
அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; சங்கீதம்.91.4
தேவன் நம்மை பாதுகாக்கும் தன்மையை, ஒரு கோழியின் வாழ்வோடு ஒப்பிட்டு கூறுகிறார். பூமியில் தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட ஒவ்வொரு உயிரிக்கும் சில சிறப்பு பண்புகள் இருக்கிறது. நம் தியான வசனத்தில் கோழிகளின் சிறப்பு தன்மைகளை உவமையாக கூறப்படுகிறது.
பறவையினத்தைச் சேர்ந்த கோழியினால் பறக்க முடியாது. நிலத்திலேயே முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் கோழி, தனது குஞ்சுகளை பத்திரமாக காப்பாற்றுகிறது.
இந்நிலையில் நமது தியான வசனத்தில் 2 முக்கிய காரியங்களை காண முடிகிறது. 1.தேவன் தனது சிறகுகளாலே நம்மை மூடுகிறார். 2.நாம் அவரது செட்டைகளின் கீழே அடைக்கலம் பெறுகிறோம்.
தேவன் சிறகுகளாலே எப்படி நம்மை மூடுகிறார்? கழுகு, பூனை, காக்கை, பாம்பு என நிறைய எதிரிகளை கொண்டது கோழி. கோழி, தன் குஞ்சுகளுடன் இரை தேட செல்லும் போது, குறிப்பிட்ட சத்தத்தை தொடர்ந்து எழுப்பி கொண்டே இருக்கும். இதன் மூலம் கோழியை விட்டு குஞ்சுகள் தூரமாக சென்றுவிடாமல் பார்த்து கொள்ளும்.
இதேபோல தேவனை விட்டு நாம் தூரமாக சென்றுவிடாமல் இருக்க, தேவ ஊழியர்கள், வேத வசனங்கள் மூலம் நம்மோடு அவ்வப்போது தேவன் பேசுகிறார். நாம் கேட்கும் வேத வசனங்களுடன் நமது வாழ்கையை ஒப்பிட்டு பார்த்து தேவனோடு எப்போது நெருங்கி வாழ பழக வேண்டும்.
இரைத் தேடும் போது, எதிரிகள் யாராவது நெருங்கி வந்தால், உடனே ஆபத்தை குறிக்கும் ஓசையை கோழி எழுப்பும். உடனே குஞ்சுகள் தாயிடம் ஓடி வந்து இறக்கையினுள் சேர்ந்து கொள்ளும். அதேபோல நாம் பிசாசின் பிடியில் சிக்காமல் இருக்க, ஆபத்து நேரங்களில் தேவன் நம்மை எச்சரிக்கிறார். அந்த எச்சரிப்பிற்கு கீழ்படியும் போது, நாம் அவரது சிறகுகளின் கீழே பாதுகாக்கப்படுகிறோம்.
தேவனுடைய செட்டைகளின் கீழே அடைக்கலம் பெறுவது எப்படி? குஞ்சுகளின் தேவையை அறிந்து கோழி இரையை கொடுக்கிறது. அதுபோல நமது தேவைகளை தேவன் நன்றாக அறிந்திருக்கிறார். எனவே வாழ்க்கையின் தேவைகளுக்காக, மனிதர்களை நாடி நாம் செல்ல கூடாது. தேவனை நோக்கி ஜெபிக்க வேண்டும்.
தேவனுடைய செட்டைகளின் கீழே வரும் போது, அவர் நமது தேவைகளை சந்திக்கிறார். மனிதர்களை நம்பி செல்லும் போது, சில நேரங்களில் நமக்கு உதவி கிடைத்தாலும், அது நிரந்தர தீர்வாக அமைவதில்லை.
தேவனுடைய சிறகுகள் என்பது அவரது மாறாத அன்பை குறிக்கிறது. அவரது அன்பிற்குள் அடங்கி இருக்கும் போது, நாம் ஒரு பாதுகாப்பான நிலையை உணர முடியும்.
எனவே நம்மை சிறகுகளாலே மூடும் தேவனுடைய அன்பை நினைத்து தினமும் நன்றியுள்ள இதயத்துடன் துதிப்போம். அதேபோல அவரது செட்டையின் கீழே அடைக்கலம் பெற்று, போராட்டங்களில் இருந்து தப்பித்து கொள்வோம்.
ஜெபம்:
அன்புள்ள தேவனே, எங்களை நீர் உமது சிறகுகளாலே மூடும் அன்பை நினைத்து நன்றியுள்ள இதயத்தோடு உம்மை துதிக்கிறோம். எத்தனையோ சந்தர்ப்பங்களில் நாங்கள் உமது அன்பின் சிறகுகளை விட்டு தூரமாய் போனதால், பல இழப்புகளை சந்தித்தோம். இனி உமது சிறகுகளின் மறைவில் இருந்து விலகாமல் எங்களை காத்துக் கொள்ளும். மாறி போகும் மனிதர்களை நம்பி வாழாமல், மாறாத உம்மை மட்டுமே நம்பி வாழ கிருபை தாரும். இயேசுவின் நாமத்தினாலே கேட்கிறோம் பிதாவே, ஆமென்.