திறமையைப் பயன்படுத்தி செய்கிறார்கள்.
அதன்பிறகு பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டால், தேவன் ஏன் என்னை இப்படி சோதிக்கிறார்? என்று அவரையே கேள்விக் கேட்கிறார்கள். சொந்த முயற்சி, திறமை, பெலனை வைத்து பணியாற்றுகிறவர்களுக்கு சோர்வு ஏற்படும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் கர்த்தருக்காக காத்திருப்பவர்கள், சோர்ந்து போவதில்லை என்று வாசிக்கிறோம்.
எனவே சொந்த பெலனையும், சத்துவத்தையும் பயன்படுத்தி பணியாற்றுவதைத் தவிர்த்து விட்டு, அனுதினமும் தேவன் அளிக்கும் பெலனையும், சத்துவத்தையும் பெற்று செயலாற்றுவோம். அப்போது நாம் எவ்வளவு ஓடினாலும் நடந்தாலும் சோர்வோ, தளர்வோ ஏற்படாது.
ஜெபம்:
எங்களை அதிகமாக நேசிக்கும் பரலோக பிதாவே, தேவ பெலனையும், சத்துவத்தையும் குறித்து எங்களோடு பேசிய உமது வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். பல சந்தர்ப்பங்களிலும் எங்களுக்குள் சோர்வும், தளர்வும் ஏற்படுவதை நீக்கும் வகையில், தேவ பெலனையும், சத்துவத்தையும் கொண்டு நிரம்பி வாழ, உமது சமூகத்தில் காத்திருக்கிறோம். எங்களை புதுபெலத்தால் நிரப்பும், வழிநடத்தும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.