
ஒவ்வொரு கிறிஸ்தவர்களின் வாழ்க்கையிலும் ஜெபம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தனி ஜெபம், குடும்ப ஜெபம், சபை ஜெபம் என பல ஜெபங்களில் நாம் கலந்து கொள்கிறோம். ஆனால் இதில் பலரும் தங்களுக்கு சார்ந்த காரியங்களுக்காக ஜெபிப்பது மிகவும் குறைவு.
இதை குறித்து கேட்டால், நாம் பிறருக்காக ஜெபிப்பது தான் முக்கியம். நமக்காக நாமே ஜெபித்தால் நமக்குள் சுயம் வந்துவிடும் என்று பலரும் கூறுவதை கேட்டிருக்கேன். இது குறித்து பேசும் போது, ஒரு சகோதரன் கூறிய அனுபவம் ஞாபகத்திற்கு வருகிறது.
கேட்டது:
தனது கல்லூரி நாட்களில் நடந்த காரியங்களை இப்படி என்னிடம் பேச ஆரம்பித்தார். சொந்த ஊரில் இருந்து 250 கிமீ தூரத்தில் உள்ள ஊரில் எனது கல்லூரி படிப்பை படித்தேன். புதிய ஊர் என்பதால், கல்லூரி நண்பர்களுடன் ரூம் எடுத்து தங்கினேன்.
10 பேர் சேர்ந்து எடுத்த ரூமில் இரட்சிக்கப்பட்டவனாக நான் மட்டும் தான் இருந்தேன். ஒரு வாரத்திற்கு பிறகு, ஒவ்வொருவரின் தனிப்பட்ட தன்மைகளையும் புரிந்து கொள்ள முடிந்தது. நான் உட்பட இருவரை தவிர, மற்ற எல்லாரும் மது பழக்கம் கொண்டவர்களாக இருந்தனர்.
இதற்காக ரூமில் ஒரு பார்ட்டி வைத்து, எல்லாரும் கும்பலாக உட்கார்ந்து குடித்தனர். அப்போது எங்களையும் அதில் கலந்து கொள்ள கேட்டு கொண்டனர். ஆனால் நான் உடன்படவில்லை. தொடர்ந்து, ஓரிரு முறை கூறிய போதும், நான் ஒத்துக் கொள்ளவில்லை.
ஆனால் என் மனதில், நான் கிடைத்த நல்ல வாய்ப்பை தவற விடுகிறேனா? இதை யார் பார்க்க போகிறார்கள்? என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதை குறித்து அவர்களிடம் எதுவும் கூறாமல், வேண்டாம் என்ற உறுதியுடன் இருந்தேன்.
அதன்பிறகு, ரூமில் இருந்த எல்லாரும் குடித்தாலும், என்னை குடிக்க தொந்தரவு செய்யமாட்டார்கள். அவன் இயேசு நாதர் அப்படித்தான் இருப்பான், என்று என்னை தனியாக விட்டு விடுவார்கள். இப்படியே நாட்கள் கடந்தன.
கல்லூரி படிப்பை முடித்து, சொந்த ஊருக்கு திரும்பினேன். ஒரு முறை தாயிடம் பேசி கொண்டிருந்தேன். அப்போது, நான் கல்லூரியில் படித்த 3 ஆண்டுகளும், ஒவ்வொரு மாதத்தின் முதல் 10 நாட்களில் காலை ஒரு நேரம் எனக்காக மட்டும் உபவாசத்துடன் ஜெபித்ததாக கூறினார்.
மேலும், என் கண்களுக்கு நீ தூரமாய் இருந்தாலும், தேவனுடைய பார்வையில் விலகி இருக்கக் கூடாது என்று ஜெபித்தேன். அவருடைய பாதுகாப்பின் கரம் உன்னோடு இருக்க வேண்டும் என்று விரும்பினேன் என்றார்.
ரூமில் என்னோடு குடி பழக்கம் இல்லாமல் இருந்த நண்பர், அங்கு வந்து மது குடிப்பது, புகைப் பிடிப்பது போன்ற பழக்கங்களைக் கற்று கொண்டு, வீட்டாருக்கு பின்னாட்களில் பெரிய தலைவலியாக மாறினார். ஆனால் நான் பாதுகாக்கப்பட்டதன் பின்னணியில் தாயின் உபவாச ஜெபம் இருந்ததை அறிந்து வியந்தேன் என்று கூறி முடித்தார்.
சிந்தித்தது:
இந்த காலத்தில் பல ஊழியர்களின் பிள்ளைகள் கூட பின்மாற்றத்தில் போகிறார்கள். சிலர் உலகத்தில் உள்ளவர்களை விட மோசமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். இது குறித்து கேட்டால், அது பிசாசின் சதி, போராட்டம் என்று பல காரணங்களைச் சொல்கிறார்கள்.
ஆனால், சாதாரண விசுவாசியான மேற்கண்ட சகோதரனுக்கு அவரது தாயின் ஜெபம் பாதுகாப்பாக இருந்தது. பிறருக்காக ஜெபிப்பதில் தவறில்லை. அதே நேரத்தில் நம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஜெபிக்க மறக்கக் கூடாது. அப்படி மறக்கும் பல கிறிஸ்தவ குடும்பங்களில் தான் பிள்ளைகள் பிசாசின் தந்திரமான யோசனைகளுக்கு இரையாகி விடுகிறார்கள்.
நம் வீட்டில் இருக்கும் பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்காகவும் தினமும் ஜெபித்து, அவர்களை தேவ கரங்களில் ஒப்புக் கொடுக்கும் போது, அவர் எல்லா தீமைக்கும் விலக்கி காப்பார் என்பதில் சந்தேகமில்லை. நான் எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்காக ஜெபிக்க முடிவு செய்துவிட்டேன். அப்ப நீங்க?
– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.