0 1 min 10 mths

ஆவியினாலே ஆரம்பம் பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவு பெறப் போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா? கலாத்தியர்:3.3

புதிய ஏற்பாட்டில் பரிசுத்த பவுல் எழுதிய நிருபங்களில், கலாத்திய சபைக்கு எழுதிய நிருபமும் முக்கியமான ஒன்றாகும். பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்கும் உள்ள குழப்பத்தில் இருந்த கலாத்திய சபைக்கு, இரண்டிற்கும் இடையிலான வேறுபாட்டை பவுல் தெளிவாக சுட்டிக் காட்டுகிறார்.

நியாயப்பிரமாணத்தின் மூலம் இரட்சிப்பு கிடைத்து இருந்தால், இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்ததே வீணாகி இருக்குமே என்று கூறும் பவுல், அவர்களுக்கு கூறி இருந்த சுவிசேஷத்தை மீண்டும் நினைவுப்படுத்துகிறார். மேலும் அப்படி நியாயப் பிரமாணத்தின் வழக்கங்களைப் பின்பற்றியதால், புத்தியில்லாத கலாத்தியரே என்றும் அழைக்கிறார்.

பாவ வாழ்க்கையில் இருந்து இரட்சிக்கப்பட்டு வரும் போது, நாமும் கலாத்தியரை போல, ஆவியில் சிறப்பாக ஆரம்பித்து இருந்தோம். ஆனால் காலம் செல்லச் செல்ல நம் போக்கு மாம்சத்திற்குரியதாக மாறி விடுகிறது.

எடுத்துக்காட்டாக, இரட்சிக்கப்பட்ட துவக்கத்தில் சுவிசேஷம் கூறும் போது, நமக்கு எதிராக யார் என்ன கூறினாலும் அதை பொருட்படுத்தாமல் விட்டோம். ஆனால் சில ஆண்டுகள் கடந்த பிறகு, தேவாலயத்தில் கேட்கும் பிரசங்கத்தில் கூட குத்தப்படும் வார்த்தைகளை நம்மால் சகிக்க முடியவில்லை. பிரசங்கத்தில் போதகர் என்னையே குறி வைத்து பேசுகிறார் என்று பலரும் கூறுவதை கேட்டிருக்கிறேன்.

இதே பிரச்சனை தான் கலாத்தியருக்கும் ஏற்பட்டது. துவக்கத்தில் தேவ அன்பில் நிரம்பி இருந்த அந்த மக்கள், எல்லா பாடுகளை கிறிஸ்துவிற்காகவும் சுவிசேஷத்திற்காகவும் சகித்தார்கள். ஆனால் போக போக மாம்சத்தில் யோசிக்க ஆரம்பித்தார்கள். இதனால் பழைய ஏற்பட்டு முறைகளுக்கு முக்கியத்துவம் தந்தார்கள். இந்த நிலை நமக்கு ஏற்படக் கூடாது.

ஆவிக்குரிய செயல்பாடுகளை, மாம்சத்தில் யோசித்தால் கண்டிப்பாக பின்மாற்றம் ஏற்படும். வெளியோட்டமாக நாம் தேவாலயத்தில் எவ்வளவோ வேலைகள் செய்யலாம். இதனால் பலரும் நம்மை பக்தர்கள் என்று கூட கருதலாம், கூறலாம். ஆனால் நாம் பின்மாறி போய் கொண்டிருப்போம்.

ஆவிக்குரிய நிலையில் இருந்து மாம்சீகமான நிலைக்கு மாறியிருந்தால், நம் உள்மனதில் பழைய உலக வாழ்க்கையின் விருப்பம் ஏற்படும். அதற்கான தகுந்த நேரமும் வாய்ப்பும் கிடைக்கும் போது, உலக மக்களாகவும் மாறி விடுவோம்.

எடுத்துக்காட்டாக, நாம் வேலை செய்யும் இடத்தில் நண்பர்கள் சேர்ந்து மது அருந்தும் போது, நம்மை அழைக்கிறார்கள் என்று வைத்து கொள்ளுங்கள். அதை செய்யக் கூடாது என்பது நமக்கு தெளிவாக தெரிந்தாலும், நண்பர்களின் முன்னால் கேவலப்பட வேண்டுமே என்ற எண்ணத்தில் அவர்களுடன் கலந்து கொள்ள நேரிடும்.

மேலும் இரட்சிக்கப்படும் முன், இது போன்ற பழக்கங்கள் நமக்கு இருந்திருந்தால், அந்த சந்தர்ப்பத்தில் மாம்சீகமாக யோசித்து, யாருக்கும் தெரியாமல் செய்ய விரும்புவோம், வாய்ப்பு கிடைத்தால் செய்யவும் தயங்கமாட்டோம்.

இந்த நிலையை தான் பவுல் புத்தியில்லாத என்று குறிப்பிடுகிறார். ஏனெனில் கிறிஸ்துவ வாழ்க்கையில், இத்தனை நாட்கள் அனுபவித்த பாடுகள் அனைத்தும் இந்த மாம்சீகமான மாற்றத்தின் மூலம் வீணாகும் என்கிறார் பவுல்.

எனவே பிறருக்கு முன்பாக ஆவிக்குரிய மனிதனாக காட்டி கொண்டு வாழ்வதை தவிர்ப்போம். நம் உண்மையான நிலையை சோதித்து பார்ப்போம். முழு மனதோடு நான் ஆவிக்குரிய காரியங்களைச் செய்கிறேனா? என்று ஆராய்ந்து பார்ப்போம். அப்போது பவுல் குறிப்பிடுவது போல புத்தி இல்லாதவர்களாக தெரிந்தால், நாம் புத்தி உள்ளவர்களாக மாற தேவ கரங்களில் ஒப்புக் கொடுப்போம்.

ஜெபம்:

எங்களை நேசிக்கும் அன்புள்ள ஆண்டவரே, எங்களோடு பேசிய உமது வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். எங்கள் ஆவிக்குரிய வாழ்க்கை புத்தியுள்ளதாக, எங்களுக்கும் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக அமையட்டும். உண்மையான தேவ சந்தோஷத்தையும் சமாதானத்தையும் பெற கிருபை செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *