0 1 min 3 weeks

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சகோதரர் கூறுகிறார்…

பக்தியுள்ள கிறிஸ்தவ பெற்றோருக்கு நான் பிறந்தேன். இதனால் சிறு வயது முதலே தேவ பக்தியில் வளர்க்கப்பட்டேன். நமது எல்லா தேவைகளிலும் தேவனை மட்டுமே சார்ந்து எப்படி வாழ வேண்டும் என்பதை எனக்கு பெற்றோர் கற்றுக் கொடுத்தார்கள் என்று கூறுவதை விட, வாழ்ந்து காட்டினார்கள்.

இதனால் குடும்பத்தின் எந்தொரு தேவைகாகவும், உறவினர்களிடமோ, பழக்கமுள்ள நபர்களிடமோ சென்று உதவி கேட்டது இல்லை. தேவனே எங்களுக்கு எல்லாவற்றிற்கும் எல்லாமுமாக இருந்தார் என்று சொல்ல முடியும். எங்களுக்கு இருந்த அத்தியாவசிய தேவைகள் கிடைக்கப் பெறாமல், பல சந்தர்ப்பங்களில் கஷ்டப்பட்டிருக்கிறோம்.

இது போன்ற சந்தர்ப்பங்களிலும், எங்களின் உறவினர்களிடம் உதவி கேட்க செல்லவில்லை என்பதால், அவர்களுக்கு எங்கள் மீது கடும் கோபம் ஏற்பட்டது. மேலும் எந்த மாதிரியான கஷ்டமான சூழ்நிலையிலும், நாங்கள் தேவனுக்குள் மனமகிழ்ச்சியாக இருந்ததை அவர்கள் விரும்பவில்லை.

எங்கள் குடும்பத்தில் இருந்த மேற்கண்ட சந்தோஷமான நிலையை எப்படியாவது சீர்குழைத்து, எங்களுக்கு ஒரு பாடம் கற்றுத் தர வேண்டும் என்று ஒருசில உறவினர்கள் திட்டமிட்டனர். இதற்காக எங்கள் குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு எதிராக மந்திரவாதம் செய்ய தொடங்கினர்.

உறவு முறையில் கிறிஸ்தவராக இருந்த ஒரு மந்திரவாதி, தன்னிடம் இருந்த ஒவ்வொரு ஏவுல் பிசாசுகளாக, எங்களுக்கு விரோதமாக அனுப்பினார். இதனால் எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு அடுத்தடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.

ஒரு கட்டத்தில், எல்லாருக்கும் ஏதாவது ஒரு வகையில், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களாக மாறினார்கள். இந்தச் சூழ்நிலையிலும் தேவனை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டும் என்ற முடிவில் இருந்து, பெற்றோர் எள் அளவும் மாறவில்லை.

குடும்பத்திற்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருவதை உணர்ந்த எனது பெற்றோர், குடும்ப ஜெபத்தில் அதிக கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தார்கள்.
தேவ ஊழியர்களின் ஆலோசனையின் பேரில், குடும்பத்தில் உள்ள எல்லாரும் இணைந்து காலையிலும், மாலையிலும் குடும்ப ஜெபத்தில் கருத்தாக ஈடுபட்டோம்.

அப்போது கொஞ்சம் கொஞ்சமாக, எங்கள் குடும்பத்தில் இருந்து உடல்நலத்தைக் கெடுத்து வந்த பிசாசின் வல்லமை பலம் குறைய தொடங்கியது. எல்லாருக்கும் பூரண சுகம், பலம், ஆரோக்கியத்தைத் தேவன் கட்டளையிட்டார்.

தங்களின் திட்டம் தோல்வி அடைந்ததை கண்ட உறவினர்களுக்கு, இன்னும் பலமிகுந்த பிசாசுகளை ஏவி விட தொடங்கினார்கள். இவ்வளவு கஷ்டமான சூழ்நிலையிலும், எங்கள் குடும்ப நபர்கள் இடையே இருந்த ஐக்கியம் குறையவில்லை. அதை அவர்களால் சகித்து கொள்ள முடியவில்லை.

எந்த மாதிரியான சூழ்நிலையிலும் குடும்ப ஜெபத்தை விடக் கூடாது என்பதோடு, தினமும் தேவனை துதித்து பாடி, பரிசுத்தாவியின் வல்லமையினால் எல்லாரும் நிரம்பினோம். இதனால் எங்களுக்கு எதிராக வந்த எல்லா பிசாசின் வல்லமைகளும், தோல்வியைத் தழுவின.

ஏற்கனவே பல குடும்பங்களுக்கு எதிராக பிசாசுகளை ஏவிவிட்டு, தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்ட உறவினருக்கு, எங்கள் குடும்பத்தில் தோல்வி மட்டுமே கிடைப்பது பெரும் அதிர்ச்சியை அளித்தது. மேலும் அதிக கோபத்தையும் உண்டாக்கியது.

இதன் விளைவாக, குடும்பத்தில் உள்ளவர்களைப் பலவீனப்படுத்துவது என்பதையும் கடந்து, குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவராக கொன்றுவிடும் பிசாசை ஏவிவிட்டார்கள். அந்தப் பிசாசு எங்கள் வீட்டிற்கு நுழைந்தது, ஆனால் எங்களில் ஒருவரையும் கொல்ல முடியவில்லை.

ஒவ்வொரு நாளும் எங்கள் வீட்டில் நடைபெறும் குடும்ப ஜெபத்தில், அனைவரும் பரிசுத்தாவியில் நிரம்பியதால், தேவனுடைய அக்னி எங்களை சூழ்ந்து கொண்டது. அந்த பிசாசிற்கு யார் மீதும் கை வைக்க முடியவில்லை. பல முறை முயற்சி செய்தும் தோல்வி அடைந்த அந்தப் பிசாசு, அனுப்பிய மந்திரவாதியிடம் திரும்பி சென்றது.

அதை கண்டு அதிர்ச்சி அடைந்த மந்திரவாதி, காரணத்தை கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பிசாசு, எங்கள் வீட்டில் தினமும் காலையிலும் மாலையிலும் எல்லாரும் அக்னியாக மாறி விடுவதாகவும், நாள் முழுவதும் அந்த அக்னியின் பாதுகாப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.

அதற்கு மந்திரவாதி, பெரியளவிலான அக்னியைக் கூட அவிழ்த்துவிடும் தண்ணீரை, அவர்கள் மீது ஊற்றிவிட்டு, உன் தாக்குதலை நடத்த வேண்டியது தானே? என்று கேட்டுள்ளார். அதற்கு பிசாசு, இது சாதாரண அக்னி அல்ல, ஜீவனுள்ள தேவனுடைய அக்னி. அதற்கு அருகில் கூட செல்ல முடியாது.

அந்த தேவனால் அளிக்கப்படும் பாதுகாப்பின் அக்னி என்றதாம். மேலும் தனது தோல்வியை ஒப்புக் கொண்ட பிசாசு, அந்த மந்திரவாதியின் சொற்படி செய்ய முடியாது என்று கூறிவிட்டதாம்.

இதனால் மேற்கொண்டு எங்கள் குடும்பத்தை எதுவும் செய்ய முடியாது என்பதை புரிந்து கொண்ட உறவினர்கள், தங்களின் தீய முயற்சியைக் கைவிட்டனர். மேலும் எங்கள் மீதான பயமும் அவர்களுக்கு உண்டானது.

இந்தச் சாட்சியைப் படித்துக் கொண்டிருக்கும் அன்பான சகோதர சகோதரியே, எங்கள் குடும்பத்திற்கு விரோதமாக வந்த பிசாசின் வல்லமைகளை முறியடித்து, தேவனுடைய பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ள, குடும்ப ஜெபம் போதுமானதாக இருந்தது.

அதேபோல உங்கள் வீட்டில் தினமும் காலையிலும், மாலையிலும் குடும்ப ஜெபத்தை நடத்துவதில் தவற வேண்டாம். குடும்பத்தில் உள்ள எல்லாரும் சேர்ந்து குடும்ப ஜெபத்தில் கருத்தாக கலந்து கொள்ளும் போது, எந்தவித பிசாசின் வல்லமையோ, போராட்டங்களோ உங்களை மேற்கொள்ள முடியாது. கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்.

மேலும் நீங்கள் பிசாசின் போரட்டத்தில் சிக்கி தவித்தாலும், குடும்ப ஜெபத்தின் மூலம், அதில் இருந்து விடுதலைப் பெற முடியும். அதேபோல குடும்பத்தில் சந்தோஷமும், சமாதானமும் நீடிக்கும். குடும்பத்தில் உள்ள எல்லாருக்குள்ளும் தேவ அன்பு நிறைவான நிலையில் அமையப் பெற்று, ஐக்கியமும் பெருகும்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *