0 1 min 3 mths

ஆதாம்-ஏவாள் படைக்கப்பட்டு, அவர்கள் வாழ அளிக்கப்பட்ட ஏதேன் தோட்டத்தில் இருந்த ஒரு மரத்தில் தான் ஜீவ விருட்சம் இருந்ததாக ஆதியாகமத்தில் காண்கிறோம்.
நினைவு தெரிந்த நாளில் இருந்து நம்மில் பலரும் கேட்கும் இந்த ஜீவ விருட்சத்தை நேரில் பார்த்து நாம் சாப்பிட முடியுமா? என்ற கேள்வி நம்மில் பலருக்கும் இருக்கலாம். அதற்கு முதலில் ஜீவ விருட்சம் என்றால் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

கேட்டது:

பொதுவாக, ஆதாம்-ஏவாள் சம்பவத்தை கூறும் போது, பலரும் இரு கனிகளை தேவன் சாப்பிட வேண்டாம் என்று கூறியதாக குழப்பி கொள்வார்கள். பிள்ளைகளுக்கு அப்படி பலரும் கூறுவதை கேட்டு இருக்கிறேன். மேலும் நன்மை-தீமை அறியத்தக்க கனியை போல, ஜீவ விருட்சம் என்பது ஒரு வெறுக்கத்தக்க கனி என்று பேசுபவர்களும் இருக்கிறார்கள்.

உண்மையை கூறினால், மேற்கூறிய இரு கனிகளும் வெறுக்கத்தக்க கனிகள் அல்ல. தேவன் உண்டாக்கியது எல்லாம் நல்லது என்று கண்டார் என்று வாசிக்கிறோம். அப்படியென்றால், ஏதேன் தோட்டத்தில் இருந்த இந்த கனிகள் மட்டும் எப்படி மோசமானதாக மாறும்?

ஏதேன் தோட்டத்தின் நடுவில் நன்மை-தீமை அறியத்தக்க விருட்சம் மற்றும் ஜீவ விருட்சத்தை தரும் இரு மரங்களை தேவன் பூமியில் இருந்து முளைக்க செய்தார் என்று ஆதியாகமம்.2.9 வசனத்தில் காணலாம்.

நன்மை-தீமை அறியத்தக்க கனியை சாப்பிட்ட ஆதாம்-ஏவாள் மூலம் மனித குலமே நன்மை-தீமையை அறிந்து கொண்டது. அப்படியென்றால் ஜீவ விருட்சம் சாப்பிட்டிருந்தால் என்னாயிருக்கும்? என நாம் யோசிக்கலாம்.

ஜீவ விருட்சத்தை சாப்பிட்டால், மரணம் இல்லாத நிலை ஏற்படும் என்று தேவனே கூறுகிறார். அதனால் பாவம் செய்த மனிதன், அதே பாவத்தில் இருந்து மீட்க முடியாமல் சாகாத நிலையை அடைந்துவிட கூடாது என்பதால் தான் அந்த கனியை சாப்பிட விடாமல் தேவன் தடுக்கிறார்.

ஆதாம்-ஏவாள் ஜோடிக்கு மட்டுமின்றி, மனிதக் குலத்திற்கே ஜீவ விருட்சம் சாப்பிட தடை விதிக்கப்பட்டது. அதற்கு போகும் வழியை, கேரூபீன்கள் மற்றும் சுடரொளி பட்டயம் காவல் காத்து வருவதாக ஆதியாகமம்.3.24ல் காண்கிறோம்.

ஆனால், ஆதியாகமத்தில் மனிதன் சாப்பிட கூடாது என்று தடுக்கப்படும் ஜீவ விருட்சம், கடைசி புத்தகமான வெளிப்படுத்தின விஷேசம்.2.7 வசனத்தில் சாப்பிட கொடுப்பேன் என்று தேவன் கூறுகிறார். ஆனால் அதற்கு உலகம், மாமிசம், பிசாசு ஆகியவற்றை ஜெயிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது.

மேலும் வெளிப்படுத்தின விஷேசம்.22.14 வசனத்தில் தேவனுடைய கட்டளைகளின்படி செய்கிற பாக்கியவான்களுக்கு ஜீவ விருட்சத்தின் மேல் அதிகாரமும், வாசல்கள் வழியாக நகரத்திற்குள் பிரவேசிக்கவும் முடியும் என்று காண்கிறோம்.

சிந்தித்தது:

எனவே கிறிஸ்தவர்களாகிய நாம் பல வருடங்களாக கேட்கும் ஆதாம்-ஏவாள் சம்பவத்தில் வரும் ஜீவ விருட்சம் எப்படி இருக்குமோ? என்ற கற்பனையில் மூழ்க தேவையில்லை.

பரிசுத்த வேதாகமத்தில் அளிக்கப்பட்டுள்ள தேவனுடைய கட்டளைகளின்படி வாழ்ந்தாலே, அந்த ஜீவ விருட்சத்தின் கனியை நாமும் தேவ சமூகத்தில் சாப்பிட முடியும். மேலும் மரணம் இல்லாத தேவ நகரத்தில் நித்திய காலமாக வாழவும் முடியும்.

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *