
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்….. ஏசாயா: 9.6
இந்த வசனம், இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தீர்க்கத்தரிசியான ஏசாயா, இயேசுவை குறித்து தீர்க்கத்தரிசனமாக உரைத்த வார்த்தைகளில் சேர்ந்தவை.
இந்த வசனத்தில் இயேசுவின் இரு நிலைகளை நாம் காண முடிகிறது. 1. பாலகன், 2.குமாரன். இவ்விரண்டும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிகவும் அவசியமான வளர்ச்சி நிலைகள் ஆகும்.
பாலகன்:
இது ஒரு கைக் குழந்தையின் பருவம் என்பதால், அதனால் சொந்தமாக எதுவும் செய்து கொள்ள முடியாது. கடினமான உணவு வகைகளை உட்கொள்ளாமல், பால் மட்டுமே குடிக்க முடியும். இதை நமது ஆவிக்குரிய வாழ்க்கையின் இரட்சிக்கப்பட்ட துவக்க நாட்களோடு ஒப்பிடலாம்.
இரட்சிக்கப்பட்ட துவக்க நாட்களில், நாம் கேட்ட எல்லா வேத வசனங்களையும் நம்மால் கிரகித்து கொள்ள முடியாமல் இருந்தது. கர்த்தர் ஆசீர்வதிக்கிறார், சுகமாக்குகிறார், இரட்சிக்கிறார், மன்னிக்கிறார் போன்ற எளிமையான மற்றும் நமக்கு ஆறுதல் அளிக்கும் சாதகமான தேவ வார்த்தைகளை மட்டுமே கேட்டு ஆவிக்குரிய வாழ்க்கையில் வாழ்ந்தோம்.
குமாரன்:
ஆனால் ஒரு குழந்தை எந்த வளர்ச்சியுமின்றி அப்படியே இருப்பதை, எந்த பெற்றோரும் விரும்பமாட்டார்கள். அதுபோல நம் ஆவிக்குரிய வாழ்க்கையில் அனுதினமும் வளர்ச்சி பெற்று, ஒரு குமாரன் அல்லது வாலிபன் என்ற நிலையை அடைய வேண்டும். வாலிப பருவத்தினர் தங்களின் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்கின்றனர். அரும்சுவை உணவை உட்கொண்டு, உடலிலும் மனதிலும் பல மாற்றங்களை பெறுகின்றனர்.
இதேபோல ஆவிக்குரிய வாழ்க்கையிலும், நாம் தொடர்ந்து வளர்ச்சி அடைய வேண்டும் என பரம பிதாவான தேவனும் விரும்புகிறார். ஆவிக்குரிய வாழ்க்கையில் வாலிபர்களாக இருக்கும் போது, இயேசுவிற்காக பாடுபடுவது, ஊழியம் செய்வது, எந்த கஷ்டம் வந்தாலும் பின்மாற்றம் அடையாமல் நிற்பது, ஒரு கட்டத்தில் இயேசுவை போல மாறி பிறரை மன்னிப்பது, இரத்தச் சாட்சியாக மரிக்கவும் தயார் என்ற வைராக்கியம் காட்டுவது என்று அந்த வளர்ச்சியின் தன்மைகளை பட்டியலிடலாம்.
ஆனால் இன்றைய கிறிஸ்தவ சமூகத்தில் பலரும் வாலிப அனுபவத்திற்கு வளர்வது இல்லை. இரட்சிக்கப்பட்ட நாளில் எளிய ஆவிக்குரிய சத்தியங்களை கேட்டு சந்தோஷப்பட்டது போலவே வாழ விரும்புகிறார்கள்.
இதை தான் அப்போஸ்தலனாகிய பவுல் 1கொரிந்தியர்:3.1-2 வசனங்களில் குறிப்பிடுகிறார். இதனால் முதல் நூற்றாண்டில் இயேசுவிற்காக எழும்பி பிரகாசித்த பரிசுத்தவான்களை போல இன்றைய கிறிஸ்தவர்களால் பிரகாசிக்க முடிவதில்லை.
ஆவிக்குரிய வளர்ச்சியை பெற்று, மற்றவர்களையும் கிறிஸ்துவிற்குள் நிலைநிறுத்த வேண்டிய பலரும் இன்று பணத்திற்காகவும், ஆடம்பர காரியங்களுக்காகவும் குறுக்கு வழிகளை பயன்படுத்தி, கிறிஸ்துவ மக்களிடையே கெட்ட பெயரை வாங்குவதோடு, பலரின் வீழ்ச்சிக்கும் பின்மாற்றத்திற்கும் காரணமாக வாழ்கின்றனர்.
எனவே கிறிஸ்துமஸ் கொண்டாட ஆயத்தமாக உள்ள நமக்குள் இயேசு பிறந்திருக்கிறாரா? என்று ஒரு நிமிடம் ஆராய்ந்து பார்ப்போம். அப்படி அவர் பிறந்திருந்தால், நமது சிந்தைகள், எண்ணங்கள், செயல்கள் ஆகியவை மாறி இருக்கிறதா?
இரட்சிக்கப்பட்ட நாளில் இருந்த அதே நிலையில் தொடர்ந்து இருப்பதாக உணர்ந்தால், நம்முள் இருக்கும் இயேசு வளரவில்லை என்று அறியலாம். ஒவ்வொரு நாளும் ஜெபத்திலும், வேத வாசிப்பிலும், சகோதர ஐக்கியத்திலும் வளர்ச்சியை பெறுவதற்கான முடிவுகளை எடுத்து, செயல்படுத்துவோம். இந்த கிறிஸ்துமஸில், குழந்தை இயேசுவை வைத்து கொண்டு திருப்தி அடையாமல், நமக்குள் குமாரனாக பிரகாசிக்கும் இயேசுவை உலகிற்கு காட்டுவோம்.
ஜெபம்:
எங்கள் அன்பான தெய்வமே, இந்த கிறிஸ்துமஸ் வாரத்திற்குள் நீர் எங்களை கொண்டு வந்த உமது கிருபைகளுக்காக ஸ்தோத்திரம். எங்களுக்குள் நீர் குழந்தையாய் பிறந்து, குமாரனாய் வளர்ந்து, உம்மை போல தேவனுடைய சிங்காசனத்தை எட்டி சேர உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.