1 1 min 1 mth

மனிதக் குலத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டி என்று ஒருநாள் யோர்தான் ஆற்றின் ஓரத்தில் யோவான் ஸ்நானகன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இயேசு, அப்படியே பாவிகளுக்காக மரித்தார். இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள், புனித வெள்ளி என்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

புனித வெள்ளி, ஈஸ்டர் போன்ற கிறிஸ்தவ பண்டிகைகளைக் கொண்டாடலாமா? என்ற கேள்வி, இன்று கிறிஸ்தவ போதகர்கள் இடையே ஒரு பேச்சு பொருளாக மாறியுள்ளது. ஆனால் அதைக் குறித்து சிந்திப்பதாலோ, வாக்குவாதம் செய்வதாலோ, நமக்கு எந்தவித ஆவிக்குரிய வளர்ச்சியும் உண்டாகாது என்பது தான் உண்மை.

இயேசுவின் சிலுவை மரணத்தைக் குறித்து தியானித்தால், தேவ அன்பால் நம் இதயம் நிரம்பும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது, சூரியன் பல மணிநேரங்கள் இருண்டது (மத்தேயு:27.45), தேவாலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழாக இரண்டாகக் கிழிந்தது.

பூமி அதிர்ச்சி, கன்மலைகள் பிளப்பு (மத்தேயு:27.51), கல்லறைகள் திறக்கப்பட்டு, மரித்தோர் பலரும் வெளிப்பட்டது (மத்தேயு:27.52) போன்ற பல சம்பவங்கள் உலகில் நிகழ்ந்ததாக வேதம் கூறுகிறது. ஆனால் வேதத்தில் குறிப்பிடாத வேறு பல காரியங்களும் நடந்துள்ளன. அதில் ஒன்றைக் குறித்து இந்தச் செய்தியில் காண்போம்.

சிந்தித்தது:

உலகை ஆண்ட பல பெரிய சாம்ராஜ்ஜியங்களில் ரோமப் பேரரசும் ஒன்று. அந்தக் காலத்தில் தான் இயேசு இந்த உலகிற்கு மனிதனாக வந்தார். ரோமர்களின் ஆட்சியில் மன்னிக்க முடியாத குற்றவாளிகளுக்கு மட்டுமே சிலுவை மரணம் என்ற கொடூரமான தண்டனை அளிக்கப்பட்டது.

பொதுவாகச் சிலுவை சுமந்து சென்று, அதில் மரிப்பவர்களைச் சபிக்கப்பட்டவர்களாக ரோமர்கள் கருதினர் என்பதை கலாத்தியர்:3.13ல் காணலாம். அந்தச் சபிக்கப்பட்ட நிலையைத் தான், இயேசு ஏற்றுக் கொண்டார்.

அன்றைய காலத்தில் இருந்ததிலேயே கொடூரமான மரணம் அது தான். மேலும் சிலுவையில் அறையப்படுபவர்கள், அவ்வளவு எளிதில் சாகமாட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் உயிரை விடுவார்கள். சிலுவை அறையப்பட்ட பல மணிநேரத்திற்குப் பிறகு கூட, சிலர் உயிரோடு இருப்பார்கள்.

அப்படிப்பட்டவர்களின் கை, கால்களை முறித்து முழு இரத்தத்தையும் சொட்டு சொட்டாக சொரிய விட்டு, கொல்லுவது தான் ரோமர்களின் வழக்கம். ஆனால் இயேசுவின் கை, கால்கள் உடைக்கப்படாத நிலையிலேயே இறந்த சம்பவம் அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக வேதம் (மாற்கு:15.44) கூறுகிறது.

ஆனால் இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட மற்றவர்களின் கை, கால் எலும்புகள் முறிக்கப்பட்டதாகக் (யோவான்:19.31-33) காண்கிறோம். ஏனெனில் இயேசுவின் எலும்புகள் முறிக்கப்படாது என்று ஏற்கனவே பல தீர்க்கதரிசனங்கள் உரைக்கப்பட்டு இருந்தன.

இயேசுவின் மரணத்திற்குப் பிறகும், ரோமர்களின் ஆட்சிக் காலத்தில் பலரும் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டனர். இயேசுவின் சீஷராகிய பேதுரு கூட, சிலுவையில் தலைகீழாக அறையப்பட்டு கொல்லப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

இன்று சிலுவையில் அறையும் தண்டனைக் கொடுக்கும் பழக்கம், உலகில் எந்த நாட்டிலும் இல்லை. ஆனால் சிலுவைக்கு உலகம் முழுவதும் பெரும் மதிப்பு உள்ளது. கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி, பொதுவாகச் சிலுவை என்பது கிறிஸ்தவ மதமுடன் தொடர்புடையது என்று அனைவரும் அறிந்துள்ளனர்.

இயேசுவின் மரணத்திற்கு முன்பே, ஒவ்வொருவரும் தத்தம் சிலுவையை எடுத்துக் கொண்டு, என் பின்னே வர வேண்டும் என்று அவரே கூறியுள்ளதைக் (மத்தேயு:10.38, 16.24) காணலாம்.

இதை அடிப்படையாக வைத்து, இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் சிலுவையை, கழுத்தில் உள்ள மாலையிலும், கையில் உள்ள மோதிரத்திலும், தலையில் உள்ள தொப்பியிலும், அணியும் உடையில் அணிந்து கொள்கிறார்கள். மேலும் தேவாலயத்தின் கூரையில் இருந்து கல்லறையின் சுவர் வரை, சிலுவை பயன்படுத்தப்படுகிறது.

ஒரு காலத்தில் சாபத்திற்குரிய சின்னமாகக் கருதப்பட்டு, கொடூரமான மன்னிக்க முடியாத குற்றவாளிகளைத் தாங்கிய சிலுவை, இன்று பரிசுத்தச் சின்னமாக, தூய நிலையைக் காட்டுவதாக மாறியுள்ளது. இந்த மாற்றத்தின் பின்னணியில் இயேசுவின் தியாகம் இடம் பெறுகிறது. வெறும் குற்றவாளிகளை மட்டுமே தாங்கிய சிலுவையில், இயேசு ஏறிய போது, அது மாற்றம் பெற்றது.

மேற்கூறிய சிலுவையின் நிலையில் தான் நாமும் ஒரு காலத்தில் இருந்தோம். கொடூரமான பல பாவிகளைத் தாங்கியவர்களாக, எல்லாராலும் வெறுக்கப்பட்டவர்களாக, கேவலமாக எண்ணப்பட்டவர்களாக இருந்தோம்.

ஆனால் நம்மீது, நமக்குள் இயேசு வந்த போது, மேற்கூறிய நிலை மாறியது. சமுதாயத்தில் தள்ளப்பட்ட நாம், இன்று மேன்மையான நிலையில் உள்ளோம். குறைகளோடு இருந்த நமக்குள் இயேசு வந்த போது, நிறைவைக் கண்டோம்.

எனவே மற்றவர்களுக்கு நாம் கிறிஸ்தவர்கள் என்று காட்டுவதற்காக, சிலுவையை அணிந்து கொள்வதை விட, அந்த சிலுவையைப் போல சபிக்கப்பட்ட நிலையில் இருந்த நமது வாழ்க்கையில் இயேசு வந்த போது, நிகழ்ந்த மாற்றங்களை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறி, நம்மில் வாழும் இயேசுவின் வழிகளில் வாழ்ந்து காட்டுவதன் மூலம் சிறப்பான புனித வெள்ளியை ஆசரிக்க முடியும்.

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

One thought on “சிலுவையில் இயேசு செய்த ஒரு மாற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *