
நீதிமான் பனையைப் போல செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப் போல வளருவான். சங்கீதம்:92.12
இந்த வசனத்தில் சங்கீதக்காரன், ஒரு நீதிமானின் அனுபவத்தை பனை மரத்திற்கும், கேதுரு மரத்திற்கும் ஒப்பிட்டு கூறுகிறார். இதில் பனை மரத்தை நம்மில் பெரும்பாலானோர் பார்த்திருக்க கூடும் என்பதால், அதை கொண்டு சில ஆவிக்குரிய சத்தியங்களை அறிந்து கொள்வோம்.
1. உயர்ந்து வளரும்: பனை மரம் எப்போது மேல் நோக்கி வளைவு நெகிழ்வுகள் இல்லாமல், உயர்ந்து வரும் தன்மை கொண்டது. மேலும் அதற்கு கிளைகள் இருக்காது. இதை ஆவிக்குரிய வாழ்க்கையில் இயேசுவை மட்டுமே சார்ந்து வாழும் அனுபவத்தோடு ஒப்பிடலாம். எந்த தேவைகள் வந்தாலும், தேவனையே மட்டுமே நோக்கி பார்க்கும் அனுபவம் நமக்கு தேவை.
ஏனெனில் நாம் கீழானவைகளை அல்ல, மேலானவைகளையே நோக்கி பார்க்க வேண்டியவர்கள் என்று வேதத்தில் (கொலோசெயர்:3.1-2) காண்கிறோம். இயேசுவே நமக்கு வழியாக இருக்கும் போது, சிலர் போதகர்கள், புனிதர்கள், உடன் விசுவாசிகள், நண்பர்கள் போன்ற குறுக்கு வழிகளை நாடுகிறார்கள். இந்த குறுக்கு வழிகள் அனைவரும் மனிதர்கள் என்பதால், நம்மால் தேவனை சென்றடைய முடியாமல் போகிறது. அவரை (தேவனை) நோக்கி பார்த்தால் மட்டுமே நம்மால் பிரகாசிக்க முடியும் (சங்கீதம்:34.5).
2. மேற்பகுதி கடினம்: பனை மரத்தின் மேற்பகுதி மிகவும் கடினமாக இருக்கும். இது உலகில் இருந்து வேறுபட்டு வாழும் அனுபவத்தை குறிக்கிறது. உலகின் எந்த மாதிரியான அசுத்தங்கள், பாவ ஆலோசனைகள், போராட்டங்கள் வந்தாலும், அதை எதிர்த்து நிற்க வேத வசனத்தின் வல்லமையை நாம் பெற்றிருக்க வேண்டும்.
தாவீதின் வாழ்க்கையில் கஷ்ட நேரத்தில், தன்னை சூழ்ந்திருந்த மக்கள் அனைவரும் அவரை எதிர்த்து கல்லெறிய வந்த போதும், தேவனுக்குள் பலப்பட்டார் என்று வேதத்தில் (1சாமுவேல்:30.6) வாசிக்கிறோம். எனவே நாமும் கஷ்ட நேரங்களில் உலகத்தோடு சேர்ந்து தேவனை தூஷிக்காமல், தேவனுக்குள் பலப்பட வேண்டும்.
3. உட்பகுதி மென்மை: பனை மரத்தின் உட்பகுதி மேன்மையாக இருக்கும். இது நாம் இயேசுவின் சுபாவத்தை பெற்றிருப்பதை குறிக்கிறது. நான் ஒரு கிறிஸ்தவன் என்று வெளியே கூறுவதோடு நின்றுவிடாமல், வாழ்க்கையில் இயேசுவை போல வாழ்ந்து காட்ட வேண்டும்.
நாம் வாழும் முறையை காண்பவர்கள், நம்மை குறித்து நல்ல சாட்சி கொடுக்க வேண்டும். அப்போது தான் நமக்குள் ஆவிக்குரிய கனிகள் இருப்பது உறுதியாகும். ஆவிக்குரிய கனிகளை அளித்தால், தேவ சித்தமுள்ள வாழ்க்கையை வாழ்வது எளிதாகிறது.
4. ஆணிவேர் கிடையாது: பனை மரத்திற்கு ஆணி இருக்காது. இது உலகத்தை சார்ந்து வாழாத அனுபவத்தை குறிக்கிறது. நமது தேவைகளுக்கு மட்டுமே உலகை பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, தேவனை காட்டிலும் உலக காரியங்களுக்கு, நம் வாழ்க்கையில் முக்கியத்துவம் அளிக்கக் கூடாது.
அப்படி அளிக்கும் போது, நாம் உலகில் ஆணி வேரை ஊன்ற ஆரம்பித்து விடுகிறோம். ஏனெனில் நம் இயேசு உலகத்தான் அல்ல, எனவே நாமும் உலகத்தாராக இருக்க கூடாது (யோவான்:17.16). நாம் உலகத்தாராக வாழ்ந்தால், இயேசுவின் வருகையில் கைவிடப்படுவோம்.
எனவே மேற்கூறிய பனை மரத்தின் அனுபவங்களை நம் வாழ்க்கையின் அனுபவமாக மாற்றிக் கொண்டு, நீதிமான்களாக வாழ்வோம். உலக காரியங்களில் அடிமைப்பட்டு போகாமல், இயேசுவின் வருகைக்கு எப்போதும் காத்திருந்து, அவரோடு செல்ல ஆயத்தப்படுவோம்.
ஜெபம்:
எங்களை நேசிக்கும் அன்புள்ள ஆண்டவரே, நீதிமானை பனை மரத்தோடு ஒப்பிட்டு, எங்களோடு பேசிய வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். பனை மரத்தில் நாங்கள் கண்ட அந்த ஆவிக்குரிய அனுபவங்களை எங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி, உமது வருகைக்கு ஆயத்தப்பட உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.