0 1 min 4 mths

இப்போதும் யாக்கோபே, உன்னை சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது, பயப்படாதே; உன்னை மீட்டுக் கொண்டேன்; உன்னைப் பேர் சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன். ஏசாயா:43.1

வேதத்தில், பிறப்பிலேயே எதிர்காலம் குறித்த காரியங்கள் உரைக்கப்பட்டவர்களில் யாக்கோபும் ஒருவர். அந்த வகையில் ஆசீர்வாதத்தை பெற தகுதி பெற்ற யாக்கோபு, அதற்காக காத்திருக்கவில்லை. தனது சொந்த மூளையை பயன்படுத்தி, தேவனுடைய ஆசீர்வாதத்தை பெற்று கொள்ள யாக்கோபு முயற்சி செய்தார்.

கூழ் கொடுத்து அண்ணனையும், மூத்த மகனாக தந்தையையும் ஏமாற்றிய யாக்கோபிற்கு, தேவனை ஏமாற்ற முடியவில்லை. தேவ ஆசீர்வாதத்தை புத்திசாலித்தால் பெற்றாலும், தனது சோதனை நேரத்தில், யாக்கோபிற்கு அது பயன் அளிக்கவில்லை. அந்த சூழ்நிலையில் தேவனை தவிர, வேறு யாரால் உதவ முடியாது என்பதை யாக்கோபு புரிந்துக் கொண்டார்.

தன்னை சந்திக்க வந்த தேவ தூதனிடம், ஒரு இரவு முழுவதும் போராடினாலும், விடிகாலையில் தனது உண்மை நிலையை ஒப்புக் கொண்ட பிறகே, தேவனுடைய பாதுகாப்பான ஆசீர்வாதத்தை பெற முடிந்தது.

இதேபோல நம் ஒவ்வொரையும் குறித்து, தேவனுக்கு ஒரு தெளிவான திட்டம் இருக்கிறது. சிலருக்கு அதை தேவன் வெளிப்படுத்தியும் உள்ளார். ஆனால் அதற்காக காத்திருக்க பொறுமையில்லாத நாம், யாக்கோபை போல சுய ஞானத்தை பயன்படுத்தி, அதை அடைய நினைக்கிறோம். இதனால் பிற்காலத்தில், யாராலும் உதவ முடியாத சூழ்நிலைகளில் அகப்பட்டு கொள்கிறோம்.

இது போன்ற சூழ்நிலைகளில், தேவனிடம் இருந்து மட்டுமே நமக்கு உதவி கிடைக்கும். அதுவும் நமது உண்மை நிலையை அவரிடம் கூறினால் மட்டுமே அதை பெற முடியும்.

தனது பெயரின் பொருளுக்கு ஏற்ப, வாழ்க்கையில் ஒரு ஏமாற்றுக்காரனாக வாழ்ந்தவன் யாக்கோபு. ஆனால் தான் ஒரு ஏமாற்றுக்காரன் என்பதை தேவனிடம் அறிக்கையிட்டு, இஸ்ரவேலாக மாறினார். அதேபோல தேவனுக்கு முன்பாக நாம் நடிப்பதை விட்டுவிட்டு, உண்மையாக நடந்து கொள்வோம். ஏனெனில் அவர் நம்மை சிருஷ்டித்த தேவன். அவருக்கு மறைவானது ஒன்று இல்லை.

இன்று பலரின் ஜெபங்களுக்கு பதில் கிடைக்காத காரணமும் இதுதான். மணிநேரக் கணக்கில் ஜெபித்தாலும், பல நாட்கள் உபவாசித்தாலும், நாம் தேவனுக்கு முன்பாக நடிக்கும் வரை, எந்த பதிலும் தேவனிடம் இருந்து கிடைக்காது. இது போன்ற நடிப்புகளை, தேவன் அறவே வெறுக்கிறார்.

நமது தியான வசனத்தில் காண்பது போல, உண்மை நிலையை ஒப்புக் கொள்ளும் போது, நம்மையும் இஸ்ரவேலாக, தேவன் மாற்றுகிறார். மாற்றுவதோடு மட்டுமின்றி, எந்த மாதிரியான பிரச்சனையில் அகப்பட்டு இருந்தாலும், பயப்பட தேவையில்லை என்கிறார். ஏனெனில், அவர்களை “என்னுடையவன்” என்று கர்த்தர் குறிப்பிடுகிறார்.

எனவே நம்மை தேவனுக்கு முன்பாக உண்மையாக ஒப்புக் கொடுத்து, இஸ்ரவேலாக மாறுவோம். எந்த சந்தர்ப்பத்திலும், தேவனுக்கு முன்பாக நடித்து, காலத்தை வீணாக்குவதை தவிர்ப்போம்.

ஜெபம்:

அன்பான தேவனே, எங்கள் வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களிலும், பலரையும் ஏமாற்றி இருக்கிறோம். மனிதர்களுக்கு முன்பாக நடித்திருக்கிறோம். ஆனால் நீர், எங்களின் உண்மை நிலையை மட்டுமே விரும்புகிறீர் என்று பேசியதற்காக ஸ்தோத்திரம். எங்களை படைத்து, இஸ்ரவேலாக உருவாக்கும் தேவனே, உமக்கு உண்மையுள்ளவர்களாக இருக்க எங்களுக்கு உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *