0 1 min 12 mths

ஆதி கிறிஸ்துவ சபையின் நாட்களில் இருந்தே, கிறிஸ்தவ மக்களை தூக்கம் தொந்தரவு செய்து வருகிறது. பவுலின் பிரசங்கத்தை கேட்டு தூங்கி விழுந்து ஒருவர் இறந்ததாக கூட (அப்போஸ்தலர்:20.9) வேதத்தில் காண்கிறோம். ஆவிக்குரிய தூக்கம் ஒருபுறம் இருக்க, சரீரத்திலும் தூங்குவது இன்னும் பெரிய பிரச்சனையாக மாறுகிறது.

தேவாலயத்திற்கு நாம் தூங்குவதற்காகவா செல்கிறோம்? என்ற ஒரே கேள்வியில், “இல்லை” என்ற பதில் நமக்கு கிடைத்துவிடுகிறது. இந்நிலையில் தேவாலயத்தில் நமக்கு தொல்லை தரும் தூக்கத்தை எப்படி எதிர்கொள்வது?

அனுபவித்தது:

எனக்கு வெளியூரில் வேலை கிடைத்த போது, அங்கு நைட்ஷிட் பணியில் அமர்த்தப்பட்டேன். சனிக்கிழமை நள்ளிரவு வரை வேலை செய்துவிட்டு, தூக்கமின்றி ஞாயிற்றுக்கிழமை ஆராதனை செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மற்ற நாட்களில் காலையில் தூங்கும் பழக்கத்தை கொண்டிருந்ததால், ஞாயிறு ஆராதனைக்கு சென்றாலும் தூக்கத்திலேயே கழிந்தது. இதனால் ஆவிக்குரிய வாழ்க்கையில் மிகவும் பின்வாங்க தொடங்கினேன். ஒரு கட்டத்தில் மனதில் மிகவும் பாரத்தோடு ஞாயிறு ஆராதனைக்கு செல்வதை தவிர்த்துவிடலாமா என்று கூட யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

ஆனால் என்னை மீண்டும் நிலைநிறுத்த விரும்பிய தேவன், ஒரு கிறிஸ்தவ நண்பரின் ஆலோசனையின் மூலம் அந்த ஆவிக்குரிய பதற்றத்தில் இருந்து மீட்கப்பட்டேன். அதன்பிறகு தேவன் உணர்த்திய சில காரியங்கள் மூலம், ஆராதனையில் இன்று வரை தூங்காமல் இருக்க தேவன் எனக்கு உதவி செய்கிறார். அவை நம் வாசகர்களுக்கும் பயன்படும் என்று நம்புகிறேன்.

ஆராதனையில் தூக்கத்தை தவிர்க்க சில யோசனைகள்:

1. சனிக்கிழமை நைட்ஷிப் செல்ல வேணடியதாக இருந்தால், அன்று பகல் நேரத்தில் சற்று அதிக நேரம் தூங்கி ஓய்வெடுக்க வேண்டும். இதனால் உடல் களைப்பு நீங்கும். இதற்காக சனிக்கிழமைகளில் துணி துவைப்பு, பொருள் வாங்க கடைகளுக்கு சென்று அலைவது, கடினமான வேலைகளை செய்வது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

2. பொதுவாக சனிக்கிழமைகளில் தான் அதிகமான பாவ எண்ணங்கள், சிந்தனைகள், யோசனைகள் வரும். ஏனெனில் இதன்மூலம் அடுத்த நாள் ஆராதனையில் பிசாசு, உங்களை எளிதில் வீழ்த்த முடியும். எனவே சனிக்கிழமைகளில் கிடைக்கும் நேரங்களில் நன்றாக ஜெபிக்க வேண்டும்.

3. அந்த வாரத்தில் நமக்குள் வந்துள்ள குறைகள், குற்றங்களை தேவ சமூகத்தில் அறிக்கையிட்டு, சனிக்கிழமைகளில் ஒரு ஆவிக்குரிய சுத்திகரிப்பை பெற்று கொள்ள வேண்டும்.

4. தூக்கத்தை அளிக்கும் பிசாசின் வல்லமைகளை எதிர்த்து, ஆவியில் நிறைந்து ஜெபிக்க வேண்டும். ஏனெனில் நாம் என்ன தான் உடலில் களைப்பின்றி போனாலும், பிசாசு நம் ஆவியில் சோர்ந்து போக செய்துவிடக் கூடாது.

5. ஆராதனைக்கு விருப்பமின்றி செல்லும் பழக்கத்தை தவிர்த்து, தேவ சமூகத்திற்கு செல்கிறோம், இன்று தேவன் நமக்கு ஒரு பெரிய ஆசீர்வாதத்தை வைத்திருப்பார் என்ற விசுவாசத்துடனும், விருப்பத்துடனும் செல்ல வேண்டும்.

6. பாட்டு பாடும் நேரத்தில் தூக்கம் வந்தால், கைகளை தட்டி உற்சாகத்துடனே பாடுங்கள். மேலும் பாட்டின் வரிகளை புரிந்து கொண்டு பாடலாம்.

7. ஆராதனையின் பிரசங்க நேரத்தில் தூக்கம் வருவதாக இருந்தால், பிரசங்கத்தை அப்படியே ஒரு நோட்டில் எழுதி விடுங்கள். இதன்மூலம் நமது கவனமும் சிதறாது. அதேபோல அந்த நோட்டை திரும்ப பார்க்கும் போது, பிரசங்கத்தின் முக்கிய பகுதிகள் நமக்கு நினைவுக்கு வரவும் எளிதாக இருக்கும்.

8. ஆராதனையின் துவக்கம் முதல் முடிவு வரையுள்ள எல்லா பகுதிகளையும் விருப்பத்தோடு கவனியுங்கள். பக்கத்தில் உள்ளவர்கள் செய்யும் காரியங்களையும், வேறு யாராவது தூங்கினாலோ கூட கவனிக்காதீர்கள். கவனத்தை சிதறவிட்டால் கூட, நமக்கு தூக்கம் வரலாம்.

9. ஆராதனை நேரத்தில் அலுவலகம், வீடு, வியாபாரம், நண்பர்கள் என்ற மற்ற காரியங்களை குறித்து யோசிக்காதீர்கள். உங்களை முழுமையாக தேவனுக்கு ஒப்புக் கொடுத்து, முழு இதயத்தோடு தேவனை ஆராதனை செய்யுங்கள்.

மேற்கூறிய காரியங்களை பின்பற்றி, ஞாயிற்றுக் கிழமை ஆராதனைகளில் தூங்குவதை தவிர்க்க, தேவன் எனக்கு உதவி செய்தார். மேலும் மற்ற பலருக்கும் இதை கூறிய போது, அவர்களுக்கு பயனுள்ளதாகவும், பெரிய ஆசீர்வாதத்தையும் கொண்டு வந்தது. எனவே ஆராதனையில் தூக்கம் வந்து கஷ்டப்படும் யாராக இருந்ததாலும் இந்த குறிப்புகள் பயன்படும் என்று நம்புகிறேன். உங்கள் அனுபவங்களை கமெண்டில் கூறுங்கள்!

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *