
நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும். சங்கீதம்:90.12
இந்த உலகத்தில் ஒவ்வொரு குழந்தைப் பிறக்கும் போதும், அதற்கு ஒரு இறப்பு நாள் இருக்கிறது என்பது உறுதியாகிறது. எனவே நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளை முடிக்கும் போதும், பிறந்த நாள் நம்மை விட்டு தூரமாகவும், இறக்கும் நாள் நெருங்கியும் வருகிறது.
மனிதன் ஒரே முறை தான் பிறக்கிறான், ஒரே முறை தான் இறக்கிறான். ஆனால் நம்மில் பெரும்பாலானோர் நமது பிறந்தநாளை ஆண்டுதோறும் சந்தோஷமாக நினைவுக் கூர்ந்து கொண்டாடுகிறோம்.
அதே நேரத்தில் நமது இறப்பின் நாள், நம்மை நோக்கி நெருங்கி வருகிறது என்பதை யோசிப்பதும் இல்லை, யோசிக்க விரும்புவதும் இல்லை என்பது தான் உண்மை.
ஏனெனில் மரணம் அல்லது இறப்பு என்றாலே, எல்லா மனிதனுக்கும் ஒரு வித கலகமும், பயமும் ஏற்படுகிறது. இந்த உலகில் தனக்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள் இன்னும் நீடித்து கிடைக்காதா என்ற எண்ணம் எல்லா மனிதனுக்கும் உண்டு. ஏனெனில் மனிதன், தேவனுடைய சாயலாக உருவாக்கப்பட்டவன் அல்லவா? அவருக்கு மரணம் என்பது இல்லையே.
நாம் பிறந்த போது குழந்தையாக இருந்தோம் என்பது யாவரும் அறிந்தது. இந்த உலகில் நாம் வளர்ந்த போது, பல காரியங்களைக் குறித்த அறிவை பெற்று கொண்டோம். ஒவ்வொரு நாளும் புதுபுது காரியங்களைக் கற்றுக் கொள்கிறோம். ஆனால் எவ்வளவு காரியங்களைக் கற்றுத் தேர்ந்தாலும், ஒரு மனிதன் ஞானமுள்ள மனிதனாக மாற முடியாது என்று வேதம் கூறுகிறது.
பைபிளை பொறுத்த வரை, தனது பிறப்பையும் இறப்பையும் குறித்து அறிந்த ஒரு மனிதனால் மட்டுமே ஞானியாக இருக்க முடியும். இது சாதாரண மனிதனால் கூடாத காரியம். நமது பிறப்பை பெற்றோர் மற்றும் மற்றவர்களிடம் இருந்து அறிந்து கொள்ள முடியும் என்றாலும், இறப்பு என்பது தேவனிடம் இருந்து மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.
எனவே தியான வசனத்தை எழுதிய மோசே, தனது நாட்களை எண்ணும் அறிவை தேவனிடம் கேட்கிறார். ஏனெனில் அந்த அறிவைப் பெற்றவர்களுக்கு ஞானமுள்ள இருதயம் இருக்கும் என்று கூறுகிறார். இதை உலக மக்கள் மெய்ஞானம் அல்லது தெய்வீக ஞானம் என்கிறார்கள்.
பரிசுத்த வேதாகத்தில் ஒரு மனிதனின் துவக்கம் முதல் முடிவு வரை தெளிவாக காட்டுகிறது. மேலும் மரணத்திற்கு பிறகு நடக்க உள்ள காரியங்கள் கூட தெளிவாக கூறுகிறது. எனவே வேதத்தை தினமும் வாசித்தால் மட்டுமே, நம்மைக் குறித்த தேவனுடைய சித்தம் என்ன என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
இந்த உலகில் நாம் வைக்கப்பட்டிருக்கும் நாட்களை பயனுள்ளதாகவும் மாற்ற முடியும். ஞானமில்லாத ஒரு மனிதன், தனது ஆயுட்காலத்தை வீணாக கழிக்கிறான். நன்கு படித்தவர்கள் கூட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைக் காண்பதாக கூறுகிறார்கள். ஞானமுள்ளவர்களாக இருந்தால், யாராவது பொழுதை வீணாக போக்குவார்கள்? நிச்சயம் செய்யமாட்டார்கள்.
மேலும் இந்த உலக வாழ்க்கையை முடித்த பிறகு, நமது நித்திய வாழ்க்கை எங்கு அமையும் என்பதை நாம் உறுதியாக அறிய வேண்டியுள்ளது. நமது நித்திய வாழ்க்கை அமைதியாகவும், சந்தோஷம் மிகுந்ததாகவும் அமையும் என்ற உறுதி இருந்தால், நிச்சயம் இறப்பைக் கண்டு யாருக்கும் பயம் ஏற்படாது.
பரலோகத்தை எதிர்நோக்கும் அல்லது அங்குள்ள வாழக்கையை குறித்த பாடல்களை, மரண நாட்களில் பாடும் சாவு பாடல் என்ற குறுகிய மனப்பான்மை நம்மில் இருந்து மறைந்து, அந்த நாளுக்காக காத்திருக்கும், ஞானமுள்ளவர்களாக மாறுவோம்.
எனவே இந்த உலகில் நமக்கு அளிக்கப்பட்டுள்ள வாழ்க்கையின் நாட்களை எண்ணும்படி, ஞானமுள்ளவர்களாக மாறும்படி, தேவனுடைய போதனையை தினமும் வேதத்தை வாசிப்பதன் மூலம் அறிந்து கொள்வோம்.
ஜெபம்:
எங்களை நேசிக்கும் அன்பான தேவனே, இந்த உலகில் அளிக்கப்பட்டுள்ள நாட்களின் அளவை அறிந்து கொண்டு, அதை சரியான முறையில் பயன்படுத்தும் வகையில், ஞானமுள்ளவர்களாக மாறும்படி எங்களுக்கு போதித்து அருளும். எங்கள் மரண நாளை கண்டு பயப்படுவதற்கு பதிலாக, அதை சிறப்பானதாகவும் ஆசீர்வாதமாகவும் மாற்றி கொள்ள கிருபை தாரும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.