0 1 min 3 mths

இன்றைய கிறிஸ்தவர்களில் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட காரியங்களில் வேறுபடுகிறார்கள். தேவாலயத்திற்கு வெண்ணிற உடையில் தான் செல்ல வேண்டும் என்று சிலரும், மனது சுத்தமாக இருந்தால் போதும் என்று சிலரும் கூறுகின்றனர்.

இப்படி ஒவ்வொரும் தங்களுக்கு தோன்றிய சில கருத்துகளுடன் சில வேத வசனங்களை சுட்டிக் காட்டி, அதை நிரூபிக்க பார்க்கிறார்கள். அதில் சிலர் வெற்றியும் சிலர் தோல்வியும் பெறுகிறார்கள். ஆனால் இதற்கு இடையில் சில வேதத்திற்கு புறம்பான கருத்துகளும் உள்ளே நுழைந்து விடுகின்றன என்பதை மறுக்க முடியவில்லை.

கேட்டது:

சமீபத்தில் எனது வீட்டிற்கு வந்த ஒரு கிறிஸ்தவ குழுவினர், எனக்கு சுவிசேஷம் கூற வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு நான், ஏற்கனவே இரட்சிக்கப்பட்டு ஆவிக்குரிய ஒரு ஆலயத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன் என்றேன்.

இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்த அவர்கள், அடுத்தடுத்த பல கேள்விகளைக் கேட்டு என்னை குழப்ப பார்த்தார்கள். பைபிளில் இருந்து ஒரு வசனத்தை கூட எடுத்து ஆதாரமாக காட்டாமல், ஏதேதோ பேசி கொண்டே இருந்தார்கள்.

கடைசியாக, நீங்கள் பிதா, இயேசு, பரிசுத்தாவி – இவர்களில் யாரை நம்புகிறீர்கள்? என்று கேட்டார்கள். நான் மூன்று பேரையும் நம்புகிறேன் என்றேன். இயேசுவே பிதாவை நோக்கி ஜெபிக்கும் போது, இயேசு எப்படி தேவன் ஆவார்? எனவே பிதாவை மட்டும் நாம் ஆராதித்தால் போதும்.

புதிய ஏற்பாட்டில் வரும் இயேசு என்பவர் ஒரு சாதாரண மனிதர் என்றும், பரிசுத்தாவி ஒரு மாயை என்று கூறி முடித்தனர். இடையில் பதில் அளிக்க முயன்ற என்னை எதுவும் பேசவும் விடவில்லை. இதை பற்றி கூடுதல் விளக்கம் தேவைப்பட்டால், எங்கள் சபைக்கு வாருங்கள் என்று ஒரு கைப் பிரதியையும் அளித்து சென்றனர்.

இதேபோல மற்றொரு கிறிஸ்துவ சகோதரன், நாம் புதிய ஏற்பாட்டில் இருப்பதால், தசம பாகம் அளிக்க வேண்டிய தேவை இல்லை. அது பழைய ஏற்பாடு உடன் முடிந்துவிட்டது. இயேசுவின் வருகையால், புதிய ஏற்பாடு உருவானது. இதனால் பழைய ஏற்பாட்டில் அளிக்கப்பட்டுள்ள எந்தொரு காரியத்தையும் நாம் பின்பற்ற தேவையில்லை என்றார்.

மேற்கூறிய இந்த இரு சம்பவங்களில் இருந்து, இன்றைய கிறிஸ்தவர்களில் பலருக்கும் பழைய ஏற்பாட்டை பின்பற்ற வேண்டுமா? என்ற சந்தேகம் இருப்பது தெரிய வருகிறது. இதை குறித்து இந்த செய்தியில் ஆராய்வோம்.

ஆராய்ந்தது:

பழைய ஏற்பாட்டு காரியங்களை பின்பற்ற வேண்டாம் என்று கூறுகிறவர்கள், இயேசு கூறிய எந்த காரியங்களையும் முழுமையாக செய்ய முடியாது. ஏனெனில் இயேசுவே பழைய ஏற்பாட்டை ஆதரித்து பல இடங்களில் பேசி உள்ளார். இயேசு கூறுகையில், பழைய ஏற்பாட்டை ஒழிக்க நான் வரவில்லை. அதன் நிறைவேற்ற வந்தேன் (மத்தேயு:5.17) என்றார். அப்படியானால், பழைய ஏற்பாட்டை நாமும் பின்பற்ற வேண்டும் தானே.

புதிய ஏற்பாடு தேவையில்லை என்று கூறுகிறவர்கள் அல்லது இயேசு ஒரு சாதாரண மனிதன் என்பவர்கள், இரட்சிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. ஏனெனில் அவர் மீது விசுவாசம் கொண்டால் மட்டுமே, பிதாவை காண முடியும். பிதாவிடம் செல்ல அவரே வழி (யோவான்:10.9-10) என்றும், அவரை கண்டவர்கள் பிதாவை கண்டவர்கள் (யோவான்:10.30) என்றும் கூறுகிறார்.

இப்படியிருக்க, இயேசுவை தள்ளிவிட்டு, நேரடியாக பிதாவை தொழுது கொள்கிறோம் என்பதை விட, நான் யூதனாக மாறிவிட்டேன் என்று சொல்வது எளிது. மேலும் பழைய ஏற்பாட்டில் உள்ள எல்லா பலிகளையும் செய்ய வேண்டும். அப்படி செய்தாலும், அவர்களால் பிதாவையோ, பரலோகத்தையோ தரிசிக்க முடியாது.

மேலும் காணிக்கை, தசம பாகம் போன்ற பழைய ஏற்பாட்டு காரியங்களுடன் கிறிஸ்துவின் புதிய ஏற்பாட்டு விதிமுறைகளும், நமது நன்மைக்காகவே அளிக்கப்பட்டுள்ளன. அதில் எது தேவை, எது தேவையில்லை என்பதை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் நமக்கு இல்லை. அதை பின்பற்றுவது மட்டுமே நமக்கு தகுந்தது.

சிந்தித்தது:

பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்று பிரித்து பார்க்காமல், பரிசுத்த வேதாகமம் என்பது நமது ஆவிக்குரிய வளர்ச்சிக்காகவும், தேவனையும் அவரது ராஜ்ஜியத்தையும் குறித்து அறிந்து கொள்ள திறவுக்கோலாகவும் அளிக்கப்பட்டு இருக்கிறது என்பதை புரிந்து கொள்வோம். கடைசி காலம் என்பதால், இது போன்ற பல தவறான ஆலோசனைகள், உபதேசங்கள் ஆகியவை வந்து நம்மை குழப்பலாம்.

எனவே எந்த காரியத்தை நாம் புதிதாக கேட்டாலும், அதை வேத வசனங்களின் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்து, பரிசுத்தாவியின் ஆலோசனையில் நடப்பது தான் நம் ஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் தேவனுக்குள் நிலைத்து நிற்கவும் உதவும்.

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *