0 1 min 1 mth

சமீபத்தில் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் கிறிஸ்துவ உலகில் நடைபெறும் பல காரியங்களைக் குறித்து பேசி கொண்டிருந்தார். அப்போது அவ்வப்போது சில பழமொழிகளையும் சேர்த்து கூறினார். அதை கேட்ட எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

ஏனெனில் அவர் கூறிய பழமொழிகள், இன்றைய கிறிஸ்தவர்களின் வாழ்க்கைக்கு கச்சிதமாக பொருந்தின. எனவே நாம் அன்றாடம் கேட்கும் சில பழமொழிகளையும் அதனுடன் ஒத்து போகும் இன்றைய கிறிஸ்தவர்களின் வாழ்க்கை முறைகளையும் குறித்து காண்போம்.

1. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்:

என்ன தான் நாம் மேக்அப் போட்டு, சிறப்பான தோற்றத்துடன் ஆலயத்திற்கு சென்றாலும், தேவ சமூகத்தை நாம் இன்பமாக அனுபவிக்காமல் இருந்தால், நம் முகத்திலேயே அது தெரிந்துவிடும்.

சிலர் ஆவிக்குரிய நபர்களைப் போல சிறப்பாக நடித்தாலும், அவர்களின் முகத்தில், தேவன் அவர்களுடன் இல்லாத வெறுமையான நிலையை காட்டி கொடுத்துவிடும். நம் முழு மனதோடு தேவனை ஆராதித்து, துதிக்கும் போது, மனதில் உண்டாகும் தெய்வீகமான மகிழ்ச்சி, நம் முகத்தில் அழகாக தெரிகிறது.

2. அஞ்சிலே வளையாதது ஐம்பதில் வளையுமா?

இரட்சிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் கேட்கும் வசனங்களுக்கு சரியான முறையில் கீழ்படிந்து வாழ வேண்டும். இதற்காக சில நேரங்களில் நம் பழக்கவழக்கங்கள், எண்ணங்கள், செயல்பாடுகள் ஆகியவற்றை மாற்றி கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்.

தெய்வீகமான மாற்றங்களுக்கு ஒப்பு கொடுக்காமல், நான் நினைப்பது போல தான் வாழ்வேன் என சில ஆண்டுகளுக்கு வாழ்ந்து விட்டால், அதன்பிறகு எவ்வளவு சக்தி வாய்ந்த பல வரங்களைக் கொண்ட பிரசங்கியார் வந்தாலும், நம்மை பரலோகத்திற்கு தகுதிப்படுத்த முடியாது.

3. இக்கரைக்கு அக்கரை பச்சை

நாம் செல்லும் சபை, நமக்கு தேவன் தந்துள்ள ஊழியர், விசுவாசிகள், ஊழியம் ஆகியவற்றை, மற்றவர்களின் காரியங்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது இன்று வழக்கமான ஒன்று.

உங்க பாஸ்டர் எப்படி அன்பா நடந்துக்கறாரு. எங்க பாஸ்டரும் இருக்காரே. மைக்கை பிடிச்சா வெறும் மிரட்டல் தான். ஆசீர்வாதமான ஒரு வார்த்தை கூட வாயில் வராது போன்ற பேச்சுகளை நாம் பல இடங்களிலும் கேட்க முடிகிறது. அக்கறைக்கு இக்கரை பச்சை போல.

4. அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழியே

சபை விசுவாசிகளுக்கு தேவனோடு ஐக்கியத்தை உருவாக்கி கொடுக்கும் பணியை தேவ ஊழியர்கள் செய்கிறார்கள். விசுவாசிகளின் ஆவிக்குரிய நிலையை மேம்படுத்தி, பரலோகத்திற்கு செல்ல பாத்திரவான்களாக மாற்றுவதும் அவர்களின் வேலை தான்.

ஆனால் சில நேரங்களில் தேவ ஊழியர்கள் தவறான வழிகளையும் ஆதரித்து, தவறான மாதிரியை காட்ட நேர்ந்தால், அதுவே விசுவாசிகளின் அழிவுக்கு காரணமாக மாறி விடுகிறது. எனவே தேவ ஊழியம் செய்பவர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில் உங்களை பின்பற்றும் பல ஆடுகள் இருக்கின்றன.

5. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

வாழ்க்கையில் எந்த மாதிரியான பிரச்சனைகள் வந்தாலும், அதற்கு பிசாசு தான் காரணம் என்று சிலர் கூறுவதை கேட்டிருப்பீர்கள். மேலும் தைரியமாக உள்ளவர்களையும் அவர்களின் பேச்சு பயப்பட வைக்கும்.

அங்கே போகாதீர்கள், இதை சாப்பிடாதீர்கள், அந்த நபருடன் பேசாதீர்கள். அவர்களுக்குள் அல்லது அந்த இடத்தில் ஒரு பொல்லாத ஆவி கிரியை செய்கிறது என்று பலரும் நமக்கு அறிவுரை கூறி கேட்டிருப்போம்.

இதில் என்ன கொடுமை என்றால், இப்படி கூறும் சில விசுவாசிகளின் பேச்சை கேட்டு, சில தேவ ஊழியர்களும் குறிப்பிட்ட இடத்தில் உள்ள பிசாசை துரத்த சிறப்பு உபவாச கூட்டம் கூட நடத்துகிறார்கள். ஆனால் இரட்சிக்கப்பட்டு தேவனுக்கு பயந்து உண்மையாக வாழும் யாரையும் பிசாசு நெருங்க முடியாது.

நமக்கு வரும் பிரச்சனைகளுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. பிசாசு மட்டுமே காரணம் என்ற எண்ணம் தவறானது. பிசாசின் மீது பயம் இருந்தால், எந்த தேவ ஊழியத்தையும் செய்ய முடியாது. இன்னும் தெளிவாக கூறினால், உண்மையான கிறிஸ்தவனாக கூட வாழ முடியாது.

6. இரும்பு அடிக்கற இடத்துல ஈக்கு என்ன வேலை?

உண்மையான ஒரு கிறிஸ்தவனுக்கு போக தகுதி இல்லாத பல இடங்கள் இருக்கின்றன. அது போன்ற பாவத்தை தூண்டும் இடத்திற்கு சென்றுவிட்டு, சும்மா போனேன். அது எவ்வளவு மோசமான இடம் தெரியுமா? என்று கூறி, தங்களை பரிசுத்தமான நபர்களாக காட்டி கொள்ளும் நபர்கள் உண்டு.

இதற்கு ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை எடுத்துக்காட்டாக கூறுகிறேன். ஒருவர் 2000 ரூபாய்க்கு சில்லரை வாங்க, பக்கத்தில் இருந்த மதுபான கடைக்கு போயிருக்கிறார். உள்ளே செல்ல முயன்ற அவரை, அங்கிருந்த குடிமகன்கள் தடுத்து, வரிசையில் வருமாறு கூறியுள்ளார்கள். இதற்காக வரிசையில் நின்றுள்ளார்.

இதை பார்த்த அவ்வழியாக சென்ற மற்றொரு விசுவாசி, அவர் சரக்கு வாங்க வரிசையில் நின்றார் என்று தனக்கு அறிமுகமாக எல்லாருக்கும் கூறியுள்ளார். அதை சமாளிக்க வரிசையில் நின்ற விசுவாசி, நான் சில்லரை வாங்க தான் போனேன். ஆனால் அந்த இடத்துல கூட இந்த அக்கிரமக்காரர்களிடம் இருந்து என்னை பாதுகாத்து கொள்ளும் என்று ஜெபத்தோடு தான் சென்றேன் என்று கூறினார்.

சில்லரை வாங்க எவ்வளவோ இடம் இருக்க, தேவையில்லாத இடத்திற்கு போய்விட்டு, தன் செயலை நியாயப்படுத்த இப்படியெல்லாம் புதிய கதைகளைக் கூற வேண்டியுள்ளது. இரும்பு அடிக்கற இடத்துல ஈக்கு என்ன வேலை?

7. கண் கெட்டதுக்கு அப்பறம் சூரிய நமஸ்காரம் செஞ்சானாம்

சிலர் தங்கள் வாழ்க்கையில் வரும் பல முக்கியமான கட்டங்களில், தேவனை நினைக்கமாட்டார்கள். ஒரு வார்த்தை ஜெபம் கூட செய்யமாட்டார்கள். தேவைகளுக்கு மனிதரையும், சொந்த பலத்தையும் நம்பி செய்து விடுவார்கள்.

அதில் தோல்வி அடைந்த பிறகு, அதை சரி செய்ய வேண்டும் என்று ஜெபிப்பார்கள். இன்னும் சிலர் தேவன் என்னை இப்படி கைவிட்டது ஏனோ? என்று புலம்புபவர்களும் உண்டு. எல்லாம் முடிந்த பிறகு, தேவனிடமும் ஊழியர்களிடமும் வந்து புலம்பி என்ன லாபம்?

8. ஆத்த கடக்கற வரைக்கும் ஆண்டவரே, ஆண்டவரேன்னு கூப்பிட்டானாம்

சிலருக்கு வாழ்க்கையில் தேவைகள் வரும் போது மட்டுமே தேவன் நினைவுக்கு வருவார். அந்த நேரத்தில் ஆலயத்திற்கு சரியாக வருவார்கள். எல்லா கூட்டங்களிலும் கலந்து கொள்வார்கள். வீட்டில் கூட உபவாசம் போட்டு ஜெபிப்பார்கள்.

ஆனால் நினைத்தது போல குறிப்பிட்ட காரியம் நடந்து முடிந்தால், அது வரை இருந்த பக்தி திடீரென காணாமல் போய்விடும். பிரதர், வேலை இருக்கு, தொழில் பாக்கணும், குடும்பத்தை பாக்கணும் என்று அதுவரை அவர்களுக்கு எதுவும் இல்லாமல், இப்போது தான் எல்லாம் வந்தது போல பேசுவார்கள்.

சிந்தித்தது:

இப்படி பல பழமொழிகளும் இன்றைய கிறிஸ்தவர்களின் வாழ்க்கையோடு மிகவும் கச்சிதமாக ஒத்துப் போகின்றன. எனக்கு தெரிந்த சில பழமொழிகளை இந்த செய்தியில் போட்டிருக்கேன். இதை படிக்கும் போதோ அல்லது கேட்ட போதோ உங்கள் மனதில் வந்த வேறு பழமொழிகள் இருந்தால் கமெண்ட்டில் சொல்லுங்கள்.

மேற்கூறியது போல, நாம் உலக பழமொழிகளுக்கு நடமாடும் சாட்சிகளாக மாறாமல், வேத வசனங்களுக்கும், நம்மை இரட்சித்த தேவனுக்கும் சாட்சிகளாக மாற முயற்சி செய்வோம்.

அப்போது உலகத்தோடு ஒத்து ஓடி, நம் பரம அழைப்பின் பந்தய பொருளை இழக்காத, ஒரு உண்மையான கிறிஸ்தவனாக நாம் மாற முடியும். நான் மாற முடிவு பண்ணீட்டேன், அப்ப நீங்க?

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *