
இதோ நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? ஏசாயா:43.19
தேவன் தமது மக்களுக்கு எப்போதும் புதிய காரியங்களை செய்யவே விரும்புகிறார். அதேபோல நாமும் எப்போதும் புதுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் ஆசைப்படுகிறார்.
ஒரு பாவி கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு, பரலோக ராஜ்ஜியத்தை எட்டி சேரும் வரை, அவனது ஆவியிலும், சரீரத்திலும் பல மாற்றங்களை அடைய வேண்டியுள்ளது. இதற்காகவே தேவன் தினமும் புதிய கிருபையை தருகிறார். அதை பெற்று கொள்ள நாம் காத்திருக்க வேண்டியுள்ளது.
இதற்கு பரிசுத்தாவியின் வல்லமையால் நாம் தினமும் நிரம்ப வேண்டியுள்ளது. ஆவியில் நிரம்புவது பற்றி கூறினால், உடனே நான் தினமும் பல மணிநேரங்கள் தேவ சமூகத்தில் கழிக்கிறேன் என்று பலரும் கூறுகிறார்கள். அதன் மூலமாக புதுமை ஏற்படுகிறதா? என்பதை கவனிக்க வேண்டும்.
பரிசுத்தாவிக்கு ஒப்புக்கொடுத்து நாம் ஆவியில் புதுப்பிக்கப்படும் போது, ஆவி, ஆத்மா, சரீரத்தில் புதுமையை பெறலாம். அதாவது காலையில் இருந்து மாலை வரை வெளியில் சுற்றிவிட்டு, வீட்டிற்கு வந்து குளித்த உடன் உடலுக்கு ஒருவித புத்துணர்ச்சி கிடைப்பது போல.
இப்படி பரிசுத்தாவியின் வல்லமை நமக்குள் வர வேண்டுமானால், பழைய ஆவிக்குரிய அனுபவங்களை எண்ணி, கூறிக் கொண்டு நம்மை நாமே மேன்மை பாராட்டி கொள்ளக் கூடாது. அப்படி செய்தால், அதை வைத்து கொண்டே காலத்தை தள்ள ஆரம்பித்து விடுவோம்.
பரிசுத்தாவியில் நிரம்பி புதுப்பிக்கப்படும் போது, நமக்குள் இருக்கும் குறைகளை தேவன் உணர்த்துவார். அதற்கு சாக்குப்போக்கு சொல்லவோ, கண்டுகொள்ளாமல் விடவோ செய்தால், அந்த புதுப்பிக்கும் அனுபவத்தை தொடர்ந்து பெற முடியாது.
இன்று பலருக்கும் தங்கள் வாழ்க்கையில் புதிய அற்புதங்களையும், அதிசயங்களையும் தேவன் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் தங்களின் வாழ்க்கையில் அதற்கு தடையாக உள்ள குறைகளை நீக்க விரும்புவதில்லை.
ஆவிக்குரிய உலகில் உள்ள பலருக்கும் இந்த புதிய அனுபவத்தை பெற விருப்பம் இல்லை. இதனால் அவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் வளர முடிவதில்லை. மேலும் அப்படி வளர விரும்பும் பலருக்கும் அறிவுரை கூறுகிறேன் என்ற பெயரில், அவர்களை தடுத்து நிறுத்தி விடுகிறார்.
மாறாக, பரிசுத்தாவியை தொடர்ந்து நமக்குள் புதுப்பிக்க அனுமதிக்கும் போது, நம்மில் பெரிய மறுரூபத்தின் வேலையை அவர் செய்வார். அதனால் மண்ணுக்குரியவர்களான நாம் கொஞ்சம் கொஞ்சமாக விண்ணுக்குரியவர்களாக மாற முடிகிறது. இப்படி அனுதினமும் புதிய காரியங்களை தேவன் நமக்குள் செய்வதை, நாம் அறிகிறோமா? என்று தான் தியான வசனம் நம்மை கேட்கிறது?
ஜெபம்:
எங்களை அளவில்லாமல் நேசிக்கும் ஆண்டவரே, எங்களுக்கு எந்த மாதிரியான புதிய காரியங்களை செய்யவே நீர் விரும்புகிறீர் என்று அறிந்தோம். அதற்காக எங்களை ஒப்புக் கொடுக்கிறோம். அதற்கு தடையாக இருக்கும் குறைகளை உணர்த்தி தாரும். அவற்றை நீக்கி, எப்போதும் எங்களில் ஒரு ஆவிக்குரிய புதுமை காணப்பட வாஞ்சிக்கிறோம். எங்களுக்கு உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் பிதாவே, ஆமென்.