0 1 min 1 yr

அவர்கள் அவரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தார்கள், அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. சங்கீதம்:34.5

ஜெபத்தின் மூலம் மறைமுகமான மாற்றங்களைத் தவிர, பலருக்கும் வெளிப்படையான மாற்றங்களைப் பெற்றதாக வேதத்தில் காண்கிறோம். அதிலும் ஒரு மனிதனின் முழுத் தன்மையையும் தெளிவாக காட்டும் கண்ணாடி என்று அழைக்கப்படும் “முகத்தில்”, சிலருக்கு மாற்றங்கள் ஏற்பட்டதாகவும், அதை உடன் இருந்தவர்கள் கண் கூடாக கண்டதாகவும் வேதம் கூறுகிறது.

ஆனால் மேற்கண்ட எல்லாருக்கும் ஒரே மாதிரியான சூழ்நிலையோ, அனுபவமோ இருக்கவில்லை என்பது நாம் கவனிக்க வேண்டியுள்ளது. எனவே வேதத்தில் செய்யப்பட்ட பலரது ஜெபத்தின் போது, அவர்களின் முகங்களில் ஏற்பட்ட மாற்றங்களைக் குறித்து ஆராய்ந்தால், நமது ஆவிக்குரிய வளர்ச்சிக்கு அது பெரும் உதவிகரமாக அமையும் என்று நம்புகிறோம். ஜெபத்தில் தங்களின் முகங்களை அடைந்த சிலரது பின்னணிகளைக் குறித்து ஒவ்வொன்றாக இந்த வேதப்பாடத்தில் காண்போம்.

1. காயீனின் முகம்:

பரிசுத்த வேதாகமத்தில் முதல் முதலாக தேவனுக்கு காணிக்கை செலுத்துதல் அல்லது தேவனை நோக்கிய ஜெபித்தல் என்ற சம்பவம் ஆதியாகமம் 4 ஆம் அதிகாரத்தில் காண முடிகிறது. தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட ஆதாம்-ஏவாளின் பிள்ளைகளான காயீனும், ஆபேலும் காணிக்கைகளைத் தேவனுக்குச் செலுத்துகிறார்கள்.

இதில் மூத்தவனான காயீனின் பலியைத் தேவன் அங்கீகரிக்கவில்லை. இளையவனான ஆபேலின் காணிக்கையைத் தேவன் அங்கீகரித்தார். காயீனின் காணிக்கைத் தேவனால் நிராகரிக்கப்பட்டதன் பின்னணி என்ன என்பதை ஆராய்ந்தால், அதற்கு பல காரணங்களைக் கூறலாம். ஆனால் அது நம்முடைய வேதப்பாடத்தின் சிந்தனையைத் திசைத் திருப்பிவிடும் என்பதால், அதைக் குறித்து பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் சிந்திப்போம்.

காயீனின் காணிக்கை நிராகரிக்கப்பட்டதால் அவனது முகம் வேறுபட்டது என்று ஆதியாகமம்: 31.5-ல் காண்கிறோம். தனது பலி அங்கீகரிக்கப்பட்ட போதும், ஆபேலின் முகத்தில் பெருமையோ, கர்வமோ ஏற்படவில்லை. இன்னும் சொல்லப் போனால், அவனுக்கு சந்தோஷம் மட்டுமே உண்டானது.

தனது காணிக்கை அங்கீகரிக்கப்படவில்லை என்ற வருத்தம் காயீனுக்குள் இருந்தாலும், தனது சகோதரன் ஆபேலின் காணிக்கை அங்கீகரிக்கப்பட்டது, அவனுக்கு பெரிய அவமானமாக தெரிந்தது. இன்றைய கிறிஸ்தவர்களில் பலரிடமும் மேற்கூறிய காயீனின் மனநிலை காண முடிகிறது. தங்களின் ஜெபத்தை மட்டும் தேவன் கேட்கவில்லை. தனக்கு மட்டும் பரிசுத்தாவியின் வல்லமை, அபிஷேகம் கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகிறார்கள்.

இந்நிலையில் மற்றவர்களின் ஜெபத்திற்கு தேவன் பதிலளிக்கும் போது, இந்த வருத்தம் மறைந்து, இந்தச் சூழ்நிலையைப் பெரிய அவமானமாக கருதுகிறார்கள். இதனால் ஜெபம் கேட்கப்பட்ட மற்றவர்களின் மீது மறைமுகமாக கோபமும் எரிச்சலும் உண்டாகிறது.

நம் ஜெபத்திற்கு தகுந்த பதில் கிடைக்கவில்லை என்ற நிலையில் இருந்து வளர்ந்து கொண்டே செல்வதைத் தடுத்து நிறுத்த, அவ்வப்போது தேவன் நமக்கு உணர்த்துவார். காயீனுக்கு எரிச்சல் ஏற்பட்டு, முகநாடி வேறுபட்டது ஏன்? என்று தேவன் கேட்பதை, ஆதியாகமம்:4.6 இல் காணலாம்.

அடுத்த வசனத்தில் நன்மையான காரியத்தைச் செய்தால் மேன்மை கிடைக்கும் என்றும், அதைச் செய்ய தவறினால் பாவம் வாசற்படியிலேயே படுத்திருக்கும் என்றும் தேவன் எச்சரிக்கை அளிக்கிறார். ஆனால் காயீன் தரப்பில் அதற்கு எந்தப் பதிலும் இல்லை. அப்படியென்றால், தேவனுடைய வார்த்தைகளுக்கு காயீன் அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறலாம்.

நமது தோல்வியின் நேரத்தில் மற்றவர்களின் மீது கோபமும் எரிச்சலும் வரக்கூடும். ஆனால் அந்த நேரத்திலும் பாவம் செய்யக் கூடாது என்ற தேவனின் எச்சரிப்பு வரும் போது விழிப்புடன் செயல்பட வேண்டும். இல்லாவிட்டால், தனது சொந்த சகோதரன் என்றும் பாராமல் கொலைச் செய்த காயீனைப் போல சாபத்திற்கு பாத்திரவான்களாக மாறி விடுவோம்.

தனது காணிக்கை அங்கீகரிக்கப்படாமல் போனதற்கான காரணத்தைக் குறித்து காயீன் யோசிக்க இல்லை. மேலும் அதை குறித்து தேவனின் கையால் படைக்கப்பட்ட தனது பெற்றோரிடமும் கேட்கவில்லை. மாறாக, எந்தப் பாவமும் அறியாத சகோதரன் மீது கோபம் கொள்கிறான்.

இதுபோல நமது ஜெபத்திற்கு பதில் கிடைக்காத நிலையில், அதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும். மற்றவர்களின் ஜெபங்களுக்கு பதில் கிடைத்ததை எண்ணி, பொறாமை கொள்ளவோ, எரிச்சல் அடையவோ நமது மனதை அனுமதிக்கக் கூடாது. ஏனெனில் அதன் முடிவு சாபத்தை மட்டுமே நமக்கு பெற்று தரும்.

மேலும் நம்மோடு இருப்பவர்கள் அல்லது ஜெபித்தவர்கள், நல்ல ஆசீர்வாதமான நிலையை அடையும் போது, அதில் சந்தோஷமடைய வேண்டுமே தவிர, எரிச்சல் அடையக் கூடாது. கிறிஸ்துவிற்குள் நமது சகோதர, சகோதரியாக இருக்கும், அப்படிப்பட்டவர்களின் மீதான கோபத்தையும் எரிச்சலையும் வளர்த்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

காயீனினை போல செயல்படும் வகையில் பிசாசு அளிக்கும் இது போன்ற ஆலோசனைகள், நமக்குள் வரும் போதே, அதை தேவ அன்பு என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி ஜெயித்துவிட வேண்டும். இல்லாவிட்டால், ஆவிக்குரிய வாழ்க்கையில் நமக்கு பெரியளவிலான தோல்வியை உண்டாக்கிவிடும் என்பதை நினைவில் கொள்வோம்.

சகோதர அன்புடன் தேவனுக்கு உகந்த காணிக்கையைச் செலுத்திய ஆபேல், தேவ சமூகத்தில் நீதிமானாகச் சென்று சேர்ந்தான். ஆனால் சொந்த சகோதரனின் ஆசீர்வாதத்தைக் கண்டு எரிச்சல் அடைந்து, முகநாடி வேறுபட்ட காயீனுக்கு சாபம் மட்டுமே கிடைத்தது.

எனவே நமது ஜெபத்திற்கான பதிலைப் பெற, முதலில் நம்மை தேவ சமூகத்தில் தகுதிப்படுத்திக் கொள்வோம். தேவனிடமிருந்து பதில் கிடைக்காவிட்டாலும், தேவ அன்பில் நிரம்பி மற்றவர்களோடு பழகும் பாணியை தொடருவோம். தேவ சமூகத்தில் மற்றவர்களின் வெற்றியைக் கண்டு, நமது முகநாடி மாறாமல் பாதுகாத்து கொள்வோம்.

அப்போது பிசாசின் எந்தத் திட்டமும் நம் வாழ்க்கையில் பலிக்காது என்பதோடு, நமது தவறான நடவடிக்கையின் மூலம் தேவனிடம் இருந்து சாபத்தைப் பெற்று கொள்வதையும் தவிர்க்கலாம்.

(பாகம் -2 தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *