
கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை. சங்கீதம்: 16.8
இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதின் வாழ்க்கையில் பலவிதமான நெருக்கங்கள், சோதனைகள், பாடுகள் வந்ததாக வேதத்தில் காண்கிறோம். ஆனால் எந்த மாதிரியான சூழ்நிலையிலும், தாவீது மனசோர்வு அடைந்து தேவனை விட்டு விலகிப் போகவில்லை. இது எப்படி சாத்தியமானது என்ற கேள்விக்கான பதிலாகவே, இன்றைய தியான வசனம் அமைந்துள்ளது.
கர்த்தரை எப்பொழுதும் தாவீது, தனக்கு முன்பாக வைத்திருந்தார். இதனால் அவரது வாழ்க்கையில் வந்த துன்பங்கள், துயரங்கள் ஆகியவை அவரை சோர்வடைய செய்யவில்லை.
தாவீதிற்கு ஒரு கவசம் போல தேவன் முன்பாக இருந்ததால், தேவனை தாண்டியே எல்லா காரியங்களும் தாவீதை அடைந்தன. எனவே அவரது வாழ்க்கையில் தேவன் அனுமதிக்காமல் எந்த காரியமும், தனக்கு நேரிடாது என்ற நம்பிக்கை தாவீதிற்குள் இருந்தது.
மேலும், அவரது வாழ்க்கையின் எல்லா காரியங்களை குறித்தும், தேவனிடம் ஆலோசனை கேட்பவராக இருந்தார். இதனால் அவருக்கு கஷ்ட நேரங்களில் முடிவெடுக்க முடியாத குழப்பங்கள் ஏற்படவில்லை. எனவே கோலியாத் போன்ற மேற்கொள்ள முடியாத எதிரிகளையும், எளிதாக வீழ்த்த முடிந்தது.
இந்நிலையில் இன்று நம் வாழ்க்கையில் வரும் சில துயரமான சூழ்நிலைகளில், நாம் ஆவியில் சோர்ந்து போய் தேவனையே மறந்து விடுகிறோம். சில நேரங்களில் தேவன் எனக்கு ஏன் இப்படி செய்தார் என்று புலம்புவதோடு, அவர் மீது கோபப்படவும் செய்கிறோம். பின்மாற்றத்திலும் சென்று விடுகிறோம்.
ஆனால் நாம் செய்யும் மேற்கண்ட நடவடிக்கைகளை தேவன் விரும்புவதில்லை. எனவே தாவீதை போல, நமக்கு முன்பாக தேவனை கொண்டு வருவோம். அப்போது, எல்லா பிரச்சனைகளிலும் நமக்கு பெரும் ஆறுதல் கிடைக்கிறது.
சிலரது வாழ்க்கையில் துன்பங்கள், துயரங்கள் ஆகியவை ஒருபுறம் பெரும் பாரமாக இருக்கிறது என்றால், மறுபுறம் சிலருக்கு பாவ சுபாவங்களில் இருந்து விடுதலை கிடைக்காமல் தவிக்கிறார்கள். தேவனை நம் முன்னே வைப்பது, இதற்கும் ஒரு தீர்வாக அமைகிறது.
நம் வாழ்க்கையில் தேவனை முன்பாக வைத்து வாழும் போது, பரிசுத்தமான தேவனை கவனிக்க துவங்குவோம். நம்மை தொல்லைப்படுத்தும் பாவத்தின் மீது நமது கவனம் செல்லாது. நாம் பரிசுத்தமாக வாழ விரும்பும் போது, ஒவ்வொரு பாவப் போராட்டத்தின் போதும், அதை எதிர்த்து வெற்றிப் பெற தேவன் நமது வலது பாரிசத்தில் நின்று உதவுகிறார்.
நமக்கு துணை நின்று உதவும் இயேசு, இவ்வுலகின் எல்லா பாவங்களையும், பாவ வல்லமைகளையும் ஜெயித்தவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே அவரது உதவினால், நம்மாலும் அவற்றை ஜெயிக்க முடிகிறது.
எனவே நம் வாழ்க்கையில் உள்ள எல்லா பாவ எண்ணங்களையும், அதனால் ஏற்படும் துன்பங்களையும் எதிர்த்து போராடும் வகையில், தேவனை நம் முன்பாக வைப்போம்.
இயேசு சென்ற பாதையில் நானும் சென்று, அவருக்கு கிடைத்த அதே ஜெயமான வாழ்க்கையை நானும் பெறுவேன் என்று முடிவு செய்வோம். அழிவுக்கு வைக்கப்பட்டுள்ள இந்த உலக சந்தோஷங்களை நம்மை விட்டு அகற்றி, அழியாத பரலோக வாழ்க்கையை எதிர்நோக்கி முன்னேறுவோம்.
ஜெபம்:
அன்புள்ள பரலோக பிதாவே, எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் உம்மையே, எங்களுக்கு முன்பாக வைத்து வாழ உதவி செய்யும். உம்மை முன்னிறுத்தி எங்களையே ஆராய்ந்து, பாவ கிரியைகளை எங்களை விட்டு அகற்றி, உம்மைப் போல பரிசுத்தமாக வாழ்ந்து, உமது ராஜ்ஜியத்தில் வந்து சேர உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.