சங்கீதம்:1.2

கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்” சங்கீதம்:1.2

சங்கீத புத்தகத்தின் முதல் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய தியான வசனம் கிறிஸ்தவர்களுக்கு மிகவும் பழக்கமானது. எனினும் நம் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு தேவையான ஒரு ஆழமான கருத்தை இந்த வசனத்தின் மூலம் காணலாம்.

தியான வசனத்தில் முதலில் பிரியமாயிருந்து… என்ற வார்த்தை வருவதை காணலாம். எந்த காரியத்தையும் நாம் விரும்பி செய்வதற்கும், கடமைக்காக செய்வதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அந்த வகையில் பரிசுத்த வேதாகமத்தின் மீது பிரியம் இருந்தால் மட்டுமே அதை படிக்க வேண்டும் என்ற வாஞ்சை வரும்.

ஆனால் இன்று, கிறிஸ்தவர்களாக இருக்கிறோமே என்ற காரணத்திற்காக பலரும் வேதத்தை படிக்கிறார்கள். இதனால் நம் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு எந்த பிரயோஜனமும் ஏற்பட போவதில்லை என்பது ஒரு கசப்பான உண்மை. மேலும் இப்படி படிப்பவர்களுக்கு வேதத்தின் அடிப்படை சாத்தியம் கூட தெரியாமல், பிசாசின் சோதனைகளில் சிக்கி தவிக்க நேரிடுகிறது.

வேதத்தின் மீது பிரியமாயிருந்து வாசித்தால் அது நமக்கு இனிமையாக இருக்கும். அதே நேரத்தில் அந்த வசனங்கள் நம்மோடு பேசும் ஆற்றல் கொண்டவை என்பதையும் அறிய முடியும். அந்த வசனங்கள் நம்மோடு பேச வேண்டுமானால், படித்த வேத வசனங்களை குறித்து நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியுள்ளது. இதையே தியானம் என்று வேதம் குறிப்பிடுகிறது.

மேற்கூறிய வசனத்தை படிக்கும் பலரும் – படிப்பதற்கும், தியானத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அறியாமல் பேசுவதை காணலாம். இரவும் பகலும் தியானிப்பது என்றவுடன் எப்போதும் பைபிளும் கையுமாக சுற்றிக் கொண்டு, அதை படித்துக் கொண்டே இருப்பது என்று நாம் தவறாக புரிந்து கொள்ள கூடாது.

படிப்பது என்பது சாதாரணமாக ஒரு செய்தித்தாளை அல்லது ஒரு கதை புத்தகத்தை வாசிப்பதை போன்றது. ஆனால் வாசித்த பிறகு, அந்த வசனங்களை குறித்து நாம் ஆழ்ந்து சிந்திக்கிறாமே? அது தான் தியானிப்பது.

வேதத்தை வாசித்த பிறகு, அந்த வசனம் இப்படி கூறுகிறதே, என் வாழ்க்கையில் அந்த குறிப்பிட்ட அனுபவம் இல்லையே? என்று சிந்திக்க வேண்டும். இந்த தியானிக்கிற அனுபவம் ஒவ்வொரு கிறிஸ்தவனின் வாழ்க்கையிலும் இருந்தால் மட்டுமே ஆவிக்குரிய வாழ்க்கையில் நிலைநிற்க முடியும்.

எனவே நம் வாழ்க்கையில் தினமும் வேதத்தை வாசிக்க முதலில் நேரத்தை ஒதுக்குவோம். அதே நேரத்தில் வாசித்த வேத வசனங்களோடு நம் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்வோம். அப்போது தேவனோடு உள்ள ஐக்கியத்தில் நாம் தினமும் வளர முடியும். மேலும் தேவ சித்தம் கொண்ட ஆசீர்வாதங்களை பெற்று, வேதம் குறிப்பிடுவது போல பாக்கியவான்களாக மாற முடியும்.

ஜெபம்:

அன்புள்ள இயேசுவே, எங்களுக்கு அளித்த உமது அருமையான ஆலோசனைக்காக ஸ்தோத்திரம். நாங்கள் இன்று முதல் தினமும் வேதத்தை வாசிக்க எங்களுக்கு உதவி செய்யும். வாசிக்கும் வேத வசனங்களை தியானித்து அதிலிருந்து கிடைக்கிற தேவ வல்லமையை பயன்படுத்தி பிசாசின் போராட்டங்களில் ஜெயமெடுக்க கிருபை தாரும். வேத வசனங்களுக்கு ஏற்ப எங்கள் வாழ்க்கை மாற்றப்பட்டு, உமது வருகையில் உம்மை சந்திக்கும் பாக்கியவான்களாக எங்களை உருவாக்கும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel